மருந்து விற்பனை பிரதிநிதி பணிக்காக செல்லும் நிவின் பாலி, தொடக்கத்தில் விற்பனையில் சாதிக்க முடியாமல் திணறுகிறார். இச்சூழலில் கர்ப்பிணி பெண்களுக்கான புதிய மருந்தை விற்பனைக்கு அவர் பணிபுரியும் பார்மா நிறுவனம் கொண்டுவருகிறது. பரிசோதனை அடிப்படையில் கர்ப்பிணிகளிடம் கொண்டு செல்வதில் முன்னணியில் நிவின்பாலி இருக்கிறார்.
திடீரென்று அந்நிறுவனம் அந்த மருந்தை நிறுத்துகிறது. மருந்தை சாப்பிட்ட பலருக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் பாதிப்பு இருப்பதை சில ஆண்டுகளுக்கு பிறகு அறிகிறார். அதையடுத்து டாக்டர் சுருதி மூலம் அந்த மருந்தின் பாதிப்பை உணரும் நிவின்பாலி சட்டப்போராட்டத்துக்கு தயாராகிறார். இதுபோல் மருந்து நிறுவனங்களின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் டாக்டர் ரஜித் கபூரின் அமைப்பில் இணைகிறார்.
”வியாதியை குணப்படுத்துவது மருந்து மூலக்கூறு தான், பெரிய பிராண்ட் இல்லை” என உறுதியாக இவ்வமைப்பினர் இருக்கிறார்கள். இதில் பெரிய நிறுவனத்தின் சூழ்ச்சியால் டாக்டர் சுருதி கொல்லப்படுகிறார். அதையறிந்து வெளிநாட்டிலிருந்து திரும்பும் அவரது கணவர் டாக்டர் நரேனும், நிவின்பாலியின் முன்னாள் காதலி வீணாவும் இப்போராட்டத்துக்கு உதவ தொடங்குகின்றனர்.
மருந்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட நர்ஸ் அஸ்வதி மனோகரன் தனது உதவியை முழுமையாக செய்கிறார். அந்த சட்டப்போராட்டத்தில் அவர்கள் வென்றார்களா என்பதே இந்த மினி வெப் சீரிஸ் ‘பார்மா’. மலையாள மூலமாக இருந்தாலும் தமிழிலிலும் ஜியோ ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். மொத்தமே மூன்று மணி நேரத்துக்குள் முடிகிறது.
மருந்து நிறுவனங்களின் பின்புலத்தையும் டாக்டர்களை அணுகுவது தொடங்கி பல விஷயங்களை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். “ரிசர்ச் டீமோட வார்னிங்கை கேட்டு நடந்தா புது மருந்து எதுவும் லாஞ்ச் ஆகாது” என்ற வசனமே இதற்கு சாட்சி.
மருந்து விற்பனை பிரதிநிதி டாக்டரிடம் பேசும் வசனங்களும் ஷாக் தான். “இருமல் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை சிபாரிசு செய்யுங்க டாக்டர். இருமல் இல்லாத குழந்தைகளுக்கும் இதையே எழுதுங்க. தெரியவா போகுது?” என்பதற்கு டாக்டரின் ரெஸ்பான்ஸும் திடுக்கிட வைக்கிறது.
மருந்து பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசுகையில், “நம்ம மெடிக்கல் வேலை ஒரு வகைல சாபம் தான், மத்தவங்க அழுகைல தான் நம்ம பிஸினஸ்” போன்ற வசனங்கள் சுளீரென்கிறது.
மருந்து நிறுவனத்துக்கு எதிராக போராட்டக் களத்தை கட்டமைக்கும் ரஜித் கபூரின் நடிப்பு இதில் சிறப்பு. தனது வழக்கறிஞர் மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும்போது முக்கிய வழக்குக்காக சாட்சி கூண்டில் ஏறும்போது அவரது மனைவி உயிரிழந்ததாக வரும் குறுந்தகவலை பார்த்தபடி கண்ணீர் ததும்புவதை மறைத்தப்படி சாட்சிக் கூண்டில் பேசும் ஒரு காட்சியே போதும். அவரது மனைவி சொல்லும் வார்த்தை “நாம் தோத்துட்டோம்ன்னு நாம் ஒத்துக்கறவரை அது தோல்வி இல்லை” என்பதை வைத்து தோற்றாலும் விடாமல் போராடுவது கிரேட்.
அருணின் திரைக்கதை, இயக்கம் நல்ல முயற்சி. தற்போதுள்ள சூழலில் பார்மா நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றுதான். ஆனால், கொஞ்சம் பொறுமைதான் தேவை.