ஓடிடி விமர்சனம்

The Swimmers: தேசமிழந்த யூஸ்ரா, சாரா கற்பிக்கும் மீட்சிப் பாடம் | திரை தேவதைகள் 45

பாரதி ஆனந்த்

வலிகளை மட்டுமே தருவதல்ல மனிதனுக்கு ஏற்படும் இழப்புகள்! அவற்றின் ஊடே மிக ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும், அதனினும் முக்கியமாக பாதிப்புகளில் இருந்து மீளும் சூட்சமங்களையும் சேர்த்தே ஊட்டுபவை.

பொருட்கள், மனிதர்கள், உடல்நலன் என்று இழப்புகளின் வகைகள் ஏராளம். ஆனால் இவையெல்லாம் தாண்டிய பேரிழப்பு ஒன்றுள்ளது. அது தேசமிழத்தல்! அது உண்மையில் ஒரு மனிதனுக்கு, ‘கூடுகள் சுமந்து ஊர்வலம் போதல்’ தான்.

அதிகாரத்துக்காக யாரோ யாருடனோ நடத்தும் போரில் தேசத்தை இழந்ததால் தஞ்சம் புகுபவர்களை ‘அகதி’ என்றொரு வார்த்தைக்குள் நாம் சுருக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த வார்த்தைக்குள் அவர்கள் மறைத்து வைத்திருப்பது வலிமையின், துணிச்சலின், வெற்றியின் அடையாளம்.

இந்த தேச எல்லைகள் எல்லாம் மனிதன் வகுத்தது தானே... மற்றபடி மொத்த பூமியும் மனிதர்களுக்கானது தானே!

சாலி எல் ஹொசைனி என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில் 2022-ல் வெளியான ‘The Swimmers’, திரைப்படம் ஒரு பயோகிராஃபிக்கல் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் பொருந்தும். ஆனால், ‘The Swimmers’ -ஐ நீங்கள் பார்த்து முடிக்கும்போது அதைத் தாண்டி உலகளாவிய பல்வேறு சிக்கல்களையும் அழுத்தமாகப் பேசியிருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவல்.

படத்தின் கதை சிரியாவில் தொடங்குகிறது. உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸில் சாரா மார்டினி, யூஸ்ரா மார்டினி, அவர்களது பெற்றோர், கடைக்குட்டி சகோதரி, செல்லப் பறவை லூலூ என்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

2011-ல் கதை தொடங்குகிறது. ஆனால் சாரா, யூஸ்ரா வளர்ந்துவரும் அதே நேரத்தில் நாட்டில் கிளர்ச்சியும் போரும் அடக்குமுறையும் வலுக்கிறது.

2015-ஐ எட்டும்போது போர், கிளர்ச்சி மீதான சாராவின் வெறுப்புணர்வும் வளர்கிறது. பதின்ம வயதில் கிளிர்ச்சியாளர்களின் குண்டுகளுக்கு அடுத்தடுத்து நட்புக்களை இழப்பது, பாதுகாவலர்கள் என்ற போர்வையில் பெண்களிடம் வீரர்கள் அத்துமீறுவது எல்லாம் சாராவுக்கு சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டுகிறது.

ஒழுங்கற்ற ஒரு தேசத்தில் தனி மனிதர்களின் வாழ்க்கையே கேள்விக்குறி என்கிறபோதில் அவர்களின் லட்சியம் மட்டும் எப்படி தப்பிப் பிழைக்கும்!

அதனாலேயே சாரா பயிற்சியில் கூட பெருமளவில் நாட்டம் காட்ட மறுக்கிறாள். சாவின் விளிம்பில் இருக்கும்போது இருப்பதை அனுபவிப்பதை விட வேறேதும் சிறந்த லட்சியமில்லை என்பது சாராவின் பார்வை. கடவுள் மீது சாராவுக்கு பற்றில்லை. கடவுளையும் அச்சமின்றி பகடி செய்வாள் அவள். ஆனால், யூஸ்ரா அப்படியல்ல. அப்பா வகுத்துக் கொடுத்த இலக்கில் பயணிக்க உறுதியுடன் செயல்படுகிறாள்.

கனவுகளை சுமந்திருக்கும் யூஸ்ராவுக்கு அப்பாவின் அறிவுரை, “உன் பாதையைத் தீர்மானி; உனக்கான போட்டியில் வெற்றி பெறு” என்பதே.

சிரியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் மகள்கள் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவில் அவர்களுக்குப் பயிற்சியளித்து வந்த தந்தையே, அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்தாவது அவர்கள் பிழைத்துக் கிடக்கட்டும் என்ற முடிவுக்கு வருகிறார். முதலில் எங்கேயாவது வேரூன்றுங்கள், பின்னர் லட்சியப் பாதையில் செல்லுங்கள் என்று அனுப்பிவைக்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது அவர்களின் போராட்டப் படலம்.

சாரா, யூஸ்ரா, கூடவே அவர்களின் உறவுக்காரப் பையன் நிஸார் சிரியாவிலிருந்து புறப்படுகிறார்கள். அங்கிருந்து விமானத்தில் துருக்கி சென்று, பின்னர் நடந்தே பல்கேரியா செல்வதே அப்பா வகுத்துக் கொடுத்தத் திட்டம்.

அகதிகள் வாழ்வின் அவலத்தைக் கூற “No one puts their children in a boat unless the water is safer than the land” என்றோரு மேற்கோள் உண்டு. அப்படித்தான் சாரா, யூஸ்ரா, நிசாரும் துருக்கியில் இருந்து படகுப் பயணத்துக்கு தயாராகின்றனர்.

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு, அங்கிருந்து சில நாடுகளைக் கடந்து ஐரோப்பாவில் ஜெர்மனி, லண்டன் என்று திட்டுமிட்டு படகில் ஏறுகிறது ஒரு கூட்டம்.

படகேறி ஐரோப்பா சென்றுவிட வேண்டும் என்பது அவர்களின் பொதுவான இலக்கு. சாத்தியமில்லை என்று எல்லோரும் சொன்னாலும் கூட ஒலிம்பிக்கில் பங்கேற்று பட்டம் வெல்ல வேண்டும் என்பது யூஸ்ராவின் தனிப்பட்ட லட்சியம்.

யூஸ்ராவாக நடித்த (Nathalie Issa) மற்றும் சாராவாக நடித்த (Manal Issa) ஆகிய இருவருமே, நிஜ வாழ்விலும் சகோதரிகள் என்பதால் அவர்களுடைய பிணைப்பு படத்துக்கு இயல்பாக பலம் சேர்த்துள்ளது எனலாம்.

படகுப் பயணத்தின் சவால்களை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

நமக்குள் மனிதம் இருந்தால், நம் சக மனிதரின் வேதனை நம்மை நிச்சயம் உலுக்கும்.

‘The Swimmers’ படத்தில் படகுக் காட்சிகள் நம்மை பதறவைக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் படகில் எரிட்ரியா பெண் கைக்குழந்தையுடன் ஏறும்போது ஏனோ எனக்கு அய்லான் குர்தி என்ற சிரிய நாட்டுச் சிறுவன் கடற்கரையில் ஒதுங்கியிருந்த காட்சி நினைவுக்கு வந்து படுத்தியது. அப்படியொன்று நிகழ்ந்துவிடுமோ என்ற பீதியை அந்தக் காட்சிகள் எனக்குக் கடத்தின.

அந்தப் பயணம் முழுவதும் யூஸ்ராவும், சாராவும் நமக்கு மீட்சியின் பாடத்தைக் கற்றுத் தருவார்கள். படகில் நீர் ஏறுகிறது. உங்களுக்குத் தேவையில்லாதவற்றை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்று சொல்லும்போது, யூஸ்ரா தந்தை கொடுத்தனுப்பிய பதக்கங்களையெல்லாம் தண்ணீரில் வீசி எறிவாள்.

ஒருகட்டத்தில் நானும் சுமைதான் நீந்தத் தெரியும் என்று கடலில் குதிப்பாள். உடனே அக்கா சாராவும் குதிப்பாள். ஒருவொருக்கொருவர் கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் கூட எப்போதும் ஒருவர் மற்றொருவருக்காக நிற்பார்கள்.

உறவின் அழகே எல்லா சூழலிலும் ஒருவர் இன்னொருவருக்காக இருத்தல் மட்டுமே. நான் இருக்கிறேன். இணைந்தே பயணித்தல் வெற்றியையும், இணைந்தே குணமடைதல் ஆன்ம அமைதியையும் தரும்.

சாராவும், யூஸ்ராவும் அவர்களுக்காக மட்டுமல்ல, படகில் இருக்கும் அனைவருக்காகவும் கடலில் நீந்தி அனைவரையும் கரை சேர்க்கின்றனர்.

படகுப் பயணத்துக்கு முன்னால் துருக்கியில் ஒரு கடை முழுவதும் லைஃப் ஜாக்கெட் விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து சாராவும், யூஸ்ராவும் பகடி செய்வார்கள். கிரீஸ் கடற்கரையில் இறங்கிய பின்னர் அங்கே குவிந்து கிடக்கும் லைஃப் ஜாக்கெட்டுகள் அவர்களைப் பார்த்து பகடி செய்வதுபோல் இருக்கும்.

அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதா என்றால், இல்லை. கிரீஸிலிருந்து ஜெர்மனி செல்வதே சாரா, யூஸ்ராவின் திட்டமல்லவா? அடுத்தக்கட்டப் போராட்டமும் ஆரம்பிக்கும்.

கிரீஸில் இருந்து ஹங்கேரிக்குள் நுழையும் காட்சிகள் எல்லாம் கண்ணீர் வரவழைக்கும். இப்படி அகதிகளாக அலைந்து திரிவோரை வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டமும், அதில் பெண்களிடம் அத்துமீறும் நபர்களும் சாரா சொல்வது போல் விலங்குகள் மட்டுமே.

ஹங்கேரிக்குள் செல்லும் முன் எரிட்ரியாவிலிருந்து கைக்குழந்தையுடன் வந்த ஷடா என்ற பெண் தனது ஹிஜாபை அகற்றுவார். ஏன் என்று யூஸ்ரா கேட்கையில், “நான் இன்னும் அந்நியமாகத் தெரியக் கூடாது” என்பாள்.

இஸ்லாமிய வெறுப்பு ஓர் அகதிக்கு எத்தனை பெரிய சவால் என்ற உலக அரசியல் அதில் நமக்குப் புலப்படும்.

ஹங்கேரியில் இருந்து அடுத்த பயணம் தொடங்க வேண்டும். அப்போது யூஸ்ரா டிரக் பயணம் வேண்டாம் இனி ஏதேனும் நேர் வழியில் ஜெர்மனி செல்வோம். அடைக்கலம் கோரி போராடுபவர்களோடு இணைந்து கொள்வோம் என்பாள். ஒருவழியாக அகதிகளுக்காக அரசு ஏற்பாடு செய்த பேருந்தில் ஏறி ஜெர்மனி வந்து சேர்வார்கள் சாராவும், யூஸ்ராவும்.

யோசித்துப் பார்க்கவே அயர்ச்சி கொள்ளவைக்கும் அளவுக்கு தடைகளைத் தாண்டி வந்திருப்பார்கள் இருவரும்.

சுதந்திர நாடு, மூன்று வேளை உணவு, உடை, வசிக்க வீடு, அதில் உறவுகள், வேலை என்று எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் வரும் சாதாரண சிக்கல்களைக் கூட சமாளிக்க முடியாத மனிதர்கள் சாரா, யூஸ்ரா, ஷடா இன்னும்பிற அகதிகளிடமிருந்து மீட்சிப் பாடம் கற்க வேண்டும்.

ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த பின்னர் முகாம் வாழ்க்கை தொடங்குகிறது. யூஸ்ராவுக்கு முகாமுக்குள்ளேயே வாழ்க்கை முடங்கிவிடுமோ என்ற அச்சம். நிசாருக்கும் கிட்டத்தட்ட அதுவே நிலைமை.

ஆனால் யூஸ்ரா அந்த அச்சத்தில் துவண்டுவிடவில்லை. முகாமில் தொடர்ந்து உடற்தகுதியை வளர்க்கிறாள். வாய்ப்புகளைத் தேடிச் செல்கிறாள். உள்ளூரில் ஒரு நீச்சல் கிளப்புக்கு சென்று அங்குள்ள பயிற்சியாளரை அணுகுகிறாள்.

பயிற்சியாளரை அவள் சமரசம் செய்யும் காட்சி வெகு இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில் எந்த சினிமாத்தனமும் இருக்காது, மாறாக ஒரு விளையாட்டு வீராங்கனையின் உத்வேகம், விடா முயற்சி மட்டுமே மிளிரும். என்னால் பட்டர்ஃப்ளை ஸ்டைலில் 1.09 விநாடிகளில் இலக்கை எட்ட முடியும் என்று தன் திறமையை சொல்லி வாய்ப்பைப் பெறுவாள் யூஸ்ரா.

யூஸ்ரா, சாராவின் உறுதியைப் பார்த்து நீச்சல் பயிற்ச்சியாளர் ஸ்வென் சற்றே ஸ்தம்பித்துப் போவார்.

மனிதர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களின் கடவுள்கள்!

கடலில் படகு தத்தளித்தபோது அந்த 18 பேருக்கும் யூஸ்ராவும், சாராவும் கடவுள்கள். ஜெர்மனியில் முகாமில் திசை தெரியாமல் முடங்கிப் போன யூஸ்ராவுக்கும், சாராவுக்கும் நீச்சல் பயிற்ச்சியாளர் ஸ்வென் கடவுளாகியிருப்பார். அவருடைய க்ளப்பில் பயிற்சி மட்டுமல்ல இருவருக்கும் தங்கவும் இடம் கொடுத்திருப்பார்.

இருந்தாலும் ஸ்வென் ஏன் ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை என்று யூஸ்ராவுக்கு கேள்வி எழும்.

“நீங்கள் ஏன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவில்லை. திறமையில்லையா இல்லை விளையாட்டில் ஒழுக்கத்தை பின்பற்றவில்லையா?” என்று யூஸ்ரே கேட்பாள்.

அதற்கு ஸ்வென், “நான் என்னை நம்பவில்லை. நான் தோற்றுவிடக் கூடாது என்று நீச்சலடித்தேனே தவிர வெற்றி பெற வேண்டும் என்று நீந்தவில்லை” என்பார்.

அவர் அதைச் சொல்லும்போது நமக்கு யூஸ்ரா வாய்ப்பு கேட்டுவந்த தருணத்தில் ஏன் ஸ்வென் அவளைப் பார்த்து அப்படி ஒரு விநாடி ஸ்தம்பித்து நின்றார் என்பது புரியும்.

வாழ்க்கையில் நம் தொடர் தோல்விகளுக்கான காரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போகும். ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் அதை மின்னல் வேகத்தில் புலப்படுத்திவிடுவார்கள். அதிலிருந்து கற்று மீளலாம் நாம்.

ஆம்... மனிதர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களின் கடவுள்கள்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே யூஸ்ராவின் இலக்கு. ஆனால் அகதியான அவள் சிரியா அணிக்காக விளையாட முடியாது வேண்டுமென்றால் அகதிகளுக்கான அணியில் விளையாடலாம் என்ற வாய்ப்பு மட்டுமே அவளுக்கு மிஞ்சும்.

யூஸ்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்க, சாரா தன் பாதையைத் தேடத் தொடங்குவாள். அப்போதும் சகோதரிகளுக்குள் உரசல் வரும். ஆனால் வயதில் மூத்தவளாக மிகப் பக்குவமாக யூஸ்ராவைக் கையாள்வாள்.

“நீச்சல் தான் நம் இலக்கும் என்று நாம் தீர்மானிக்கவில்லை” என்று தந்தை கடத்திய ஆணாதிக்கத்தை விளக்குவாள். தன் பேரைக் கூட சாரா என்று மார்டினியை வெட்டித் துறந்துதான் சொல்வாள்.

சிரிய அணிக்காக அல்லாது அகதிகள் அணிக்காக நீந்தும் வாய்ப்பை ஸ்வென்னிடம் யூஸ்ரா நிராகரிப்பாள். ஆனால், அவளை சாரா சமரசம் செய்வாள்.

தந்தை மார்டினி நீச்சலை விடக் காரணம் கட்டாய ராணுவ சேவை. நாம் இப்போது நாடற்று இருக்கிறோம். நமக்கு வரும் வாய்ப்பை தவறுவிடுவது முட்டாள்தனம் என்று எடுத்துரைப்பாள்.

இரண்டு சகோதரிகள் என்பதைத் தாண்டி இரண்டு பெண்கள் வாழ்க்கையில் வெல்ல ஒருவொருக்கொருவர் அனுசரணையாக இருப்பது நம்பிக்கை ஒளியைக் கடத்தும்.

சகோதரத்துவம் என்று நாடுகள் கொண்டாடலாம். ஆனால் சகோதரித்துவம் என்பது பெண் இதயங்களுக்கு வரம்.

ரியோ 2016 ஒலிம்பிக் போட்டிக்காக யூஸ்ரா தயாராவாள். சாரா, இனி தன் வாழ்வு தன்னைப் போல் கடல் கடந்து வரும் அகதிகளுக்கானது என்று முடிவெடுப்பாள்.

ரியோவில் தங்கையின் போட்டியை நேரில் காண வரும் சாரா ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு தேவையான அத்தனை உபதேசத்தையும் தங்கைக்குப் புகட்டுவாள்.

அப்பா சொன்னதுபோல் உன் பாதையைத் தேடி, உன் போட்டியை வெல்ல நீந்தாதே. நீ ஓர் ஒலிம்பிக் வீரரைவிட சிறந்தவள். நீ உனக்காக மட்டுமல்லாது எனக்காக, அப்பாவுக்காக, ஸ்வென்னுக்காக, நம்முடன் பயணித்த ஷடாவுக்காக, நம்மைப் போல் பாதுகாப்பாக இங்கு வந்து சேர முடியாமல் மாண்டு போனவர்களுக்காக, நம்மைப் போல் புது வாழ்வு தேடுவோருக்காக நீந்து என்பாள்.

வெற்றியின் ரகசியம் இலக்கை குறுக்குவதில் அல்ல... இலக்கை விசாலமாக்குவதில் இருக்கிறது. அப்போது தோள் மீது பொறுப்புகள் அழுத்தாது; மனதுக்குள் பயம் பீடிக்காது. நாம் பெரிய விடுவிப்பை செய்யப்போவதால் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

இந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்யக் குறிப்புகளையும் பகிர விரும்புகிறேன். படத்தில் சகோதரிகளுடன் பயணிக்கும் அவர்களின் உறவினர் நிசார், நிஜ வாழ்க்கையில் அவர்களுடன் ஜெர்மனிக்கு வரவில்லை. லெபனானிலேயே தங்கிவிட்டார்.

சாரா தனது தலைமுடியை வெட்டிக்கொள்வதம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் போலவும் காட்டப்படுவது சினிமாவுக்காகத்தான். நிஜத்தில் சாரா தோள்பட்டை காயம் காரணமாகவே நீச்சலை விட்டு விலகினார்.

படத்தில் லூலூ என்ற பறவை காட்டப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்களிடம் ஒரு பூனைதான் செல்லப் பிராணியாக இருந்துள்ளது.

நிஜத்தில் அவர்களின் ஒட்டுமொத்த அகதிப் பயணம் 25 நாட்கள் நீடித்தது. சுமார் 3.5 மணி நேரம் கடலில் நீந்திப் படகைக் கரை சேர்த்தனர். படத்தில் அவை சுவை காரணமாக சுருக்கப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் ‘The Swimmers’ ஒலிம்பிக் உத்வேகக் கதையையும் தாண்டியது. அகதிகளின் போராட்டம், மறுவாழ்வு, போரின் கொடுமை, குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் போர் செய்யும் அநீதி, வாழ்க்கை நம்மை எப்போது பூஜ்ஜியத்தில் நிறுத்தினாலும் மீட்சிக்கான பாடம் ஆகியவற்றைக் கொடுக்கிறது.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT