“எந்த மனிதனும் நீண்ட காலத்துக்கு, தனக்குள் ஒரு முகத்தையும், கூட்டத்தின் முன் வேறொரு முகத்தையும் அணிந்து கொண்டு வாழ முடியாது; இறுதியில் எது உண்மையான முகம் என்று அவனே தடுமாறி விடுவான்” - Nathaniel Hawthorne, The Scarlet Letter.
இவ்வுலகில் முகமூடி தரிக்காத மனிதன் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு மனிதனும் தான் சுமக்கும் முகமூடிக்கு ஒரு நியாயத்தையும் கற்பிப்பான். ஆனால் அந்த முகமூடி எவ்வளவு இறுக்கமாக இருக்கிறதோ, அதுதான் அந்த மனிதன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதற்கான அளவுகோல்.
2024-ல் வெளியான ‘ரகு தாத்தா’ (Raghu Thatha) திரைப்படம் மேலோட்டமாக இந்தி எதிர்ப்புப் படம் என்ற முகத்தைக் கொண்டிருந்தாலும் அதை முழுவதுமாக அப்படியே சுருக்கிக் கடந்துவிட முடியாது. அறிவுஜீவி என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை, பகுத்தறிவு வேஷத்தில் இருக்கும் போலித்தனத்தை நகைச்சுவை நடையில் உரித்துக் காட்டியிருப்பார் அறிமுக இயக்குநர் சுமன் குமார். அதில் அவர் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்ட பிரச்சினை தான் ‘இந்தி திணிப்பு’ என்பது படம் முடியும்போது எனக்குப் புரிந்தது.
ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த காமெடி டிராமாவில் கயல்விழி பாண்டியன் என்ற க.பா (கீர்த்தி சுரேஷ்) மற்றும் தமிழ்ச்செல்வன் என்ற செல்வன் (ரவீந்திர விஜய்) வழியாக, ‘அறிவுஜீவிகள்’ சிலரின் ‘அக்கறை’ நாடகத்தை சிரித்து சிந்திக்கலாம்.
படத்தின் டைட்டில் பாடலே அதகளமான ஆரம்பம்தான். ‘அடடா தினேஷா...’ என்ற அந்தப் பாடலில் ஆண்கள் எப்படி வெளியில் பெண்ணுரிமை பேசிக்கொண்டு வீட்டுக்குள் அடக்குமுறை செய்பவர்களாக, கலாச்சார காவலர்களாக இருக்கிறார்கள் என்பதை கானா ஸ்டைலில் வரிக்கு வரி பிச்சி உதறியிருப்பார்கள்.
கயல்விழி வங்கியில் பணிபுரிபவள். சட்டமும், ஊரும் நிர்ணயித்த திருமண வயதை தாண்டத் துணிந்தவள். அவளுக்கு இந்தி எதிர்ப்புக் கொள்கை, ஆண் - பெண் சமத்துவம் முக்கியம். அத்தனையையும் விட பெரியாரை கற்றுத் தெளிந்தவளுக்கு, வீட்டில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பவளுக்கு அவர்களை உள்வாங்கிய ஒருவன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதே எண்ணம்.
படத்தில் கயல்விழியின் முதல் வசனமே ‘அடக்க ஒடுக்கமான பொம்பளப் பிள்ளையால்லாம் இருக்க முடியாது. வீட்டில் கூட என் இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட்டுக்க உரிமை கிடையாதா?’ என்பதே.
அவள் தன்னுடைய உரிமைகளுக்காக தானே குரல் கொடுக்கக் கூடியவள்தான். அப்படிப்பட்ட கற்றுத் தெளிந்த, சுதந்திரமான கயல்விழிக்கு வலைவிரிப்பவனாகத் தான் முதல் காட்சியிலேயே அறிமுகமாகிறான் நாயகன் தமிழ்ச்செல்வன்.
எத்தனை கற்றுத் தெளிந்திருந்தாலும், சுய சம்பாத்தியத்தில் இருந்தாலும் கூட வாழ்க்கைத் துணை தேர்வில் பெண்கள் சிலர், சில நேரங்களில் ஏமாந்துதான் போகின்றனர். அதுவும் அறிவுஜீவி என்ற அடையாளத்தைக் கண்டுவிட்டால், அது உண்மைதானா என்று பெரும்பாலான பெண்கள் ஆராய்வதில்லை.
கயல்விழி மட்டும் விதிவிலக்கா என்ன? அறிவுஜீவி ஆண்கள் தாங்கள் குறிவைக்கும் பெண்களை நோக்கி மிக நேர்த்தியாகக் காய் நகர்த்தக் கூடியவர்கள்.
அதேபோல், கயல் - தமிழ்ச்செல்வன் சந்திக்கும் முதல் காட்சியில் விரியும் சில நிகழ்வுகளே அதற்கு உதாரணங்கள். ‘ஏன் சோகமா இருக்குறீங்க?’ என்ற அக்கறையான விசாரிப்பு, ‘எனக்கு வாசிப்பு தண்ணி பட்டப்பாடுங்க...’ என்று தன் அறிவுஜீவித்தனத்தை படம் போட்டுக் காட்டுவது, தனது பணியில் தான் எத்தனை பராக்கிரமசாலி என்று பெருமை பேசுவது, ‘உங்களுடைய ரசிகன் நான்...’ என்று கசிந்துருகுவது, ‘உங்கள் பேரிலேயே எழுதுங்களேன்’ என்று ஊக்குவிப்பது, ‘நீ..போ.. வா’ என்று கூப்பிடலாமே என்று தாராளம் காட்டுவது என்று அந்தக் காட்சி இருக்கும்.
நான் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? ஒரு மனிதனின் முகமூடி எத்தனை இறுக்கமானது என்பதைப் பொருத்தே அவன் எத்தகையவன் என்பதை வரையறுக்க முடியும் என்று. தமிழ்ச்செல்வனின் நோக்கமும், அவன் திட்டமும் பார்வையாளர்களாகிய நம்மை முதல் காட்சியிலேயே தமிழ்ச்செல்வனை கேடுகெட்ட அயோக்கியன் பட்டியலில் நிறுத்தச் செய்துவிடும்.
“கை எட்டும் தூரம் வந்தும்... தண்ணீர் பாம்பாய் நழுவிப் போனாலும் விடமாட்டேன்... குறி பார்ப்பேன் அம்பை உருவி” என்று ஓர் ஆண் திட்டம் போட்டுவிட்டால் அவன் எவ்வளவு தூரம் செல்வான் என்பதற்கு தமிழ்ச்செல்வன் சிறந்த உதாரணம்.
முற்போக்கு பேசும் ஆண்களில் சிலர், இன்றளவும் அந்தப் போர்வையில் தங்கள் சுயலாபத்துக்காக பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முற்படுகின்றனர்.
இந்தப் படம் 1970-களின் கதைக்களம் கொண்டது. இப்போதும்கூட முற்போக்கு பேசுவோரில் சிலர் ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி’ வலைவிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, தமிழ்ச்செல்வன்கள் வகையறாக்களை வகைப் பிரிக்கத் தெரிந்தால் மட்டுமே, கற்றுத் தெளிந்தவள் என்பது முழுமை பெறும்.
தமிழ்ச்செல்வனின் பில்ட் - அப்களில் அவனை எடுத்த எடுப்பிலேயே காதலிக்கும் அளவுக்கு முட்டாள் இல்லையென்றாலும், அவன் பேசுபவை எல்லாம் சமகால பதத்தைப் பயன்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் ‘உருட்டு’ என்பதை புரிந்துகொள்ளும் அறிவில்லாதவள் தான் கயல்விழி. காரணம் வீட்டில் அவளைச் சுற்றியிருக்கும் அப்பா, அண்ணன், தாத்தா பதவியில் உள்ள ஆண்கள்.
முற்போக்கு பேசும் ஆண்களே சிலர்தான். அந்தச் சிலரில் சிலரின் முற்போக்குப் பார்வையும், செயலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
உதாரணத்துக்கு திருமணம் மகள் விருப்பம்தான் என்றாலும் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தந்தை மிரட்டுவது, தங்கையால் தனது திருமணம் தடைபடக் கூடாது என்பதில் அண்ணன் சுயநலமாக இருந்து கொள்வது, “எனக்காக திருமணம் செய்ய மாட்டியா?” என்ற சென்டிமென்ட் கார்டுடன் தாத்தா வருவது என்று அந்த வீட்டு ஆண்களின் முற்போக்குக்கு எல்லாம் எல்லை இருக்கிறது.
அதனால்தான் அவர்கள் கொண்டு வரும் மணமகன் தனக்கு ஒத்துவராது என்ற எண்ணம் கயல் மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.
அந்த வெற்றிடத்தை நிரப்பும் முகமூடியோடு வருபவன் தான் தமிழ்ச்செல்வன். உங்கள் எழுத்து பெண்ணியத்துக்கு அஸ்திவாரம் - கடலூருக்கு ஜேகே என்றால் வள்ளுவன்பேட்டைக்கு க.பா - இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் - இப்படி படத்தில் தமிழ்ச்செல்வன் பேசியதை இந்தக் கட்டுரையை நான் எழுதும் / நீங்கள் வாசிக்கும் இந்த நொடி எங்கேனும் ஒருவன் ஒருத்தியிடம் பேசிக் கொண்டுதான் இருப்பான்.
அந்த அறிவுஜீவி பாவனைகளும், பரந்த மனசு போல் ஒலிக்கும் வார்த்தைகளும், லேடீஸ் ஃபர்ஸ்ட் என்கிற போலி நாசூக்குகளுமே, தமிழ்ச்செல்வனை கயல்விழி தேர்ந்தெடுக்கக் காரணமாகின்றன.
தாத்தாவின் சென்டிமென்ட்டல் அணுகுமுறை காரணமாகவும், அவள் பார்த்த ஆண்களிலேயே அவன் தேவலாம் என்பதாலும் கயல்விழி பாண்டியன் தன் மணாளனாக தமிழ்ச்செல்வனை தேர்ந்தெடுக்கிறாள்.
அதன் பின்னர்தான் தமிழ்ச்செல்வனின் உண்மை முகம் உக்கிரமாகிறது. பழமே நழுவி பாலில் விழுந்தால் பருகாமல் விடுவேனோ? என்று மிடுக்காகிறான்.
ஆணாதிக்கவாதிகளுக்கு பெண்கள் பச்சைக் கொடி காட்டும்வரை தான் அவர்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷம். வசப்பட்டுவிட்டால் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய உடைமை.
தமிழ்ச்செல்வனுக்கு கயல்விழி அப்படித்தான் ஆகிவிடுகிறாள். அவனது டைரியில் இருக்கும் வரிகளில் தான் முகமூடி இல்லாத செல்வா, கயலுக்கு அம்பலமாவான்.
“நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் பெரியார் முற்போக்கு சிந்தனையை முழு இந்தியாவும் ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும்” என்று பேசிய தமிழ்ச்செல்வனின் டைரியில், “பெண்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் தலையில் ஏறிக் கொள்வார்கள்”, “கட்டிக்கப் போறவனை நீ வா போ என்று கூப்பிடுவதா?”, “எழுது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? கள்ளக்காதல் நுணுக்கம் எப்படித் தெரியும்! எழுத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.”, “படித்த திமிர்”, “கூடுதல் சம்பளம் வாங்கவிடவே மாட்டேன்”, “தாயாக இருந்தாலும் தாலி இழந்தவள் அமங்கலி தானே”, “வரதட்சணை என்பது ஒரு பெண் கணவன் வீட்டில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக தங்க, சாப்பிடக் கொடுக்கும் முன்பணம்” என்று விஷம் ததும்பும்.
“பொறுத்திரு செல்வா கல்யாணம் முடியட்டும்” என்ற வில்லத்தனம் தன் கோர முகத்தை காட்டியிருக்கும்.
பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்தது அப்பாவே என்றாலும் கூட, மாப்பிள்ளை வீட்டாரை விரட்டியடிக்கும் துணிச்சல் கொண்ட கயல்விழி புற்றுநோயில் அவதிப்படும் தாத்தா மீதான கருணையால், அகப்பட்டுக் கொண்ட சிக்கலில் இருந்து தாத்தா மனம் கோணாமல் வெளிவர முற்படுவாள்.
இந்தச் சமூகம் எப்போதும் பெண்கள் கூடுதல் கருணையுடன், அபரிமித மன்னித்தருளும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, நிர்பந்திக்கிறது.
சில நேரங்களில் கற்றறிந்த பெண்களில் சிலர் கூட அது தங்களின் தார்மிகக் கடமைபோல் தூக்கிச் சுமக்கின்றனர்.
கயலும் அப்படித்தான். மொட்டைக் கடிதாசி போட்டு தன் எழுத்துக்கு முட்டுக்கட்டை போட முயன்ற அயோக்கியன் செல்வனை ‘மண்டைய உடைச்சிடுவேன்’ என்று பஜ்ஜி சூஜி சாப்பிடும் மாப்பிள்ளை வீட்டாரை விரட்டுவதுபோல் விரட்டாமல் தாத்தாவுக்காக நாசூக்காக கழற்றிவிட திட்டமிட்டுகிறாள்.
ஊருக்கு கதை எழுதும் க.பா என்ற கயல்விழி பாண்டியனுக்கு, இந்தி தேர்வு எழுதி புரோமோஷன் வாங்கி வேறு ஊருக்கு செல்ல முயன்றாலும் அதற்கு முட்டுக்கட்டை போட தாராள மனசு முகமூடி இருக்கும் என்று அவளுடன் பணி புரியும் வாசிப்பு வாசம் இல்லாத பெண்ணுக்குத் தெரிந்தது தெரியாமல் போய்விடும்.
தவறுகளை வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் கொஞ்சமும் தயவு காட்டாமல் தட்டிக்கேட்க பெண்கள் பழக வேண்டும். துரோகங்களைக் கடப்பதைவிட துரோகிகளை தக்க பதிலடியோடு விலக்கிவைக்க வேண்டும். ரவுத்திரம் பழகுதல் பெண்ணுக்கு அழகு. பெண்ணியத்துக்கு முழுமை.
தாத்தாவுக்காக குறுக்கு வழிகளில் முட்டி மோதினாலும், செல்வனை அவன் பாணியிலேயே மொட்டைக் கடிதம் மூலம் கடத்தி மறைத்தாலும் ‘பெண்ணியம் பேசும் பதறே’ என்றளவில் அடிக்க அடிக்க மீண்டெழுந்து வந்த செல்வனை துணிந்து தூக்கி எறிவாள் கயல்விழி.
பொறுத்தது போதும் க.பா என்று வெகுண்டெழுந்த அவள் முன் அப்பாவின் மிரட்டல்கள், தாத்தாவின் கண்ணீர், அம்மாவின் வசவு, இந்தி சபாவை கொண்டுவர துடிக்கும் ரங்குவின் உறுதிப்பாடு, ஆணாதிக்க திமிரின் உருவகம் செல்வன் என்று எல்லாம் அணிவகுத்திருக்க அத்தனையையும் வால் வீச்சி சரித்துத் தள்ளுவாள் கயல்விழி.
‘அடங்காப்பிடாரி’ என்று அதட்டும் அம்மாவிடம், ‘படித்த ஆணான செல்வன் செய்த தவறுகள் பொருட்டில்லைல..’ என்பாள். ‘உன்னிடம் கேட்டுத்தானே திருமணம் ஏற்பாடு செய்தோம்’ என்ற தந்தையின் வாயை அடைப்பாள். கண்ணீருடன் வரும் தாத்தாவிடம் ‘திடீர்னு நடந்தா திணிப்பு, காலங்காலமாக நடந்தா கலாச்சாரமா?!’ என்று கர்ஜித்து வாயடைக்க வைப்பாள்.
தமிழ்ச்செல்வன் என்ற செல்வன் போன்ற அறிவுஜீவி முகமூடிகளுக்கு ஒரு துருப்புச் சீட்டு உண்டு. எப்போது பெண் திமிறுகிறாளோ அப்போது ‘என்னடா’ என்று பாந்தமாக வருவார்கள். படத்தில் கயல்விழி அவ்வாறாகத் திமிறும் மூன்று இடங்களிலும் செல்வன் என்னடா, இல்லடா என்று கரிசனம் காட்டுவான்.
உண்மையில் படித்தும் உலகமறிந்தும் மோசமான ஆண்களிடம் சிக்கிக் கொள்ளும் பெண்கள், அத்தகைய ஆண்களின் அறிவுஜீவி முகமூடிகளிலும், அக்கறை படலங்களிலும் தான் கரைந்துவிடுகிறார்கள்.
தமிழ்ச்செல்வனின் முகமூடி கிழிந்ததை தான் அறிந்திருந்தாலும் ஊர் அறியச் செய்யும் கயல்விழி உண்மையில் அவள் எழுத்துக்கும் கொள்கைக்கும் தகுதியானவள் தான் என்பது போல் படத்தின் திருமண கலாட்டா காட்சி அமைந்திருக்கும்.
கயல்விழி தன்னை அம்பலப்படுத்தியதும் ‘பொட்டச்சி’ என்று சிறுமைப்படுத்தும் செல்வனை, கயலின் அண்ணி ‘லாரி ஏத்தி கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டி அதிரவைப்பாள்.
மேல் ஈகோ கொண்ட ஆண்கள் எந்தச் சூழலிலும் தாங்கள் அடைய நினைப்பதை, அடைந்ததை இழக்க மாட்டார்கள். அப்படித்தான், “என் அறிவுக் கண்ணை திறந்துவச்சுட்ட கயல்” என்று கண்ணீருடன் நீட்டி முழங்கும் செல்வத்தை ஓங்கி ஒரு அறைவிட்டு திருமணத்தை நிறுத்துவாள் அவனின் தாய். “அப்படியே அப்பனைப் போலவே...” என்று அவர் சொல்வது ஆணாதிக்கம் எப்படி வம்சவழியாகக் கடத்தப்படுகிறது என்பதற்கு சாட்சி.
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன். எனக்கு இந்தி தேவை என்றாள் கற்பேன். ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன். எனக்கு திருமணம் தேவை என்றாள் செய்து கொள்கிறேன் என்று தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறாள் கயல்விழி.
இறுதிக் காட்சியில் எழுத்தாளர் க.பா.வை தேடி வரும் திரைப்பட இயக்குநராகும் ஆசை கொண்ட இளைஞரிடம், நீங்கள் தேடும் க.பா என்ற கயல்விழி பாண்டியன் நான் தான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறாள்.
அவளுடைய சிந்தனைகளை வெகுஜனத்துக்கு கொண்டு செல்ல கொல்கத்தா செல்ல வேண்டியதில்லை, புனைப்பெயரும் தேவையில்லை, பெண் என்ற அடையாளத்துடன் என் பணிகளைத் தொடர்வேன் என்று துணிகிறாள்.
குற்ற உணர்ச்சிகள் இன்றி, ஒளிவுமறைவின்றி ஒரு பெண் தன் வாழ்க்கையை வாழ்கிறாள். தன் துயர்களைக் கடக்கிறாள் என்றாள் அவள் வெற்றி பெற்றவள்.. இமயம் தொட்டுவிட்டவள்.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்