ஓடிடி விமர்சனம்

YOLO: அன்பு, மன்னிப்பால் தன்னைத் தானே மீட்ட டூ லேயிங் | திரை தேவதைகள் 42

பாரதி ஆனந்த்

சமீபமாக என் மனதை அத்தனை அழகாக மீட்டிக் கொண்டிருக்கிறது புத்தரின் தத்துவங்கள். சோகம் சுமக்கும் நெஞ்சம் சுகத்தைத் தேடும்போது ஒரு சிலருக்கு இசை, வேறு சிலருக்கு பயணம், இன்னும் சிலருக்கு தத்துவங்கள் தேறுதலாக அமையும் என்று சொல்வார்கள். நான் புத்தரின் வாயிலாக அந்தத் தேறுதலை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதன் ருசி அலாதியாக இருக்கிறது.

புத்தக் கதையொன்றில் கழைக்கூத்தாடி ஒருவனும், அவனது சீடனும் பேசிக் கொள்ளும் வசனம் என் மனக் கண்ணை திறந்து வைத்தன.

“You take care of yourself, I will take care of myself. In this way, looking after ourselves, guarding ourselves, we will display our feats and safely come down from the bamboo pole.”

“நீ உன்னைப் பேணு, நான் என்னைப் பேணுகிறேன். இப்படித் தம்மைத் தாமே காத்துக் கொண்டு, நம் வித்தைகளைக் காட்டி பத்திரமாக மூங்கில் கழியிலிருந்து இறங்குவோம்.”

நாம் எல்லோருமே இந்த உலகில் கூத்தாடிகள் தான். அந்தரத்தில் நடக்கையில் எத்தனை அருமையாக வித்தை காட்டுகிறோம் என்பதில் தான் வாழ்தல் இருக்கிறது இல்லையா?

அது எப்படி! நாம் நமக்காக மட்டுமே வாழ்வதெல்லாம் ஒரு வாழ்தலா? அது வெறும் சுயநலம் என்று நீங்கள் ஆவேசம் கொள்ளலாம். அன்பரே, அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை தான். அதேவேளையில், அன்பென்பது அடுத்தவருக்கு அள்ளிக் கொடுக்கும் உணர்ச்சி மட்டுமல்ல, நமக்கு நாமே பருகிக் கொள்ள வேண்டிய அருமருந்தும் கூட. அதுவே தியானம். நம் மீது நாம் கொள்ளும் அன்பும், நமக்கு நாம் வழங்கும் மன்னிப்புமே தியானத்தின் தொடக்க நிலை.

இந்தப் பீடிகையெல்லாம் எந்த மார்க்கத்தையும் தூக்கிப் பிடிக்க இல்லை. நம் மீது நாம் ஏன் அன்பு செலுத்த வேண்டும், ஏன் நம்மை மன்னிக்க வேண்டும் என்பதைச் சொல்லவே இந்தத் துணை.

2024-ல் சீன மொழியில் வெளியான ‘YOLO’ காமெடி டிராமா படத்தின் நாயகி டூ லேயிங், இந்த அன்பையும் மன்னிப்பையும் தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறாள். வாருங்கள், அவளிடமிருந்து ஒரு நல்ல பாடம் கற்போம்.

நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்தப் படம் 2014-ல் வெளியான ‘100 Yen Love’ என்ற ஜப்பானியப் படத்தின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.

‘YOLO’ படத்தின் நாயகி டூ லேயிங்-க்கு வயது 30+. கல்லூரி முடித்தவுடன் சில காலம் வேலை செய்தவள். பின்னர் வாழ்வின் மீதான பிடிப்பை ஏன், எதற்கு என்று தெரியாமல் தொலைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொள்கிறாள். அப்பா, அம்மா, அக்கா மற்றும் அவளது மகள் என்று அவளுக்கொரு குடும்பம் இருக்கிறது. ஆனால், அதில் வயதில் மூத்தவர்கள் யாருமே டூ லேயிங் மீது தூய்மையான அன்பை செலுத்தவில்லை என்பது படம் ஆரம்பித்த சில விநாடிகளிலேயே நமக்குப் புரிந்துவிடுகிறது.

நம் குடும்பமே நம் உலகம் என்று நாம் அன்பையும், பொருளையும் கொட்டிக் கொடுக்கலாம். ஆனால் சிலருக்கான உறவுகள் மட்டும் அந்த அன்பையும், பொருளையும் வெறும் கடமை என்று சுருக்குவது உண்டு.

நம் அன்பின் மீதான பிறரின் மதிப்பு சுருங்கும்போது நம்மை நாமே சுருக்கிக் கொள்வதும் நிகழும்.

என் பார்வையில் டூ லேயிங் தன்னை சுருக்கிக் கொண்டதற்குக் காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். டூ லேயிங் ‘ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ என்பார்களே, அதுபோல் உணவை அரைத்துத் தள்ளுகிறாள். பீர் பானத்தை பாட்டில் கணக்கில் உள்ளே செலுத்துகிறாள். தன் உடல் மீது எந்த அக்கறையும் அவளுக்கு இல்லை. தன்னை மீட்பதாக யாரேனும் ஏதேனும் அக்கறைகளைத் தூக்கிக் கொண்டுவந்தால் புள்ளி வைத்ததுமே அதை அழித்துவிடுகிறாள். வாழ்தல் என்பது அவளுக்கு வெறுமனே உயிருடன் இருத்தல் என்றளவில் இருக்கிறது.

அவளுடைய உறவுக்கார ஜர்னலிஸ்ட் பெண், நான் வேலை செய்யும் சேனலின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால் உனக்கேற்ற வேலையை அவர்கள் வரையறுத்துத் தருவார்கள். உனக்கு வேலை கிடைக்கும். எனக்குப் பணி நிரந்தரமாகும் என்று டீல் பேசுகிறாள். எதுவுமே செய்யாமல் குடும்பத்துக்கு ஒரு சுமையாக லேயிங் இருப்பதாக அக்காள்காரி வசை மொழி பாடுகிறாள். “நான் இளமைக் காலத்தில் வருமானத்தை நோக்கிச் சென்றேன்; என் பிள்ளைகளை சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நானொரு தோற்றுப்போனவள்” என்று சுயபட்சாதாபம் கொள்கிறாள் தாய். உணவு, தேநீருக்காகக் கூட மாடி ஏறாத தந்தை கடையே கதி எனக் கிடக்கிறார்.

நம்மைச் சுற்றியிருக்கும் தட்டையான மனிதர்களால் எந்தக் கோணலானதையும் சரிசெய்துவிட முடியாது. அப்படியானவர்கள் குடும்பத்தினராக இருந்ததால் டூ லேயிங் வாழ்க்கை தட்டைக்குள் சிக்கிக் கொண்டு சுழற்சி போல் முடங்கிப் போயிற்று.

இப்படி எந்த சுவாரஸ்யமும் இல்லாத டூ லேயிங் வாழ்க்கையில் சில புயல்கள் வீசுகின்றன. ஒன்று அவளுடைய காதலன். தேங்கிக் கிடக்கும் அவளைத் துறந்து அவளுடைய தோழியை காதலிக்கிறான். அவளை திருமணம் செய்யவும் தயாராகிறான். அந்தத் திருமணத்துக்கு அவள் மனப்பெண் தோழியாக போய் நிற்கும் அளவுக்கு பொறுமைசாலியாக இருக்கிறாள் லேயிங். அடுத்ததாக, குடும்பமில்லை, குழந்தையில்லை, வாழ்க்கையில் பிடிப்புமில்லை, அதனால் வீட்டை எனக்குக் கொடுத்தால் என் மகளின் கல்விக்கு உதவும் என்று சொத்துச் சண்டை போடுகிறாள் சகோதரி.

