ஓடிடி விமர்சனம்

Three of Us: ஷைலஜாவின் மறதியும் நினைவுகளும் கடத்தும் அனுபவம் | திரை தேவதைகள் 07

பாரதி ஆனந்த்

வாழ்தல் என்றால் என்ன?

ஏஐ உலகத்தில் இப்படியொரு கேள்வியை நம்மிடமே நாம் கேட்டுக் கொண்டால், வயது பேதமின்றி நம்மில் பெரும்பாலானோர் கண் முன் பட்டியலாவது தனிப்பட்ட அல்லது பணி நிமித்த இலக்குகளை அடைதலாக இருக்கும்.

நம் நிகழ்காலம் முழுவதும், எப்படி நம் இலக்குகளுக்காக நேரத்தை நேர்த்தியாக இன்வெஸ்ட் செய்யலாம் என்ற திட்டமிடலிலும் செயல்படுத்துதலிலும் கழியும்.

‘முன்னேறிச் செல்’, ‘கடந்து செல்’ என்பதுதான் நமக்கான மிகப் பெரிய ஊக்குவிப்பு வார்த்தைகளாகப் போதிக்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் மூழ்கி அதைத் தாண்ட மறுப்பது அபத்தமென்றால், கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தல் கூட ‘கன்சர்வேடிவ் மைண்ட்செட்’ என்று நம்பவைக்கப்படுவது குற்றம் என்று கொள்ளலாம் தானே!

பழைய நினைவுகளைப் பற்றி பேசினாலே பெரும்பாலும் ‘பூமர்’ என்று அடைப்புக்குறிக்குள் தள்ளிவிடுகிறது இச்சமூகம்.

இதற்கிடையில் பரபரப்பான நகரத்தில், வாழ்தலுக்காக நாம் ஏற்கும் பரபரப்பான பணிகளுக்கு இடையே, வாழ்க்கையின் கடந்த காலத்தை நினைப்பதே வழக்கொழிந்துவரும் காலத்தில், மறதி நோயால் (Dementia) பாதிக்கப்பட்டு, அன்றாடப் பணிகளைச் செய்வதையே நோட் புக்-கில் குறித்துக் கொண்டு இயங்கும் ஷைலாஜாவின் நினைவுகளுக்கும், அவளது மறதி நோய்க்கும் இடையேயான போராட்டத்தை தத்துவார்த்தமாக கூறியிருக்கும் படம்தான், இந்தியில் 2022-ம் ஆண்டு வெளியான ‘Three of Us’.

ஷைலஜா தேசாய் கதாபாத்திரத்தில் ஷெஃபாலி ஷா, பிரதீப் காமத் ஆக ஜெய்தீப் அஹ்லாவத், தீபங்கர் தேசாயாக ஸ்வனந்த் கிர்கிரே நடிப்பில் வெளியான இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

          

மும்பையில் கணவருடன் வசிக்கும் ஷைலஜா தேசாய், தனது மறதி நோய் தீவிரமடைவதற்குள், தனது இளம் வயதில் தான் வசித்த கொங்கன் கடற்கரையின் வெங்குர்லா (Vengurla ) என்ற குறு நகரத்துக்கு ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும் என விரும்புகிறாள். மனைவியை மறதிநோய் வேகமாகவே வசப்படுத்துவதை அறிந்துகொண்ட கணவர் திபாங்கரும் அதற்கு இசைவு தெரிவிக்கிறார். வெங்குர்லா சென்றது முதல் ஷைலஜாவின் தேடல் தனது பள்ளி நண்பனான பிரதீப் காமத்தை நோக்கியே இருக்கிறது. பரபரப்பில்லாத குட்டி நகரத்தில் ஒரு சில மணி நேரங்களிலேயே பிரதீப் காமத்தை கண்டடைகிறாள் ஷைலஜா.

அங்கிருந்து ஷைலஜா தன்னைத் தேடும் படலத்தை தொடங்குகிறாள். அவளுக்கு உதவியாக ஷைலஜாவின் கணவர் திபாங்கர், நண்பர் பிரதீப் சேர்ந்து பயணப்படுகின்றனர். இவர்களுடன் அதிகக் காட்சிகளில் இடம்பெறாவிட்டாலும் கூட, கணவர் பிரதீப்புக்கு தனது முழு அனுமதியைத் தந்து நிஜத்தில் அரிதாகக் காணக்கூடிய இப்படியான மனமுதிர்ச்சி கொண்ட பெண்களின் உருவகமாக மிளிர்கிறார் சரிகா.

பழைய நினைவுகளை தேடிக் கண்டடைவதும், அறியாமல் நேர்ந்த தவறுகளுக்காக கொண்ட குற்ற உணர்வுகளில் இருந்து விடுபடுவதும், தவறான முடிவுகளுக்காக மன்னிப்பு கோருதலும்... மொத்தத்தில் நவீன கால வாழ்தல் சுமத்திய நெருக்கடிகளில் இருந்து விடுபடுதலுமே ‘த்ரீ ஆஃப் அஸ்’.

இதை ஒரு கவித்துவமான படம் எனலாம். காட்சிகள் படமாக்கப்பட்ட ‘கலர் கிரேடிங்’கும், காட்சிகள் நகரும் வேகமும், நாம் நம் வாழ்வின் இனிமையான நினைவுகளை நம் மனதில் ஓட்டிப்பார்க்கும்போது நகரும் வேகத்தை ஒத்ததாகவும், அப்போது நம் எண்ணங்களில் விரியும் வண்ணங்களை ஒத்ததாகவும் இருப்பதுபோல் என்னளவில் உணர்ந்தேன். ரசனைகள் மாறுபடலாம். இனி நாம் ஷைலாஜாவைப் பற்றி விரிவாகப் பேசுவோம்.

மும்பையில் ஒரு குடும்ப நல நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரிகிறாள் ஷைலஜா. குன்றிய வெளிச்சத்தில் வீட்டு வேலைகளை செய்துகொண்டு அறிமுகமாகிறாள் ஷைலஜா. ஒரு பாக்கெட் நோட் புக்கில் தனது பணிகளை லிஸ்ட் செய்து, முடித்தவற்றை டிக் செய்வதைக் காணும்போதே அவளுக்கு நினைவு நிமித்தமாக பிரச்சினைகள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து அலுவலகக் கடைசி நாள் பணியில், பிரிவு உபச்சார விழாவை அதற்கான மிகை உணர்வு ஏதுமில்லாமல் கடத்தல் என்ற ஷைலஜாவின் அறிமுகப் படலங்கள் ரத்தினச் சுருக்கமாக இருக்கின்றன.

திபாங்கர் நண்பர் வீட்டில் நடக்கும் கெட் டூ கெதரில், “இதுநாள் வரை நீ எல்லோரையும் நன்றாக கவனித்துக் கொண்டாய். இனி நீ உன்னையே நன்றாக கவனித்துக் கொள்” என்று தோழி ஒருவர் அறிவுரை கூறுவார். அந்தக் காட்சி கடத்தும் செய்தி இதுதான்...

இந்தியச் சமூகத்தில், திருமணமான பெண்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதை மறத்தல் என்பது அனுமதிக்கப்பட்ட டெமன்ஷியாவாக இருக்கிறது.

அதுநாள் வரை தன் பால்ய கால நினைவலைகளில் உள்ள ‘வெங்குர்லா’ டவுன் பற்றி கணவரிடம் பேசிராத ஷைலஜா ‘அங்கு செல்ல வேண்டும், ஒரு வாரம் விடுப்பு எடுங்கள்’ என்று அந்த இரவில் கேட்பார்.

வெங்குர்லா படலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, ஷைலஜாவின் மறதி நோய் தாக்கத்தை அத்தகையோரை கையாள்பவர்களுக்கு அச்சத்தைக் கடத்தாத வகையில் கவனமாக கையாண்டு சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

நகரத்து ஆர்ப்பாட்டங்கள் இல்லாது, சுத்தமாக, இயற்கையின் அழகை சுமந்து நிற்கிறது வெங்குர்லா டவுன். பள்ளித் தோழியால் அடையாளம் காணப்பட்டு அவள் வீட்டுக்குச் செல்லும் ஷைலஜா அங்கே உள்ள பழைய மங்கலான புகைப்படத்திலும் பிரதீப்பை சரியாகக் கண்டுகொள்கிறாள்.

பிரதீப் - ஷைலஜா முதல் சந்திப்பின் சில நொடிகளை மவுனம் ஸ்வீகரித்துக் கொள்கிறது. கேன்டீனில், அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து ஃபோன் பேசச் செல்லும் திபாங்கர் அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தன்னை மீறிப் பீறிடும் பொறாமையைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஃபோனுடன் புறப்படுவார் திபாங்கர். அவரின் ‘பெருந்தன்மை’ கருணையில் பேச ஆரம்பிக்கும் ஷைலஜா - பிரதீப் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

தானொரு விவாகரத்து பிரிவில் வேலை செய்வதாகச் சொல்லும் ஷைலஜா, விவாகரத்து கோரும் தம்பதிகள் உண்மையில் 4, 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதற்கான ஒத்திகையை மனதளவில் பார்த்துவிட்டுத்தான் வருகிறார்கள் என்று சொல்லி திருமண பந்தங்களின் தற்கால நிலையைப் பற்றி பேசுவாள்.

முதல் சந்திப்புக்குப் பின் வெங்குர்லாவின் கோயில், ஷைலஜா குழந்தைப் பருவத்தில் வசித்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார் பிரதீப். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நினைவுக்குக் கொண்டு வந்து விசாரிப்பாள் ஷைலஜா. ஆனால் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கேணியைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நிற்பாள். அது அவள் தூக்கி வளர்த்த குற்ற உணர்வின் சாட்சி. பிந்தைய காட்சிகளில் அந்த பாரமிகு துயரத்தை ஷைலஜா இறக்கி வைப்பது தன் நினைவுகள் மறக்கும் முன் ஒரு சிறையிலிருந்து விடுபட்ட நிம்மதி பெறுவதற்கான பிரயத்தனமும், அதில் வாகை சூடுதலுமாக நமக்குக் காட்டப்படும்.

பள்ளிக்கூட வகுப்பறையில் ஒரு மினி ரீயூனியன் போல பிரதீப், கவுரி, ஷைலஜா உள்ளே நுழைய, ஷைலஜா தன் நினைவுகளை மீட்டெடுக்க சிரமப்பட்டு ஒவ்வொரு பெஞ்ச் வரிசையையும் கடப்பது நம்மை அவள் மீது இரக்கம் கொள்ள வைக்கும். இறுதியில் ஒரு பெஞ்சில் தங்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டதைக் கண்டு இது 7-ம் வகுப்புதான் என்று ஷைலஜா உறுதி செய்யும் காட்சி ஆரம்பகால டெமன்ஷியா நோயாளிகள் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் ஓர் ஆறுதல் சம்பவம்.

படம் நெடுகிலும் ஷைலஜா வெளிர் நிற, நெகிழ் தன்மை காட்டன் புடவைகளில் உலா வருவது கடந்த, நிகழ், எதிர்காலங்கள் மனிதர்கள் மீதும் சுமத்தும் கட்டுப்பாட்டுகளில் இருந்து விடுபட விரும்புபவள் தரித்துள்ள அடையாளக் குறியீடு போல் இருக்கும். அந்த ஆடைத் தேர்வுகளை ஷைலஜாவின் மனநிலையை பிரதிபலிப்பவை போல் எனக்குத் தோன்றிற்று!

அதன்பின்னர் வெங்குர்லாவின் நீல, அகலங்களை அங்குலம் அங்குலமாக சுற்றித் திரிகின்றனர் மூவரும். மூவரின் பார்வைகளில் கடத்தப்படும் அக்கறைகளும், பேசப்படாத வார்த்தைகளும் நமக்கு நிறைய அர்த்தங்களைக் கடத்திச் செல்லும்.

ஷைலஜா இறை நம்பிக்கை அற்றவள், பரதக் கலை மீது ஆர்வம் கொண்டவள், உயர் கல்வி நிறுவனங்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அஜானுபாகு பிம்பத்தின் மீது நம்பிக்கையற்றவளாக இருக்கிறாள். இத்தனை மெச்சூரிட்டிக்கு மத்தியிலும் ஷைலஜாவின் வெங்குர்லா நாட்களில் கலங்கமற்ற குழந்தைமையும், குழந்தைக்கே உரித்தான ஆர்வமிகுதியும் அவளின் பேச்சிலும், செயல்களிலும் வெளிப்படுகின்றன. அதை விவரிப்பதோடு பார்த்தால் தான் ஷைலஜாவை முழுமையாக உள்வாங்க முடியும்.

ஷைலஜா - பிரதீப் பிணைப்பு, திபாங்கருக்கு தனது அன்பின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஷைலஜாவின் பூரிப்பைப் பார்த்து, ‘நீ என்னுடன் இத்தனை மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாயா?’ என்று கேட்கும்போது, “நான் பால்ய கால ஷைலஜாவை தேடி வந்திருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அதனால் நான் உங்களுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தமில்லை” என்று சொல்லிவிட்டு அவள் உதிர்க்கும் நம் ஒவ்வொருவருக்கான வாக்கியம் இதுதான்...

“மகிழ்ச்சி என்பது வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு பரிசுப் பெட்டகத்தில் கிடைக்கும்!”

மேலும், “நான் இங்க வந்தது என்னைத் தேடி, அவள் இங்குதான் இருக்கிறாள், ஆனால் என் கைகளுக்குள் அகப்படாமல் நழுவுகிறாள், அவள் இதுவரை நீ பார்க்காத நான். ஒருவேளை நீ முதலில் அவளைக் கண்டுவிட்டால் பத்திரப்படுத்திக் கொள்” என்று அத்தனை அப்பாவித்தனத்தோடு சொல்லும் காட்சி உன்னதம்!

ஷைலஜாவின் தேடல் இயல்பானது, எளிமையானது. ஆனால் அது நம் காலத்தில் பூதாகரமாகத் தெரிகிறது. அவளது தேடல் குற்றமல்ல. ஆனால், ஓர் ஆண் தன் பால்ய காலத்தை, அதில் மலர்ந்த காதல்கள் உள்ளிட்டவற்றைச் தேடிச் சென்றால், அதை ‘ஆட்டோகிராஃப்’ பாணியில் கொண்டாடும் சமூகம், ஒரு பெண் தனது டீன் பருவத்தில் மலர்ந்த ஈர்ப்பைத் தேடி, நாடி வந்தாலும் கூட கேள்விக்குள்ளாக்கும். அதுதான் திபாங்கர் கேள்வியின் உட்பொருள்.

பிரதீப் - ஷைலஜா - திபாங்கர் முதல் சந்திப்பிலேயே, “உங்கள் நட்பு பற்றி ஷைலஜா என்னிடம் கூறியதில்லை” என்று திபாங்கர் சொல்ல, “குழந்தைப் பருவத்தில் எல்லோரும் எல்லோரிடம் நட்பாகத் தான் இருக்கிறார்கள்” என்று ஹைகூவாகப் பேசுவார் பிரதீப்.

ஷைலஜாவில் திடீர் வருகையை பிரதீப்பின் மனைவி சரிகா அணுகும் விதமும் அன்பின் உச்சம்.

‘அன்பு பொறாமை கொள்ளாது’ என்றொரு பைபிள் வசனம் உண்டு. சரிகா - ஷைலஜா உரையாடலில் அந்த வசனம் என் நினைவுக்கு வந்தது.

“பிரதீப்பை தேடி நான் திடீரென வந்தது உங்களுக்கு விசித்திரமாக இல்லையா?” என்று ஷைலஜா கேட்பாள், அதற்கு சரிகா, “விசித்திரம் தான். ஆனால் விரும்பத்தக்க விசித்திரம் (A nice odd)” என்பாள்.

பிரதீப் - சரிகாவின் திருமண பந்தம் அன்பினால், அது தந்த நம்பிக்கையினால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, தான் இதுநாள் வரை சந்தித்த விவகாரத்து வழக்குகள் தந்த கனத்தை இழந்ததுபோல் ஷைலஜா புன்னகைப்பாள்.

ஷைலஜா, தான் பரதம் பயின்ற பள்ளிக்குச் சென்று நடன ஆசிரியரோடு உரையாடுவது, நடனமாட முயற்சித்து, அது பாதியில் மறக்கும்போது ஒரு தூணின் பின்னாள் ஒளிந்து கொண்டு கலங்குவது நம்மையும் கலங்கச் செய்யும்.

‘த்ரீ ஆஃப் அஸ்’ படத்தின் உயிர்நாடியே அந்த ராட்டினம் காட்சிதான். வெங்குர்லாவின் பொருள்காட்சிக்கு ஷைலஜா, திபாங்கர், பிரதீப் அவரது இளைய மகள் சகிதம் வருவர்.

அவர்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதும் வந்திருப்பார்கள். ஆனால், அப்போது பிரதீப், ஷைலஜாவுக்கு பூக்களைத் தர, அதை சக மாணவர்கள் நகைப்புக்கு உள்ளாக்க, ராட்டினம் ஏறாமல் போயிருப்பார்கள். இந்த முறை, ராட்டினம் ஏற ஷைலஜா மட்டுமே ஆசைப்பட, துணைக்குச் செல்வார் பிரதீப்.

ராட்டினம் சுத்தும்போது ஷைலஜா - பிரதீப் குழந்தைகளாகவே மாறிவிடுவர். திடீரென ராட்டினம் நின்றுவிட, “நம் வாழ்க்கை முழுவதுமே அமைதி அல்லது பரபரப்பான ஓட்டத்தில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் கடக்கிறது. அண்மையில்தான் வாழ்க்கை என்னை, ‘வேகத்தை குறை’ என்றது. நானும் குறைத்துக் கொண்டேன். நான் இங்குதான் இருக்க விரும்பினேன்; இப்பொழுது இங்கு இருகிறேன்” என்பாள் ஷைலஜா.

நின்றுபோன ராட்டின உச்சியில், சொல்ல மறந்த அன்பு, கேட்கத் தவறிய மன்னிப்பு பறிமாறப்படும்.

“நான் உன்னிடம் 28 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், அதுதான் நம் கடைசி சந்திப்பு என்று எனக்குத் தெரியாது” என்பாள் ஷைலஜா.

“நானும் உன்னை திரும்பிப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. நீ இங்கு வந்ததில், என்னை நினைவில் வைத்திருந்ததில் மகிழ்ச்சி” என்று பிரதீப் கூற, “நீண்ட நாட்கள் இதை நான் நினைவில் வைத்திருக்க முடியாது” என்று இயலாமையை ஷைலஜா கூற, “வருந்தாதே, நான் நினைவில் வைத்திருப்பேன்” எனும்போது கண்ணீர் துளிகளை இருவருமே துடைத்துக் கொள்வர்.

‘முன்னமே வந்திருக்கலாமே’ என்று பிரதீப் ஏக்கமாக கேட்கையில், “இங்கு திரும்பிவர எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்பாள் ஷைலஜா.

ஒரு சராசரி இந்தியப் பெண்ணுக்கு தனக்கான நேரம் கிடைப்பதில்லைதான். நேரத்தை உருவாக்கிக் கொள்ள சில பெண்கள் தற்போது முற்படுகிறார்கள். அவர்களை நோக்கி விமர்சன விரல்களை நீட்டாமல், கைகோத்தோ, கையசைத்தோ நட்பு பாராட்டும் சமூகம் உருவாக வேண்டும்.

“இன்றைய நாளை வாழ்ந்தால்தான் நாளை என்பது வரும்” என்று பிரதீப் கூறும்போது, ஆரம்பக் காட்சியில் ‘இனி நீ உன்னையே நன்றாகப் பார்த்துக் கொள்’ என்று தோழி ஒருவள் கூறியதை இப்போது முழுமையாக உணர்ந்தவள் போல் நிகழ்காலத்தைப் பற்றிக் கொள்வாள் ஷைலஜா. வெங்குர்வா வருகையால், பிரதீப் தன்னுடன் இருப்பதால் தனது ‘பழைய சோகங்களை’ கடந்தவிட்ட ஷைலஜாவை நாமும் கண்டுகொள்வோம்.

ஒருவேளை டெமன்ஷியாவையும் தாண்டி அவளது கடந்த காலம் வதைக்க நினைத்தால், அது இனி தோற்றுத்தோன் போகும்!

ராட்டின உச்சியில் அன்பு பரிமாறப்பட, அதற்கு கீழே திபாங்கரிடம், “மறதி சாதாரணம். எல்லோரும் மறப்பார்கள். பள்ளிக்குச் செல்கையில் நான் ஏதேனும் மறந்துவிட்டால், ‘மறந்துவிட்டேன்’ என்று தான் சொல்வேன்” என்று பிரதீப்பின் மகள் மிகப் பெரிய படிப்பினையை திபாங்கருக்கு கொடுப்பார்.

மறதியை பெரிய சுமையாகக் கருதிவந்த திபாங்கருக்கு அது திருப்புமுனை.

மனித வாழ்க்கையில் ஞாபகங்கள், மறதி இரண்டுமே வரமும் சாபமும்தான். அதை பொதிபோல் சுமப்பதும், கடல்நுரை போல் தொட்டனுபவிப்பதும் வாழ்தலில் இருக்கிறது.

ஷைலஜாவின் பிரயத்தனங்களின் வாயிலாக ‘Three of Us’ படத்தில் நினைவுகளோடு வாழ்தலின் ரம்மியத்தை நாம் ரசிக்கலாம்.

| தேவதைகள் வலம் வர தொடர்வர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT