சமையலறை

மணக்கும் நெல்லை! - மனோகரம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியும் அல்வாவும் பிரிக்க முடியாதவை. இருட்டுக் கடை அல்வா உலகப் புகழ்பெற்றது. அல்வா மட்டுமில்லாமல் நெல்லைச் சுவையைப் பறைசாற்றும் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் தின்பண்டங்களும் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்லம்மாள் நடராஜன்.

மனோகரம்

பச்சரிசி மாவு - 1 கப்

கடலை மாவு - அரை கப்

பாசிப் பருப்பு மாவு - அரை கப்

வெல்லம் - 1 கப்

ஏலப் பொடி, சுக்குப் பொடி - தலா 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

பாசிப் பருப்பை வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளளுங்கள். ஆறிய பின் மாவாக அரைத்துச் சலித்துக்கொள்ளுங்கள். இதைச் சலித்துவைத்துள்ள அரிசி மாவு, கடலை மாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், இரண்டு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்றாகச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ள வேண்டும். இதைச் சிறு உருண்டைகளாக்கித் தேன்குழல் அச்சிலிட்டுச் சூடான எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.

ஒரு கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கொதிக்கவையுங்கள். கெட்டிப்பாகு வந்தவுடன் (சிறிது தண்ணீரில் ஒரு சொட்டு விட்டால் முத்துப்பதம் வர வேண்டும்) சுக்குப் பொடி, ஏலப் பொடி சேர்த்துப் பொரித்துவைத்துள்ளவற்றைப் போட்டு நன்றாக உதிரும்வரை கிளறினால் சுவையான மனோகரம் தயார்.

SCROLL FOR NEXT