தொடக்கத்தில் ஒலிக்கும் குரல் சொல்வது போல, ‘தி டைம் ப்ரோபல்லர்‘ (The Time Propeller) என்கிற இந்த அறிவியல் புனைவு குறும்படமும் தற்செயலாகத்தான் எனக்குக் காண கிடைத்தது. மணித்திலாயத்துக்கும் குறைவான நேரத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்குள் உறுத்தல் இல்லாமல் நம்மை அழைத்துச் சென்று, காலவெளியில் நிறைந்து கிடக்கும் காதலையும், அதன் மீது சுமத்தப்பட்ட சாதி அரசியலையும் அறிமுகப்படுத்தி வைக்கிறது இப்படம்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் (1925) சென்னை, செம்மலையில் தொடங்குகிறது ‘தி டைம் ப்ரோபல்லர்’ குறும்படம். சென்னைக்கு மிக அருகில் என்கிற குடியிருப்புகள் தோன்றாத காலத்தில் வாழும் ஒருவர் தனது திருமண நாளில், விஞ்ஞானி ஒருவர் எழுதிய டைரியின் உதவியுடன் காலவெளிக்குள் பயணப்பட வைக்கும் ஒரு பாறையைத் தேடிக் கண்டடைகிறார். நூறாண்டுக்கு ஒருமுறை மின்காந்த அலைகளை வெளிப்படுத்தி தன் எதிரில் இருக்கும் எதையும் காலங்கள் கடந்து பயணப்பட வைக்கும் ஆற்றல் கொண்டது அந்தப் பாறை.
நல்ல நாளும் பொழுதுமாய் காட்டுக்குள் சுற்றித் திரியும் மச்சானை தேடியபடி மச்சினன் வர, அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தால், மச்சானின் கையில் இருக்கும் டைரி கைதவறி பாறைக்கு முன் விழுந்து, மின்காந்த அலையால் காலவெளிக்குள் பயணித்து அந்த இடத்துக்கு ஒரு மடிக்கணினி அழைத்து வருகிறது. இருவரும் அதிசயமாய், ஆச்சர்யமாய் அதைப் பார்க்கிறார்கள். ‘நீ மட்டும் என்னைத் தடுத்து இழுக்கலனா நான் என்னவாயிருப்பேன்’ என்ற மச்சினனின் கேள்விக்கு, ‘நீ அங்கே போயிருப்ப, உன் பேரன் இங்கே வந்திருப்பான்’ என்கிறார் மச்சான்.
நூறு ஆண்டுகளுக்கு பிறகு (2025) பேரன்களின் காலம்... வீட்டுக்குத் தெரியாமல் காதல் மணம் புரிந்த தங்கை, அவள் கணவனை குலத்தெய்வ கோயிலுக்கு அழைத்து வருகிறான் பெண்ணின் அண்ணன். புதுமண தம்பதி சாமி கும்பிடும்போது, தங்கையின் கணவனை குத்தி சாய்த்து விட துடிக்கிறது அண்ணனின் சாதி வெறி. முதல் குத்தை வாங்கிய புது மாப்பிள்ளை, இரண்டாவது குத்தை தடுத்துப் போராட, காட்டுச் சாமியாய் மாறியிருக்கும் அந்த அதிசய பாறை மின்காந்த அலைகளை வெளிப்படுத்தி தங்கை கணவனை கற்காலத்துக்கும், கற்காலத்தில் இருக்கும் அவனது ஆதிமூப்பாட்டனை தற்காலத்துக்கும் மாற்றிவிடுகிறது.
குறும்படத்தின் ரசவாதமே இந்தப் பகுதி தான். உணவு தேடி வேட்டையாடி திரிந்த காலத்திலிருந்த காதல், நாகரிகம் வளர்ந்த காலத்தில் இருந்த காதல் என மாறி... மாறி... காட்டும் திரைக்கதை, வீசும் காற்றில் கலந்து, மூச்சை திணறடிக்கும் நச்சு நெடியாய் காதலில் சாதி கலந்த கதையை பிரச்சாரம் இல்லாம் சொல்லி ஈர்க்கிறது. கண்டுபிடிப்புகளும், நாகரிகமும் புலன்களை இணைத்து, மனங்களை விலக்கி வைத்த யதார்த்தம் கதையுடன் கைகோத்திருக்கிறது.
அரைமணி நேரத்துக்குள் காலவெளி பயண அறிவியல் புனைகதை... அதில் கடந்த காலத்துக்கு பயணம் செய்து, இந்தக் காலம் தொலைத்த ஒரு பொக்கிஷத்தை பார்வையாளர்களுக்கு மீட்டுக் கொடுக்கிறது.
சென்னைக்கு அருகில் கற்கால மனிதன் வாழ்ந்த எச்சம், கொல்லப்பட்ட காதலர்கள் கடவுளாக்கப்பட்டது என வரலாற்று உண்மைகள் மீது ஊர்ந்து மனிதனின் ஆதி உணர்வை கண்டடைகிறது இந்தக் கால பயணம்.
அதிக இடங்களில் படப்பிடிப்புக்கு வாய்ப்பளிக்காத கதையில், கிடைத்த இடத்தை கற்கால, தற்கால, இடைக்கால காட்டுப் பகுதிகளாய் தனது காட்சி அமைப்பின் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யாழினி ரமேசன். செல்வராஜின் கலை இயக்கமும், அமல் ராஜின் ஆடை வடிவமைப்பும் கற்கால மனிதர்களை குறையின்றி காட்டியிருக்கிறது.
இயக்குநரே படத்தொகுப்பும் செய்திருப்பதால் கதையின் ஓட்டத்துக்கு படத்தொகுப்பு உயிரூட்டுகிறது. அதிக வசனங்கள் இல்லாத கதையில் திரைக்கதையுடன் பயணிக்கும் சங்கர் கணேஷின் இசை, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறது.
‘Ra2’ சினிமாஸ் வெளியீட்டில், அருண் பகத் இயக்கி இருக்கும் ‘தி டைம் ப்ரோபல்லர்’ குறும்படம் யூடியூபில் காணக்கிடைக்கிறது.