சமையலறை

தீபாவளி நல்விருந்து! - தினை அதிரசம்

ப்ரதிமா

தினை அரிசி -1 கப்

பாகு வெல்லம் - கால் கப்

நெய் - 2 டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

தினையைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு தண்ணீரை வடித்து மெல்லிய துணியில் பரப்பி, நிழலில் ஒரு மணி நேரம் உலர்த்துங்கள். தினையைக் கையால் பிடித்துப் பார்த்து கையில் ஒட்டாத பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து அதை மிக்ஸியிலோ மிஷினிலோ கொடுத்து அதிரச மாவு பதத்திற்கு அரைத்துச் சலித்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேரத்து அடுப்பில் வையுங்கள். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள். கொதிக்கும் பாகில் ஏலக்காய்ப் பொடியைச் சேருங்கள். கொதிக்கும் பாகை ஒரு சொட்டு எடுத்துச் சிறிது தண்ணீர்ல் விட்டால் அது கரையாமல் தேன்போல் நிற்க வேண்டும். அப்போது மாவைப் பாகினில் கொட்டிக் கிளற வேண்டும். மாவு வெந்து சுருண்டு வரும். அந்த நேரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டுக் கிளறி இறக்கிவைக்க வேண்டும். தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக் கூடாது.

இப்போது மாவை வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள். மாவு சூடு ஆறியதும் அதன் வாயை மெல்லிய பருத்தித் துணியால் கட்டிவைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து மிதமான தீயில் எண்ணெய் காய்ந்ததும் மாவிலிருந்து சிறிது எடுத்து வட்டமாகத் தட்டிப்போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT