ஓடிடி விமர்சனம்

Modha Rathri: முத்துவின் ஓலத்தில் ஒளிந்திருக்கும் பெண் சோகங்கள் | திரை தேவதைகள் 37

பாரதி ஆனந்த்

நம் குரலைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்த ஒருபோதும் அஞ்சக் கூடாது. நம் குரல் சுமக்கும் அந்தக் கதை, நம் வாழ்க்கையையும், ஏன் மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றும் சக்தி கொண்டதாக இருக்கலாம். அந்தக் குரல் அழுத்தமான வார்த்தைகளாக, சில நேரங்களில் அலறலாக அல்லது மவுனமாக, சில தருணங்களில் முரட்டுப் பிடிவாதமாகக் கூட இருக்கலாம்.

குரலை கண்டறிதலா?! பேசும் திறன் கொண்ட எல்லா மனிதர்களும் தானே குரல் எழுப்புகிறார்கள் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், ஓர் ஆணும், ஒரு பெண்ணும் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பு உலகெங்கும் ஒரே மாதிரி சமநிலையில் இருக்கிறதா? அப்படியே வாய்ப்பிருந்து பேசினாலும் அவளின் குரலுக்கு சமூகம் செவிசாய்க்கிறதா? அதை அர்த்தமுள்ளதாகக் கருதுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்’ என்ற பதில் கிடைக்கும் நாள் வரை, ஒவ்வொரு பெண்ணும் தன் குரலைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ‘மொத ராத்திரி’ படத்தில் முத்துவின் ஓலம் அப்படித் தேடிக் கண்டடைந்து எழுப்பப்பட்ட குரல்.

ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அப்துல் லீ, சேத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் முத்துவின் வாயிலாக குரலற்றவர்களின் குரலை கேட்கப்போகிறோம்.

காமெடி டிராமா ஜானரில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைவிட, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு பிரம்மாண்ட வெற்றியைக் கண்டு பொதுவெளியில் கொண்டாடப்படுகிறது.

அதுவும் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறக் காரணம், அவர்களில் பெரும்பாலானோரின் குரலாக முத்து ஒலித்ததே எனலாம். இனி ‘மொத ராத்திரி’ படத்துக்குள் பயணிப்போம்.

முத்துசெல்விக்கும், மருதநாயகத்துக்கும் இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடக்கிறது. மணப்பெண்ணை கூட்டிவருமாறு புரோகிதர் சொல்லும்போது முத்து அவள் காதலனுக்கு ‘எங்க இருக்க உன் வண்டிய காணோம்’ என்று கேட்டுக் கொண்டிருப்பாள். தங்கையின் பாசம், மச்சானின் அக்கறையால் மணமேடையில் அமர்ந்திருக்கும் மருதுவோ கடந்த கால சோகம், நிகழ்கால நிர்பந்தம், எதிர்காலம் பற்றிய குழப்பம் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று முடிச்சு போட்டுவிட்டு போஸ் கொடுப்பவனாக இருப்பான்.

முத்து - மருது ஜோடியின் பயணம் கல்யாணத்துக்கே உரித்தான கலகலப்பில் தொடங்கவில்லை என்றாலும் தங்கள் சாதிக்குள், தாங்கள் நினைத்தபடி திருமணத்தை நடத்தி கடமையை நிறைவேற்றிய களிப்பில் இருப்பார்கள்.

தான் உருகி உருகி காதலித்தவன் பொறுப்பற்று தூங்கிப் போய்விடுகிறான், தன் குரலை ‘ம்’ என்றதுமே அடக்கிப் பழகிய தாய் வெற்றிப் புன்னகையோடு நிற்கிறாள். நிற்கதியாய் உணர்ந்த முத்து, கச்சேரிப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவாள். அது கோப உச்சத்தின் வெளிப்பாடு.

பெண் என்பவள் பெரும்பாலும் தனி மனிதியாகப் பார்க்கப்படுவதில்லை.

குடும்பம், சாதி, ஊர், மதம் அவற்றைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட கலாச்சாரம் ஆகியவற்றின் அடையாளமாகத் தான் பார்க்கப்படுகிறாள். அந்த அடையாளத்தில் தான் பெண்களுடைய குரல் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறது.

அப்படித் தோற்றுப்போன முத்து, புகுந்த வீட்டில் கொடுக்கப்படும் பால், பழத்தை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அரைத்துக் கொண்டிருப்பாள்; அவளுடைய வார்த்தைகளும் சேர்ந்தே அரைபட்டுக் கொண்டிருக்கும்!