உடல் பருமனால் காதலும், எதிர்காலம் இல்லாததால் சொத்தும் பறிபோன நிலையில் தான் டூ லேயிங் லேசாக அசைத்துப் பார்க்கப்படுகிறாள்.

துரோகங்களும் வலிகளுமே நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க உதவும் சிறந்த தராசு. மற்றவர்களின் பார்வையில் நாம் எங்கிருக்கிறோம், நம்மை நாம் மற்றவர்களுக்கு என்னவாகக் காட்டியிருக்கிறோம் என்பதை அதுதான் உணர்த்தும்.

ஒரு வழியாக வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் டூ லேயிங். தனக்கென ஒரு குடியிருப்பு. வாழ்வதற்கு ஒரு வேலை. ஆனால் அத்தனை வருடங்கள் முடங்கிக் கிடந்தவள் சோம்பேறியாகத் தான் இருப்பாள் என்று நாம் ஊகிக்கும்போது வேலையில் படு கில்லியாக சுழல்கிறாள்.

சில நேரங்களில் நாம் இலக்கற்று இருக்கலாம். நாம் தவறு செய்யலாம். அதிலிருந்து மீள பிறர் நிர்ணயிக்கும் கால வரம்பைக் கடக்கலாம். அப்போது நமக்குத் தேவையானது நம்மை கேள்வி கேட்காத இதயம். பெரும்பாலும் அப்படியான இதயம் நமது இதயமாக மட்டுமே இருக்க முடியும்.

வேலையில் சேர்ந்த பின்னர் டூலேயிங் வாழ்வில் அடுத்தடுத்த திருப்பங்கள் வருகின்றன. உணவகப் பணிக்கு இடையே பாக்சிங் ஜிம் கோச் ஹாவோ குன்-ஐ சந்திக்கிறாள்.

வலிகளாலும் துரோகங்களாலும் நொறுங்கிக் கிடக்கும் பெண் தன்னை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்று எண்ணுகிறாளோ அது மாதிரியான அன்பை சட்டென வாரி வழங்கிவிடுவாள்.

ஹாவோ மீது லேயிங் கொட்டும் அன்பு அத்தகையதே. அவனுள் ஒரு பாக்சிங் சாம்பியனை அவள் காண்கிறாள். அவனை ஊக்குவிக்கிறாள். அவனுக்காக அவளுடைய சேமிப்புகளைக் கரைக்கிறாள். அவன் மையலுக்கு சம்மதிக்கிறாள். ஆனால் அவனோ தன்னம்பிக்கை இல்லாத கோழை. அவ்வப்போது கிடைக்கும் சிறு லாபங்களுக்குக் கூட தனது கனவுகளை அடகுவைக்கத் தயங்காதவன். தன் மீது அன்பை செலுத்தியவளுக்காக தோள் கொடுக்காதவன்.

‘லேயிங் என் காதலி அல்ல என்னுடைய பாக்ஸிங் இன்டர்ன்’ என்று வேறு ஒருவனிடம் பேசும்போதுதான், தன்னை மற்றவர்களுக்கு என்னவாகக் காட்டியிருக்கிறோம் என்பது லேயிங்குக்கு புரிகிறது.

வாழ்க்கை நம்மை ஒரு காலச் சுழலில் சிக்க வைத்திருப்பது போல் சில நேரங்களில் தோன்றும். உண்மையில் அது, ஒரு தவற்றிலிருந்து நாம் நம்மைத் திருத்திக் கொள்ளாதபோது வாழ்க்கை திரும்பத் திரும்பக் கொடுக்கும் பாடமே.

பாடம் கற்றுக் கொண்ட டூ லேயிங் தன் வலிகளை, துயர்களை மடை மாற்றுவாள். ‘உன் வாழ்க்கையில் நீ ஒருமுறையாவது வெற்றி பெற்றிருக்கிறாயா?’ என்ற பாக்ஸிங் போட்டிக்கான அழைப்பிதழ் வாசகம் அவள் உள்ளக் குமுறல்களை முன்னேற்றத்துக்கான ஊக்க சக்தியாக மடைமாற்றும்.

கடுமையான உடற்பயிற்சிகள் தொடர்ச்சியான முயற்சிகள் என்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் உழைப்பைச் செலுத்தி 50 கிலோ எடையைக் குறைத்து ஃபெதர் வெயிட் பிரிவில் போட்டியிடத் தகுதி பெறுவாள் டூ லேயிங்.

அந்த வகையில் டூ லேயிங் தன்னையே மீட்டெடுக்கிறாள். அவள் கடந்து வந்த பாதை, நம்பிக்கையின் பேரூற்று.

அதன் பின்னர் அவள் குடும்பத்தையும், காதலனையும் எதிர்கொள்வாள். அந்த இரண்டு சந்திப்புகளுமே அத்தனை ஆழமாக, அழுத்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

தந்தையுடனான சந்திப்பின் போது, ‘நீ ஒரு புதிய மனிதியாய் உருமாறி வந்திருக்கிறாய்’ என்று சிலாகிப்பார். கூடவே, உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை வீட்டுக்கு வருவாயா என்று கேட்பார்.

நம்மில் மாற்றம் ஏற்படும்போது நம்மைச் சுற்றியிருப்போரும் மாறியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதை எதிர்பார்ப்பதில் அர்த்தமும் இல்லை.

லேயிங் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் தன்னை தகவமைத்தவளாக மிளிர்வாள்.

“அப்பா உங்களிடம் ரெண்டு ஆப்பிள்கள் உள்ளன. ஒன்று சிறியது; இன்னொன்று பெரியது. உங்கள் நண்பர் கேட்டால் நீங்கள் எந்த ஆப்பிளைத் தருவீர்கள்?” எனக் கேட்க தந்தை பெரியது என்பார். லேயிங் நான் என்னிடமிருந்து இரண்டு ஆப்பிள்களையும் கொடுத்து வந்தேன் என்பாள். இனிமேல் யாரேனும் கேட்டால் நிலைமையைப் பொறுத்து யோசிப்பேன் என்றும் சொல்வாள்.

அனைவரிடத்திலும் அன்பாக இருக்கலாம். ஆனால் எவருமே நம் அன்பை துட்சமென மதிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை லேயிங் கற்றிருப்பாள்.

தன்னைவிட்டு ஓடிப்போன காதலனை மீண்டும் சந்திப்பாள். அவன் அவளைக் காண இயலாமல் ஓட அவனைத் துரத்திப் பிடிப்பாள் லேயிங்.

பாக்ஸிங் கனவுகளை உதறிவிட்டு கட்டிட வேலை செய்து கொண்டிருப்பான் ஹாவோ. நான் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்கிறேன் நீ வா என்று அழைக்க, “கனவுகளை சுமந்திருப்பவர்களை நான் வெறுக்கிறேன். கனவுகள் பலிப்பதில்லை” என்று எதிர்மறை எண்ணங்களை விதைப்பான். ஆனால், லேயிங் முன்புபோல் அல்ல. அவளை எதுவும் தடுக்காது. எதுவும் சுருக்காது.

நீ ஏன் கலந்து கொள்கிறாய் என்ற கேள்விக்கு, “எனக்கு பாக்ஸிங் பிடிக்கும். எனக்கு ஒருமுறை வெற்றி பெற வேண்டும். பாக்ஸிங்கில் மட்டும்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள் கடைசியில் கட்டியணைத்துக் கொள்வார்கள்” என்பாள் லேயிங்.

வெற்றி என்பதற்கு இந்த உலகம் ஆயிரம் இலக்குகளை வகுத்திருக்கலாம். ஆனால், எனக்கு இதுதான் தேவை என்று ஒருவர் முடிவு செய்வதும். அதில் உறுதியாக இருப்பதும். அது கிடைத்தாலும் கிடைகாவிட்டாலும் என் வாழ்க்கை நின்றுவிடாது என்று முன்னேறிச் செல்வதும்தான் வெற்றி.

பாக்சிங் பற்றியும், வெற்றி தோல்வி பற்றியும் ஹாவோ பேசிசென்றதும் எந்தச் சலனமுமின்றி காற்றைக் கிழிக்கும் குத்துகளை செலுத்துவாள் லேயிங்.

ஆரம்பத்தில் தன் உடல் மீது அக்கறையற்றவள், கலோரிக்களைக் கணக்கிட்ட உண்பவளாகியிருப்பாள். தன் உடல் மீதும் உள்ளத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவளாக மாறிய பின்னர் தான் அவளால் அவளுடைய லட்சியத்தை நோக்கி பயணப்படவே முடிந்தது.

நம்மை நாம் பேணுவதன் அவசியத்தை ஆழமாக அழுத்தமாகச் சொல்லியிருப்பாள் டூ லேயிங்.

இறுதிக் காட்சிகளில் பாக்ஸிங் ரிங்-குக்குள் லேயிங் செல்வதற்கு முன்னர் கோச் அவளிடம் கைகளைக் காட்டி குத்து என்பார். லேயிங் குத்தியவுடன், “நீ போட்டிக்குத் தயார். முன்னேறிச் செல்” என்பார்.

அதன் பின்னர் பாக்ஸிங் கோதாவில் 4 முனைகளிலும் தூக்கி வீசப்படுவாள் லேயிங். எதிரியை வீழ்த்த கடைசி வாய்ப்பைக் கூட விட்டுவைக்காமல் முயற்சி செய்வாள் லேயிங்.

தோல்வி முகத்தில் அவள் தரையில் வீழ்ந்து கிடைக்கும்போது ரெஃப்ரீ 1 முதல் 8 வரை எண்ணுவதற்குள் அவள் கடந்து வந்த பாதை அத்தனையும் அவள் கண் வாயிலாக நம் முன் வந்து செல்லும். அப்போதுதான் லேயிங் தன்னை எவ்வளவு அதிகமாக மன்னித்து தன்னை மீட்டெடுத்திருக்கிறாள் என்பது நமக்குப் புலப்படும்.

YOLO - என்பதற்கு You Only Live Once என்பதே அர்த்தம். அதாவது நாம் ஒருமுறை தான் வாழப்போகிறோம். அந்த வாழ்வு என்பது காலத்தைத் தள்ளுவது அல்ல. நாம் நமக்காக வாழ்ந்து பார்ப்பது.

அதனால்தான் பாக்ஸிங் தோல்வி லேயிங்கை முடக்கிவிடவில்லை. அதனால் தான் காதல் தோல்வி அவளை நடுங்கவைக்கவில்லை.

லேயிங்கிடம் மீண்டும் வந்து நிற்கும் ஹாவோ, “நீ நன்றாக விளையாடினாய். கிட்டத்தட்ட வெற்றி பெற்றாய். வா உனக்குப் பிடித்த புல் ஃப்ராக் சாப்பிடலாம்” என்பான்.

முன்பெல்லாம் அவனுடன் உணவருந்துவதும், மது அருந்துவதும் அவளது உச்சபட்ச மகிழ்ச்சி. அவள் தான் இப்போது முன்போல் இல்லையே!

தன்னைத் தானே மீட்டெடுத்த லேயிங், ஹாவோவின் அழைப்பை துல்லியமாக நிராகரித்து பாக்ஸிங் பயிற்சிக்காக ஓட ஆரம்பிப்பாள். சற்றே நகர்ந்தவுடன் சிறு தயக்கத்துடன் நிற்கப் பார்ப்பாள். ஆனால் மீண்டும் காற்றை கிழிக்கும் குத்துகளைச் செலுத்தி முன்னேறிச் செல்வாள்.

நம் வாழ்வின் உண்மையான வெற்றி நம்மை நாமே முன்னே செலுத்துவதில் தான் இருக்கிறது. டூ லேயிங்கின் வெற்றி அவளைப் போன்ற பெண்களைத் தொற்றிக் கொள்ளட்டும்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT