ஓடிடி விமர்சனம்

The Family Man 3 Review: நிதானமும் வன்முறையும்... கிட்டியதா நிறைவான அனுபவம்?

டெக்ஸ்டர்

இந்தியாவில் உருவாகி உலக அளவில் மிகப் பிரபலமான ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் 3-வது சீசன் ஏறக்குறைய 4 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களில் காஷ்மீர், தமிழ்நாடு எனப் பயணித்த கதைக்களம், இம்முறை வடகிழக்கு இந்தியாவின் பதற்றமான சூழலை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சீசன் 1 மற்றும் 2 தந்த பிரம்மாண்ட வெற்றியை, இந்த 3-ம் பாகம் தக்கவைத்ததா என்று பார்க்கலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு 'ப்ராஜெக்ட் சஹக்கார்' என்ற திட்டத்தை அமல்படுத்துகிறது. என்ஐஏ அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் (மனோஜ் பாஜ்பாய்) வழிகாட்டியும், உயரதிகாரியுமான கவுதம் குல்கர்னி (திலிப் தாஹில்) வடகிழக்கு பயணத்தின்போது கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது ரூக்மா (ஜெய்தீப் அஹ்லாவத்) எனும் கூலிப்படைத் தலைவன்.

எதிர்பாராத திருப்பமாக, இந்தக் கொலைப் பழி ஸ்ரீகாந்த் மீதே விழுகிறது. தான் வேலை செய்யும் துறையாலேயே தேடப்படும் குற்றவாளியாகஅறிவிக்கப்படுகிறார் ஸ்ரீகாந்த். இன்னொரு பக்கம் அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு பக்கம் தன் குடும்பத்தைக் காக்கவும், மறுபக்கம் உண்மையான கொலையாளியை பிடிக்கவும் தனி ஆளாக போராடும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றாரா?என்பதுதான் இந்த சீசனின் கதைக்களம்.

’தி ஃபேமிலி மேன்’ தொடரின் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை ராஜ் & டி.கே கூட்டணி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அதை முடிந்தவரை திகட்டாமல் கொடுக்கவும் செய்திருக்கிறது. முதல் இரண்டு சீசன்களின் முக்கிய அம்சமான நகைச்சுவையும், விறுவிறுப்பும் இதிலும் உண்டு. ஆனால், இம்முறை கதைக்களம் சற்றே இருண்ட தன்மையுடன் நகர்கிறது.

தொடரின் ஆரம்பத்திலேயே வரும் தாக்குதல் காட்சி, கவனம் சிதறாமல் அமரவைக்கும்படி படமாக்கப்பட்ட விதம் அட்டகாசம். ஒரு குறுகிய மலைப்பாதையில் நடக்கும் துப்பாக்கிச்சூடு காட்சி மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல மனோஜ் பாஜ்பாய் வழக்கமாக தன் குடும்பத்துக்கு தெரியாமல்தான் ஒவ்வொரு மிஷனையும் செய்து முடிப்பார். ஆனால், இந்த முறை தொடக்கத்திலேயே குடும்பத்திடம் தன்னைப் பற்றி சொல்லிவிடுகிறார். தான் ஒரு 'வான்ட்டட்' குற்றவாளியாகத் தேடப்படும் நிலையில், ரயிலில் வைத்துத் தன் குடும்பத்திடம் பேசும் காட்சி உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஓர் உளவாளியாக மட்டுமின்றி, தோற்றுப்போன ஒரு தந்தையாக மனோஜ் பாஜ்பாய் வெளிப்படுத்தும் நடிப்பு கிளாசிக் ரகம். மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இதில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல முந்தைய சீசன்களை விட ப்ரியாமணி, குழந்தை நட்சத்திரங்களாக வரும் அஷ்லேஷா தாகூர், வேதாந்த் சின்ஹா ஆகியோருக்கும் இதில் முக்கியத்துவமான கதாபாத்திரங்கள். டீன் ஏஜ் பருவச் சிக்கல்களும் மிக அழகாக கையாளப்பட்டுள்ளன.

ஜேகே என்ற கேரக்டரில் வரும் ஷரிப் ஹாஸ்மியின் நகைச்சுவை காட்சிகள் கைகொடுத்துள்ளன. ஜெய்தீப் அஹ்லாவத் வில்லனாக மிரட்டுகிறார். அதிகம் பேசாமல், தனது உடல்மொழியாலேயே அச்சத்தை ஏற்படுத்துகிறார். 'பாதாள் லோக்' தொடருக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த சிறந்த கேரக்டர் இது என்று சொல்லலாம்.

இறுதி எபிசோட்களில் வடகிழக்குக் காடுகளுக்குள் நடக்கும் அந்த 'கேட் அண்ட் மவுஸ்' சேஸிங் காட்சிகள், எவ்விதப் பின்னணி இசையும் இன்றி வெறும் மூச்சுக்காற்றின் சத்தத்தை மட்டுமே வைத்துப் படமாக்கப்பட்ட விதம் தொழில்நுட்பக் குழுவின் உழைப்புக்கு சான்று.

ஆரம்ப எபிசோட்களில் திரைக்கதை சற்றே நிதானமாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது. குறிப்பாக குடும்ப காட்சிகள் சில இடங்களில் அலுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. மனோஜ் - ப்ரியாமணி இடையிலான ஈகோ சண்டைகள் முந்தைய சீசன்களின் நீட்சியாகவே தெரிவது சலிப்பு. விஜய் சேதுபதியின் கேமியோ சுவாரஸ்யம் என்றாலும், அது கதைக்குத் தேவையானதுதானா என்ற கேள்வி எழாமல் இல்லை. அதீத வன்முறையும் நெளிய வைக்கிறது.

முந்தைய சீசன்களைப் போல முழுமையான சுவாரஸ்யம் தராவிட்டாலும் எந்த இடத்திலும் பெரிதாக போரடிக்காத அளவுக்கு இந்த மூன்றாவது சீசன் அமைந்திருக்கிறது. வடகிழக்கு இந்தியாவின் அரசியலை பேசியதற்காகவும், மனோஜ் பாஜ்பாய் நடிப்புக்காகவும் பார்க்கலாம். கிளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ள அந்த 'ட்விஸ்ட்' மற்றும் விபத்துக் காட்சி, அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இத்தொடர் அமேசான் ப்ரைமில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT