“இவன் என்னடா வெயில்ல விளையாடி டெமோகார்கன் மாறி கருகிட்டான்” - இது செண்டிவாக்கம் என்ற சின்ன கிராமம் ஒன்றின் பள்ளியில் 6-ஆம் வகுப்பு ஹரிஷ் மற்றும் கார்த்தி பி.டி பீரியடில் பேசிக்கொண்டது. என்னடா இது டெமோகார்கன் பட்டி தொட்டி எல்லாம் பரவியுள்ளது என ஆச்சரியப்படும் அளவுக்கு ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ (Stranger Things) ஒன்றும் லோக்கல் சேனல் சீரியல் இல்லை என்றாலும், 6-ஆம் வகுப்பு முதல் 60 வயது வரை இந்த சீரிஸ் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்பதை உணர்ந்தேன்.
ஆனாலும் என்னதான் என் நட்பு வட்டாரங்களில் 10 பேராவது இந்த சீரிஸை பார்த்து இருந்தாலும் பதினோராவதாக ஒரு ஆள் ‘அட போங்கப்பா அந்த சீரிஸ் ரொம்ப நீளமா இருக்கு, கதையே புரியல, ஒரே சயின்ஸ் வார்த்தையா இருக்கு’ என்றெல்லாம் புலம்பத்தான் செய்வார். அப்படியான சற்றே பொறுமை இல்லாத, இந்த கதைக் களத்தை ஒரு ரசிகரின் எழுத்து பார்வையிலிருந்து பார்க்க விரும்புகிறீர்களா?
‘டைமென்ஷன் எக்ஸ் பற்றி உங்களது கருத்து என்ன?’, ‘இந்த தியரியை நம்புகிறீர்களா?’ ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் இந்த எபிசோடின் இந்த கான்செப்ட் இந்த ஒரு பிசிக்ஸ் கான்செப்ட் கொண்டே எழுதப்பட்டுள்ளது தெரியுமா!’ என்றெல்லாம் சொல்பவர்களா நீங்கள்... இதோ உங்களுக்காகத்தான் இந்த ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் டீகோடிங்’ கட்டுரைத் தொடர்.
நாஸ்ட்டால்ஜியா என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், ஏதோ ஒரு கடந்த கால நினைவு, அதை இன்னுமொரு முறை வாழ்ந்து பார்க்க ஆசை, ஏக்கம் என்றது. நம்மால் பலரும் இரண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது யாராவது உனக்கு பெரியவனாகி என்ன ஆக வேண்டும் என்று கேட்டால், ‘டாக்டர்... இன்ஜினியர்...’ என்றெல்லாம் சொல்லியிருப்போம், அதுவே ஒன்பது, பத்தாவது படிக்கும் பொழுதெல்லாம் எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருந்திருக்கும்.
ஏன்... இப்பொழுதும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் மோகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸ் நம்மை மட்டும் இல்லாமல் அமெரிக்காவைச் சேர்ந்த பலரையும், தற்போதைய இளைய தலைமுறையினர் பலரும் பாத்திராத 70ஸ் 80ஸ் காலகட்டங்களில் இருந்த அமெரிக்காவில் வாழ வேண்டும் என்ற நாஸ்டாலஜியாவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸின் தாக்கம் இப்படி உணர்ச்சிகளை கிளறுவதோடு நின்று விடவில்லை.
765-355-9775 என்ற தொலைபேசி எண்ணை spotify செயலியில் உள்ளிட்டால் கிடைக்கும் சீசன் ஐந்தின் எக்ஸ்பிரஸ் செய்திகளும், 2022-ல் இளையராஜா ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-காகவே இசை அமைத்த இரண்டு நிமிட வீடியோ, திடீரென youtube-இல் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ‘ஹே ராமா ராமா’ என்ற விஜய் பாடல் (இதற்கான விளக்கம் சற்று பின்னரே உங்களுக்கு தெரியவரும்) என ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸின் புகழ் நேற்று இன்று தோன்றியது இல்லை. ஜூலை 15, 2016-ல் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸின் முதல் எபிசோடான ‘சாப்டர் ஒன்: த வேனிஷிங் ஆப் வில் பையர்ஸ்’-இல் இருந்து இந்த சீரிஸின் புகழ் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
டார்க், அலிஸ் இன் பார்டர் லேண்ட், ஃப்ரம் என பல ஆங்கில சயின்ஸ் பிக்ஷன் தொடர்கள் அருமையான கதைக்களமும் அமெரிக்கா அளவில் புகழும் பெற்றிருந்தாலும் அதையெல்லாம் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ மிஞ்சுவதற்கு காரணம் என்ன?
“ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு” என்பது போல் அமைதி நிறைந்த ஒரு சின்ன ஊர் தான் ஹாக்கின்ஸ். இத்தொடர் ஹாக்கின்ஸ் நகரில் வாழும் மைக், வில், டஸ்டின் மற்றும் லூகாஸ் ஆகிய நான்கு சிறுவர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது. மை டியர் குட்டிசாத்தான் போல இந்த நான்கு சிறுவர்களின் வாழ்க்கைக்குள் குட்டிச்சாத்தான் போல் வரும் ‘லெவன்’ (11), அவளைப் பின்தொடரும் மர்ம நபர்கள், சிறுவர்களின் விருப்பமான விளையாட்டான ‘டன்ஜன்ஸ் அண்ட் டிராகன்ஸ்’-ஐ முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் காணாமல் போகும் வில், அவனது மறைவை தொடர்ந்து ஹாக்கின்ஸில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் என முதல் எபிசோடிலேயே நம்மை திகிலடைய செய்யும் இந்த சீரிஸ்.
இப்படியாக நாம் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய, அதேசமயத்தில் நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடிய கதைக்களம் கொண்டதால்தான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டு அடித்துள்ளது என்று நான் நம்புகிறேன்.
நாம், நெட்ஃபிளிக்ஸ் சூப்பர் ஹிட் முன்னணி சீரிஸின் கதைக்களத்துக்குள் குதித்து டீகோடிங் செய்வதற்கு முன் இந்த முதல் அத்தியாயத்தில் முன் விவரங்களையும், சில முக்கிய கதாபாத்திரங்களையும் பற்றி மட்டும் பார்ப்போம்.
‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ கதை மைக், வில், லெவன் போன்றவர்களிடமிருந்து தொடங்குகிறது என பலரும் சொல்ல முற்படுவர். ஆனால், எனக்கு என்னவோ இக்கதை தொடங்குவது ‘டன்ஜன்ஸ் அண்ட் டிராகன்ஸ்’ என்ற ஒரு புகழ்பெற்ற விளையாட்டில் இருந்துதான் தொடங்குவதாக தோன்றுகிறது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் படைப்பாளர்களான டஃபர் பிரதர்ஸ், டஞ்சன்ஸ் & டிராகன்ஸ் (டி&டி) என்ற 70-ஐ சேர்ந்த ஒரு பிரபலமான போர்டு விளையாட்டை மையப்படுத்திதான் இக்கதைக் களத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களை (டெமோகோர்கன், மைண்ட் ஃப்ளேயர், வெக்னா) வடிவமைத்துள்ளனர்.
ஹாக்கின்ஸ் நகரில் தோன்றும் பல நிஜ அச்சுறுத்தல்களான டெமோகாரகன், மைண்ட் பிளேயர் ஆகிய ஜந்துக்களுக்கு நம் பென்டாஸ்டிக் 4 (மைக் வில் டஸ்டின் லூக்கஸ்) அமைப்பினர் இந்த விளையாட்டை வைத்து பெயர் சூட்டுவர்.
இப்படி ஒருநாள் ‘டஞ்சன் அண்ட் டிராகன்ஸ்’ விளையாட்டை மைக் வீட்டில் முடித்துவிட்டு கிளம்பும் வில், ‘நான் விளையாட்டுல தோத்துட்டேன், அந்த டெமோகாரர்கள் என்ன பிடிச்சிருச்சு’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்படுவான். பாவம் சிறுவன், எந்த நேரத்தில் சொன்னானோ, தன் வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் நிஜமாகவே டெமோகார்கன் ஒன்று அவனைப் பிடித்துவிடும். மொத்த ஊரும், வில்லின் அண்ணன் ஜானத்தனும் வில் இறந்தே விட்டான் என்று நம்பும்போது, வில்லின் நண்பர்களான மைக் டெஸ்டின் லூக்கஸ் மற்றும் வில்லின் தாய் ஜாய்ஸ் ஆகியோர் வில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று நம்புவர். இதற்குக் காரணம் இரண்டு:
1. தன் நண்பன் வில்லை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கும் மூன்று சிறுவர்களும் நடுக்காட்டுக்குள் மொட்டை அடித்து மஞ்சள் சட்டையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் லெவன் கண்ணில் படுவாள். அவளை ‘கில்லி’ ஸ்டைலில் வீட்டுக்கு அழைத்து வந்து வேஃபில்ஸ் கொடுக்கும் மைக், லெவனுக்கு தன் மூளையால் பொருட்களை தொடாமலேயே நகற்றக்கூடிய ‘டெலி கைனசிஸ்’ சக்தி இருப்பதையும், பில் சாதாரணமாக தொலையவில்லை என்பதை அவளும் நம்புவதாலும் வில் எங்கேயோ இருக்கிறான் என்ற நம்பிக்கை வருகிறது.
2. தன் மகன் இறந்து விட்டான் என்பதை சற்றும் நம்பாமல் இன்னமும் அவனைத் தேடிக் கொண்டிருப்பாள் ஜாய்ஸ். அப்படி ஓர் இரவு அவர்கள் வீட்டில் திடீரென மின் விளக்குகள் எல்லாம் வித்தியாசமாக அணைந்தும் எரிந்தும் ஒளிர தொடங்கும். ஜாய்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் வில் எங்கேயோ இருந்து அந்த மின்விளக்குகளின் வழியாக பதில் அளித்துக் கொண்டிருப்பான்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு ‘ஈரம்’ படத்தில் ரம்யா தண்ணீருக்குள் பேயாக சென்றது போல வில் லைட்டுக்குள் பேயாக சென்று விட்டானா என்றெல்லாம் யோசித்து கதையை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.
வில் எங்கே சென்றான்?, ஜாய்ஸ் பேசுவது வில்லருக்கு கேட்கிறது, ஆனால் வில் பேசுவது ஏன் ஜாயிஸுக்கு கேட்கவில்லை? வில்லை துரத்திக் கொண்டு வந்த அந்த ஜந்து யார்? லெவன் யார்? நடுக்காட்டில் தன்னந்தனியே யாரிடம் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தாள்? ஏன் மிலிட்டரி போன்ற ஆட்கள் லெவனை தேடி சுற்றிக் கொண்டிருக்கின்றனர்? வில்லைக் கடத்திய வினோதமான கொடூர ஜந்து யார்? - இப்படி பல கேள்விகளுக்கு இன்னும் பதில் தேடி நகரும் விறுவிறுப்பான திரைக்கதை.
இது மட்டும் இல்லாமல் ஜாய்ஸ்க்கு உதவும் போலீஸ் ஆபீஸர் ஹாப்பர், தம்பி மைக்கின் நண்பன் வில் காணாமல் போனது போலையே மறைந்து போன தோழி ‘பார்ப்’-ஐ தேடும் நான்சி, அவளின் அடாவடி செய்யும் (அட்டகாசமான) காதலன் ஸ்டீவ், “இவன் தாண்டா வில்லன்” என்று பார்த்தவுடனே முடிவு செய்ய வைக்கும் துணிவுடன் லெவனை துரத்திக் கொண்டே இருக்கும் டாக்டர் பிரணர் என கதாபாத்திரங்களுக்கும், அவற்றுக்கான பின்னணிகளுக்கும் சற்றும் குறை இல்லை ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸில்.
சீசனுக்கு சீசன் அபிமான கதாபாத்திரங்கள், அச்சுறுத்தும் வில்லன்கள், மனதைப் பிழியும் இறப்புகள், நினைத்தே பார்க்க முடியாத ட்விஸ்ட்கள் என இருக்கையின் நுனிக்கு தள்ளும் எபிசோடுகளுடன் நிறைந்து இருக்கும் ஓர் இணைய தொடர் தான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்.
இப்படி திகிலுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத ஸ்ட்ரேஞ்சர் திங்ஸின் ஐந்தாவது சீசனின் இரண்டாவது பாகம் இந்தியாவில் இப்போது வெளியாகி இருக்கிறது. இதுவரை ஸ்டேரேஞ்சர் திங்ஸ் பார்க்காதவர்கள் முடிந்த அளவுக்கு ஸ்பாய்லர்ஸை தவிர்த்து நம் கட்டுரைத் தொடருக்கு திருப்பி வாருங்கள். அதே சீரிஸின் தீவிர ரசிகர்களே, பல்வேறு கதாபாத்திரங்களை பற்றியும் டைமென்ஷன் எக்ஸ் அப்சைட் டவுன் போன்ற தியரிஸ் பற்றியும் வாசித்துக் களிக்க திருப்பி வாருங்கள். சந்திப்போம் மறுபக்கத்தில் (upside down).
(ஆழமாகத் தொடர்வோம்...)