முத்துவைப் போலவே இங்கு எண்ணற்ற குரலற்ற பெண்கள் இருக்கின்றனர். படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல இன்னும் இரண்டு குரலற்றவர்கள் இருக்கிறார்கள். ஒன்று மருதுவின் கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் நிர்மலா, இன்னொன்று ஊர் எல்லைக் கோயிலில் வீற்றிருக்கும் பெண் குலசாமி. படத்தில் நிர்மலாவை காட்டியிருக்கவும் மாட்டார்கள், சாமிக்கு பெயர் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்.

இவர்கள் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்துவது ஆண்கள். அவர்களே யார் சாமியாக வேண்டும், யார் பழி சுமக்க வேண்டும், யார் பலியாக வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். சிறு தெய்வ வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நடுகல்களையும், தீப்பாய்ந்த அம்மன்களையும் உருவாக்கியவர்களும் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆண்கள் என்றால் நேரடியாக ஆண்கள் மட்டுமே இல்லை. முத்துவின் அம்மாவை போல் ஆணாதிக்க ரோலை நேர்த்தியாக அரங்கேற்றும், முத்துவின் சித்தியைப் போல் அடிமைப்பட்டு சுயத்தை அடகு வைக்கும் பெண்களும் சேர்த்துதான்.

குடும்பம் என்பது அன்பால், பரஸ்பர புரிதலால், ஒருவர் மீது ஒருவர் கொண்ட அக்கறையால், தனிநபர் சுதந்திரத்தை மதிப்பதால் இணைந்த கூடாரமாக இருக்க வேண்டும்.

முத்து, மருது குடும்பங்களுக்கு அன்பு, அக்கறை இல்லை இல்லாமல் இல்லை. ஆனால், அவை ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற கட்டுப்பாடுடன் இருக்கிறது. சாதிக்காக மருதுவின் காதலும், குடும்ப கவுரவுத்துக்காக முத்துவின் காதலும் மறுக்கப்படுவது அதற்குச் சான்று.

தாயின் கமாண்ட்களை மட்டுமே கேட்டுப் பழகியிருந்த முத்துவுக்கு, “எல்லாம் அவசரமாக நடந்துவிட்டது. இன்னிக்கு இதெல்லாம் வேண்டாம்” என்று அவளை முன்னிறுத்தி மருது காட்டிய அக்கறை அவன் மீது நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறது. அதனாலேயே தன் காதலைப் பற்றி, காதலனுடன் செல்ல திட்டமிட்டிருப்பதை மருதுவிடம் ஒப்புக் கொள்கிறாள்.

முத்து பதக்கங்கள் வாங்கினாலும் பாத்திரம் துலக்காததுதான் அவள் அம்மாவுக்கு பிரச்சினை. முத்துவிடம் மனம்விட்டு அவள் அம்மா பேசியிருந்தாலே, அவளுக்கு அவசரமாக காதலில் விழத் தேவையும் இருந்திருக்காது, “இந்த உலகத்திலேயே என்னைவிட உன்னை அதிகமாக நேர்சிக்க முடியாது” என்ற காதலனின் சினிமாத்தனமான வாக்குறுதியை நம்பும் நிலையும் வந்திருக்காது.

நேரெதிராக முத்துவின் அக்கறை, ‘நான் இருக்கிறேன்; பார்த்துக் கொள்கிறேன்’ என்ற வாக்குறுதி, ‘நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; இப்போதைக்கு இதுதான் சரியான முடிவு’ என்ற கைடன்ஸ், ‘உனக்கு தூக்கம் தேவை; தூங்கியெழுந்தால் யோசிக்க முடியும்’ போன்ற ஃப்ரெண்ட்லி அறிவுரை அவளுக்கு புதிய உலகைக் காட்டுகிறது.

மருது கதாபாத்திரத்தை பெண்கள் கொண்டாடக் காரணமும் இதுதான். முத்து அவளாகவே இருக்க துணையாக இருக்கிறான் மருது.

சமத்துவம், உரிமை, சுதந்திரம் எல்லாம் பெண்களுக்கு ஆண்கள் வழங்கும் சலுகை, அனுமதி அல்ல; நாம் சுதந்திரமாக இருப்பதுபோல் நம் சக மனிதியும் சுதந்திரமாக இருக்கிறாள் என்ற புரிதல்.

அந்தப் புரிதலை மருதுவின் ரூபத்தில் தரிசிக்கும்போது முத்துவுக்கு அவநம்பிக்கைகள் அகன்று ஆசுவாசம் ஏற்படுகிறது.

முடிவெடுக்கும் அதிகாரம் நம் கையில் இருக்கும்போது தான் நாம் முழுமை பெறுகிறோம்.

அந்த அதிகாரத்தை செயல்படுத்த மனதளவில் தயாரானவளாக வீடு திரும்பும் முத்துவுக்கு ஒட்டுமொத்த சூழலும் சவால் விடுகிறது.

வசை சொற்கள் தாண்டி தாயின் அடி இடியென இறங்க மயங்கிச் சரிகிறாள் முத்து. அவளுக்காக மருது துடிக்கிறான். மீண்டும் கண் விழிக்கும் முத்து அங்கு குழுமியிருக்கும் சாதி, மதம், கவுரவம், டாக்சிக் மாஸ்குலினிட்டி என மூழ்கியிருக்கும் ஒரு ‘ஹிஸ்டரிக்’ கும்பலைப் பார்த்து அலறுகிறாள்.

அந்த அலறல் மருதுவுக்கு நிர்மலாவையும், கோயில் பூசாரிக்கு அவன் வணங்கும் குல சாமியையும் கண் முன் நிறுத்துகிறது. அவளது அலறல் அவள் சித்தியை விடுவிக்கிறது. அந்த அலறல் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிறது.

முத்து இறுதியாக “நான் என் இஷ்டப்படி வாழ நினைத்தது தவறா?” எனக் கேட்பாள்.

ஒரு பெண்ணின் இஷ்டம் எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாமல் அவளால் அனுபவிக்கப்படும் நாள் இந்தச் சமூகம் முன்னேறிய நாள்.

முத்து கேட்கும் அந்த ஒரு கேள்விதான் லீலாவும் கேட்கிறாள், மீனாவும் கேட்கிறாள். ஒருத்தி பிடிவாதமாக, இன்னொருத்தி மௌனமாக.

முத்துவின் அலறல் ஒரு குடும்பத்துக்கு சவுக்கடி என்றால், ‘எமகாதகி’-யில் லீலாவின் பிடிவாதமும், ‘கொட்டுக்காளி’-யில் மீனாவின் மௌனமும் அதே சாதி, ஆணாதிக்க அதிகார மையங்களை தோலுரிக்கிறது.

‘எமகாதகி’ ஆஹா ஓடிடியிலும், ‘கொட்டுக்காளி’ அமேசான் ப்ரைமிலும் காணக் கிடைக்கிறது.

பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கிய ‘எமகாதகி’-யை முதலில் எடுத்துக் கொள்வோம். ‘மொத ராத்திரி’ கல்யாண வீடு என்றால் ‘எமகாதகி’ ஓர் இழவு வீட்டில் நடக்கும் கதை.

லீலாவின் காதல் சாதி எல்லையை கடக்கிறது. தீவிர ஆஸ்துமா கொண்ட அவள் மர்மமாக உயிரிழக்கிறாள். அவளது காதலை ஊரும், குடும்பமும் எப்படியெல்லாம் அவர்கள் சவுகர்யத்துக்கு திரிக்கிறது என்பதுதான் கதை.

துணிச்சலான, சிக்கல்களை சாமர்த்தியமாக கையாளும் பெண்களை ‘எமகாதகி’ என்று அழைப்பதுண்டு. லீலாவின் சடலம் சாமர்த்தியமாக சாதியம், ஆணாதிக்கம், அவதூறு, திருட்டு, ஆணவக் கொலை என தான் சந்தித்த அத்தனை கொடுமைகளுக்கு எதிராகவும் களமாடுகிறது.

ஒரு பெண்ணின் ஆசை ஒவ்வொன்றும் பலரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவளின் ஒவ்வொரு அசைவும் நூறு கண்களின் நுண்ணோக்கிப் பார்வையில் அலசப்படுகிறது. அவள் யாரை இணையாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் கூட குடும்பமே தீர்மானிக்கிறது. இத்தனை வேலிகளையும் மீறத் துணிந்தால், அவளை ஆணவக் கொலை செய்யக்கூட அதே ரத்த உறவுகள் தயங்குவதில்லை.

‘எமகாதகி’ லீலா எல்லோரையும் தன் சடலத்தின் காலில் விழ வைக்கிறாள். ஒவ்வொருவராக பாவ மன்னிப்பு கேட்க வைக்கிறாள்.

இறுதியாக “இந்த வயிற்றில் தானே உன் அண்ணனையும் பெத்தேன். ஆம்பளைங்கிறத காட்டிட்டானே. என் மக என்கிட்ட ஏதோ சொல்ல நினைச்சிருக்கா நான் கேக்காம போயிட்டேனே” என்று தாய் ஒப்பாரி வைக்கையில் லீலாவின் சடலம் சுடுகாடு செல்லத் தயாராகிறது.

லீலாவின் பிடிவாதம் ஊர்ப் பெண்களுக்கு பாடம். நம் குரலை நிலைநாட்ட, நம் உரிமைகளைக் கோர, நமக்குப் பிடித்தமான வாழ்வை வாழ, அநீதிகளை தட்டிக் கேட்க நாம் சாகத் தேவையில்லை. உயிருடன் இருக்கும்போதே எமகாதிகளாக இருப்போம் என்ற அறைகூவல்.

முத்துவும், லீலாவும் அவரவர் குடும்பத்துக்கும், ஊருக்கும் மனித வாழ்வின் யதார்த்தத்தை உரத்த குரலிலும், உறுதியான பிடிவாதத்திலும் சுளீரென்று உணர்த்தினார்கள். ‘கொட்டுக்காளி’ மீனாவோ அழுத்தமான அமைதி மூலம் அதைச் செய்வதோடு, மதத்தின் பேரில் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் அயோக்கியத்தனங்களையும் கண்கூடாகப் பார்த்து பாருங்கள் என்று காட்டுகிறாள்.

ஒரே பகலில் ஓர் ஆட்டோ பயணத்தில் நடக்கும் கதையில் சமூகத்தின் அவலங்களை படமாக்கியிருக்கிறார் பி.எஸ்.வினோத் ராஜ்.

சமூகம் விதித்த கற்பிதங்களைத் தாண்டி தனக்குப் பிடித்த மாதிரி ஒரு பெண் இருக்க முயன்றால், அவளை கிராமத்து பக்கம் கொட்டுக்காளி என்று முத்திரை குத்திவிடுகின்றனர்.

கல்லூரி சென்ற மீனா காதலில் விழுந்துவிடுகிறாள். அவளை மாமனுக்கு கல்யாணம் பேசி முடித்திருக்க, அவளோ “நான் சொல்வதைக் கேளுங்கள்” என்கிறாள்.

பெண்களின் பேச்சுகளுக்கு அத்தனை சுலபமாக செவிகொடுத்துவிடுமா இந்தச் சமூகம்?

ஒரு பெண் காதலித்தால் கொட்டுக்காளி, அதில் பிடிவாதமாக இருந்தால் பேய். மீனாவுக்கு பேயோட்ட குடும்பமே புறப்படுகிறது.

படம் முழுக்க மீனா எதுவுமே பேச மாட்டாள். அவளது வெறித்த பார்வை, அழுத்தமான அமைதிக்கு இடையே ஒட்டுமொத்த குடும்பத்தின் முகத்திரைகளும் ஒவ்வொரு கட்டமாக கிழியும்.

ஒரு சிறிய வாகனத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் இடுக்கிக் கொண்டு நெடுந்தூரம் சென்றால் மூச்சு முட்டும் அல்லவா? அப்படித்தான் பெண்கள் இச்சமூகத்தில் நெடுங்காலமாக மாறாத கெடுபிடிகளால் க்ளாஸ்ட்ரோஃபோபிக் சூழலில் இருக்கின்றனர் என்பதை மீனாவின் பயணம் உணர்த்தும்.

மீனாக்களின் பிடிவாதம் அடிமைப்படுத்திப் பழகிய சமூகத்துக்கு ஆத்திரத்தையே தரும். அதுதான் மீனா சினிமாப் பாடலை முணுமுணுக்கும்போது சூரியை அவள் மீது வன்முறையை ஏவத் தூண்டும்.

ஆனால் மீனா என்ன நேர்ந்தாலும் சரி நான் இதிலிருந்து ஓட மாட்டேன். மாறாக என் விருப்பம் எனது உரிமை என்பதை நீங்கள் அங்கீகரிக்கச் செய்வேன் என்பது போல் சாமியாரின் சரசங்களை கண்கூடாகக் காண வைப்பாள்.

இந்தப் படத்தில் முடிவு பார்வையாளர்கள் வசம் விடப்பட்டது.

முத்து, லீலா, மீனா இன்னும் பல பெண்களின் விருப்பங்களையும், முடிவுகளையும் இந்தச் சமூகம் வெறும் பார்வையாளர்களாக பார்த்தால் போதும். அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பது இனியும் சமூகத்தால் முடிவு செய்யப்படும் முறை ஒழியட்டும்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்

SCROLL FOR NEXT