ஓடிடி விமர்சனம்

Silenced: மக்களின் ‘மவுனம்’ கலைத்து சட்டத்தையே மாற்றிய கொரிய படைப்பு | ஓடிடி திரை அலசல்

முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்

சில திரைப்படங்கள் ரசிப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தை மட்டுமின்றி நாட்டின் சட்டங்களையே மாற்றும் அளவுக்கு வல்லமை கொண்டவை. தென் கொரியாவின் ‘சைலைன்ஸ்டு’ (Silenced - கொரிய மொழி உச்சரிப்பு ‘டொகானி’) அப்படியான அரிதான திரைப்படங்களில் ஒன்று.

வாங் டாங் ஹ்யூங் (Hwang Dong-hyuk) இயக்கத்தில் 2011-ல் வெளிவந்த இந்தப் படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. காது கேளாத குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை பற்றிய இந்தப் படத்தை நாம் பார்க்கும்போது, நம் மனதில் ஏற்படும் அந்த ஒரு பயமும் படபடப்பும்தான் திரைக்கதைக்கான வெற்றி.

ஆம், இந்தப் படத்தின் காட்சிகளை நாம் எளிதாக கடந்துவிட முடியாது. இதன் தாக்கம் என்பது படக் கதைக்கருவில் மட்டும் அல்ல, அந்தக் கதை எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்பதிலும் இருக்கிறது.

பிரபல தென் கொரிய பெண் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான காங் ஜி-யங் (Gong Ji-young) எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை யதார்த்தத்தின் வழியே காட்சிகளை சொல்கிறது. தேவையற்ற ‘சினிமாத்தனம்’ அனைத்தையும் தவிர்த்து, உண்மைச் சம்பவத்தை அதன் ‘நிஜம்’ கலையாமல் கொண்டு செல்லப்பட்டிருப்பதால் தான் இந்தப் படம் ஒரு மாபெரும் சமூக மாற்றத்துக்கான செயலியாக இருந்திருக்கிறது.

          

‘சைலன்ஸ்டு’ திரைப்படம் வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படவில்லை என்பது நிச்சயம். சமூகத்தில் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் குழந்தைகளுக்கு நடக்கும் கொடூரத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைத்த படம். இதன் காட்சிகள் பார்வையாளர்களை அமைதியாக விடாது. அந்தக் காட்சிகளின் தாக்கம் நீண்ட நேரம் மனதில் நீடிக்கும். அதைவிட முக்கியமாக, இது தென் கொரியாவில் சட்ட மாற்றங்களுக்குக் காரணமான ஒரு படம். பார்க்க கடினமான படம். ஆனால், அவசியம் நாம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.

கதையும் களமும்

இந்தக் கதை காங் இன்-ஹோ (Kang In-ho) என்ற ஒரு கலை ஆசிரியரைப் பின்தொடர்கிறது. அவர் மூஜின் என்ற பனி படர்ந்த சிறிய நகரத்தில், காது கேளாத மாற்றுத் திறன் குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார். ஆரம்பத்தில் அந்த இடம் சாதாரணமாகத் தோன்றினாலும், விரைவில் ஏதோ தவறு இருப்பதை அவர் உணர்கிறார். குழந்தைகள் பயத்துடன் இவரிடம் இருந்து விலகி நிற்கிறார்கள், பேசத் தயங்குகிறார்கள். அவர்களுடன் நெருக்கமாகி வரும்போது, அவர்களை பாதுகாக்க வேண்டியவர்களாலேயே வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது கான் ஹோவுக்கு தெரியவருகிறது.

அந்தப் பள்ளியில் நடைபெறும் குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர முடிவு செய்கிறார் காங் இன்-ஹோ. அதற்காக மனித உரிமை செயற்பாட்டாளர் சியோ யூ-ஜின் (Seo Yoo-jin) உடன் இணைந்து செயலில் ஈடுபடுகிறார். ஆனால், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாமல், காவல் துறையினர், வழக்கறிஞர்கள், மேலும் முழு சமூகமே உண்மையை மறைக்க ஒன்றிணைந்திருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் விரைவில் உணர்கின்றனர்.

இன்-ஹோ தனது வேலையை இழக்கிறார். எனினும், குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக முஜின் நகரத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே தங்குகிறார். வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டாலும், எதிர் தரப்பு வழக்கறிஞர் தென்கொரிய சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையையே வழங்க வேண்டும் என்று வழக்காட, குற்றவாளுகளுக்கு மிகவும் குறைந்த தண்டனையே வழங்கப்படுகிறது. அந்த தண்டனை விவரம் பார்வையாளர்களாகிய நமக்கு தெரியவரும்போது கே-டிராமாக்கள் நம்மில் அமைத்து வைத்திருக்கும் ‘தென் கொரியா’ மீதான பிம்பம் சற்று அசைக்கப்படலாம்.

குறைந்தபட்ச தண்டனை கிடைத்த மகிழ்ச்சியில் பாலியல் குற்றவாளிகளான பார்க் போ-ஹ்யூன் (Park Bo-hyun) உள்ளிட்டோர் தங்களது வழக்கறிஞருடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்பின் வீடு திரும்பும்போது, வழியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவனான மின்-சு (Min-su) என்ற சிறுவனுடன் பார்க் மோதுகிறான். அந்தச் சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ய முயல்கிறான் பார்க். ஆனால், சிறுவன் மின்-சு வேறு வழியின்றி பார்க்-போ-ஹ்யூனை கத்தியால் குத்துகிறான். அதன்பின், கடும் கோபம் கொள்ளும் பார்க் கொடூரமாக மின்-சுவை தாக்குகிறான். அப்போது நடக்கும் மோதலின் தொடர்ச்சி, அருகிலுள்ள ரயில் பாதை வரை நீள்கிறது. பார்க்கும் சிறுவன் மின்-சுவும் ரயில் மோதி உயிரிழக்க நேரிடுகிறது.

சிறுவன் மின்-சு மரணத்துக்கு நீதி கிடைக்க இன்-ஹோவும் மாணவர்களும் முனைகின்றனர். தெருவெங்கும் போராட்டக்காரர்கள் நிறைந்திருக்கிறார்கள். காவல் துறை கூட்டத்தை கலைக்க முயல்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் கேட்கவும் பேசவும் முடியாதவர்கள் என்பதால், அவர்கள் எச்சரிக்கைகளை அறியாமல் அங்கேயே நிற்கிறார்கள். இதனால் தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைக்கிறது காவல் துறை.

இந்தக் கலவரத்துக்கு இடையே மின்-சு புகைப்படத்தை கையில் ஏந்தியபடி நிற்கிறார் இன்-ஹோ. “எல்லாரும் பாருங்கள்... இந்தக் குழந்தைக்கு கேட்கவும் பேசவும் முடியாது. இந்தக் குழந்தையின் பெயர் மின்-சு” என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறார். இறுதியில் காவல் துறையால் அவர் கைது செய்யப்படுகிறார்.

அதன்பின், எல்லாம் முடிந்ததும் சியோல் நகருக்குத் திரும்பும் இன்-ஹோவுக்கு யூ-ஜின்னிடம் இருந்து வரும் மின்னஞ்சல் சொல்லும் தகவல் இதுதான்:

‘மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், குழந்தைகளின் நிலைமையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.’

படத்தில் திடீர் திருப்பங்கள் இல்லை. சிறிய குறிப்புகள், உடைந்த நினைவுகள், அமைதியான உண்மைகள் வழியாக காட்சிகள் நகர்கின்றன. அதனாலேயே இது ஒரு கற்பனை போல் இல்லாமல், நிஜத்தை மிக நெருக்கமாக பார்க்கும் அனுபவம் நமக்கு கிட்டுகிறது.

அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவை நீதியை விட மேலோங்குகின்றன என்பதை படம் காட்டுகையில், மனதில் ஒருவித வெறுப்பும், சோர்வும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. படத்தின் முடிவில், ‘முழுமையான நீதி எப்போதும் கிடைக்காது’ என்பதைக் காட்டுகையில் சற்று கோபம் கூடுதலாக வரும். ஆனால், அந்த நிஜத்தை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

பின்புலமும் திரை மொழியும்

உண்மையை அப்படியே காட்சிகளாக்கப்பட்டதால் தான், அந்தச் சம்பவங்களின் கொடூரத்தை நாம் நிஜமாக உணர்கிறோம். மெதுவாக பதற்றத்தை தட்டியெழுப்பி, எந்த எளிய முடிவையும் தராமல், அதன் விளைவுகளோடு நம்மை விட்டுச் செல்கிறார் இயக்குநர் வாங் டாங் ஹ்யூங் (Hwang Dong-hyuk). இவர் நெட்ஃப்ளிக்ஸில் உலகப் புகழ்பெற்ற ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைலன்ஸ்டு’ படத்தின் தாக்கத்தை ‘ஸ்குவிட் கேம்’ தொடரின் காட்சி அமைப்பிலும் கண்டுணரலாம்.

மிகுந்த கட்டுப்பாடுடனும், உரத்த சிந்தனையுடனும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மிகைப்படுத்தல்களை அவர் தவிர்க்கிறார். காட்சிகள் எளிமையாகவும், சில நேரங்களில் குளிர்ச்சியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அது, என்ன நடக்கிறது என்பதை மட்டும் கவனிக்க வைக்கிறது. இந்த அடர்த்தியான அணுகுமுறையே உணர்ச்சியின் தாக்கத்தை மேலும் கூட்டுகிறது.

இந்தப் படம், நம்மை உணர்வுபூர்வமாக தாக்குவதற்கு நடிகர்களின் பங்களிப்பும் முக்கியமானது. குறிப்பாக, ‘காபி பிரின்ஸ்’ என்ற தொடரின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் காங் யூ (Gong Yoo) பங்கு மகத்தானது. அவர் கட்டாய ராணுவ சேவையில் இருந்தபோது, இந்தப் படத்தின் அசல் வடிவமான நாவலை அவருக்கு அவரது நண்பர் அனுப்பி படிக்கச் சொல்லியிருக்கிறார்.

அந்த நாவலைப் படித்த பின்னர் காங் யூ இதைக் கட்டாயம் திரைப்படமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் எடுக்கப்பட்ட படம்தான் இந்த ‘சைலன்ஸ்டு’. அதில், காங் இன்-ஹோ கதாபாத்திரத்தில் அவர் அமைதியானதும் ஆழமானதுமான நடிப்பை அளித்திருக்கிறார். அவர் ஒரு சாதாரண காதாநாயனாக நடிக்காமல், கதையை ‘நாயகனாக’ தேர்ந்தெடுத்து நடித்ததால் என்னவோ, அவர் ‘காபி பிரின்ஸ்’ தொடரில் இருந்த ‘ஹீரோ’ என்ற பிம்பத்தில் இருந்து ஒரு சாதாரண மனிதனாக காட்சியளிக்கிறார்.

குழப்பத்துடனும் தயக்கத்துடனும் இருக்கும் மனிதன், தன் இயலாமையை வெளிப்படுத்தும்பொழுது அவர் காங்-ஹொவி இயலாமையை மட்டுமல்ல, நம்முடைய இயலாமையையும் பிரதிபலிக்கிறார். அந்த இயல்பான தயக்கம் அவரை நம்பத்தகுந்தவனாக மாற்றுகிறது. மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கு பதிலாக சிறிய முகபாவங்களால் அவர் கதையை தாங்கிச் செல்கிறார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளாக நடித்த சிறுவர்கள் மிகவும் நம்பத்தகுந்த நடிப்பை வழங்குகின்றனர். படத்தின் காட்சிகள் நம் மனதில் அப்படியே நிற்பதற்கு காரணம், இந்தக் குழந்தைகளின் நடிப்பும்தான்.

சைகையில் தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்லும்பொழுதும், சாட்சிக் கூண்டில் அமர்ந்து நடுங்கியபடியே அங்கே தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிக்கும் காட்சியிலும், தன் பாட்டியே எதிர் தரப்பிடம் சமரசம் பேசிவிட்டார் என்ற தெரிந்ததும் கதறும் காட்சியிலும் அந்தக் குழந்தைகளின் நடிப்பு மனதைப் பிழியவைக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் மிகவும் எளிமையாக கையாளப்பட்ட ஒன்று. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை முன்னிலையாக வைக்கப்படவில்லை என்றாலும், அவை கதைக்கு துணையாகவும், கதையோடு நம்மை ஒன்றச் செய்வதாகவும் இருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் கிம்-ஜி-யோங் தனது கேமரா வழியாக இந்தக் கதையின் அடிப்படையைக் கொண்டு பார்வையாளர்களின் மனோபாவத்தை கட்டமைக்க முக்கியப் பங்கு வகிக்கிறார். மங்கலான நிறங்கள், குளிர்ச்சியான ஒளி, எளிய ஷாட்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அழகுக்காக காட்சிகள் அமைக்கப்படவில்லை. மாறாக, சிறிது தூரத்தில் இருந்து நிகழ்வுகளைப் பார்க்கும் உணர்வு தரப்படுகிறது. அதனால், இது இன்னும் நிஜமாகவும், நம்ம சற்று அசவுகரியமாகவும் உணரவைக்கிறது.

சட்டமும் மாற்றமும்

2011-ல் வெளியான இந்தப் படத்தின் வெற்றி எத்தகையது என்றால், அது தென் கொரியாவின் சட்டத்தையே மாற்றி அமைத்த ஒன்றாக காணப்பட்ட வெற்றி. ‘சைலன்ஸ்டு’ படமும் வெளியான பிறகு, தென் கொரியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற மக்களின் குரல் வலுக்க ஆரம்பித்தது.

மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட, இந்த அழுத்தம் தாங்காமல் தென் கொரிய அரசு இந்தத் திரைப்படத்தின் தலைப்பிலேயே ‘Dogani Act’ என்ற சட்டத்தை நிறைவேற்றினர்.

இந்த ‘டொகானி சட்டம்’ என்பது வெறும் சட்ட திருத்தம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம். இதற்கு முன்பு, பல வழக்குகள் கால வரம்பு காரணமாக நீதிமன்றத்தில் கூட செல்வதற்கான வாய்ப்பை இழந்துவிட, இந்த திருத்தச் சட்டத்துக்குப் பிறகு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீதான வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற மாற்றம் ஏற்பட்டது. படம் தந்த தாக்கத்தின் விளைவால் மக்கள் வெகுண்டெழுந்து தந்த அழுத்தத்தால் இது சாத்தியமானது.

சிறுவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்து சமூகத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டது. ‘டொகானி லா’ என்ற இந்தச் சட்டம், ஒரு குற்றத்துக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் மனநிலையை மாற்றிய மகத்தான நிகழ்வு.

ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது அரிது. ‘சைலன்ஸ்டு’ ஓர் உண்மைக் கதையை மட்டும் சொல்லவில்லை; ஒரு நாட்டு குடிமக்களை தங்களது சமூகத்தில் நடக்கும் கொடூர உண்மையை எதிர்கொள்ள வைத்தது. அந்த மக்களின் விழிப்புணர்வே சட்டத் திருத்தத்துக்கு வழிவகுத்தது.

கலை வழியே விழி திறக்குமானால், அது கலைக்கும் கலைஞனுக்கும் கிடைக்கும் வெற்றி என்பதை ‘சைலைன்ஸ்டு’ போன்ற படங்கள் நிரூபிக்கின்றன. அடர்த்தியான திரை அனுபவமும் நல்கும் இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT