ஓடிடி விமர்சனம்

Lust Stories 3: மனித உறவுகளின் ஆழம் | ஓடிடி திரை அலசல்

சல்மான்

காமத்தை இயல்பான உணர்வாக அணுகும் முயற்சியாக தொடங்கப்பட்ட ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆந்தாலஜி பட வரிசையில் தற்போது மூன்றாவது பாகம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் புதுமையும், இரண்டாம் பாகத்தின் அரசியல் பார்வையும் இதில் சற்றே குறைந்திருந்தாலும், காமத்தை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், எவ்வித தயக்கமும் இன்றி அணுகிய வகையில் இந்தப் பாகமும் கவனத்தை ஈர்க்கிறது. 

விக்ரமாதித்யா மோத்வானே, கிரண் ராவ், சகுன் பத்ரா, விஷால் பரத்வாஜ் ஆகிய நான்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள இந்த நான்கு குறும்படங்களின் தொகுப்பு, வெவ்வேறான காலக்கட்டங்களில் பெண்களின் மன ஓட்டத்தையும், உறவுச் சிக்கல்களையும், காமத்தையும் வெவ்வேறு கோணங்களில் அலசுகிறது.

முதலாவதாக இடம்பெற்றுள்ள விக்ரமாதித்யா மோத்வானேவின் இயக்கம், ஒரு விநோதமான கதைக்களத்தை கொண்டுள்ளது. கொங்கனா சென் சர்மா, ராதிகா ஆப்தே இருவரும் பல வருடங்களாக நெருங்கிய தோழிகள். உயர் நடுத்தர வர்க்கக் குடும்ப அமைப்பிலும், சலிப்பூட்டும் திருமண வாழ்க்கையிலும் சிக்கியிருக்கும் இவர்கள், ஒரு கொரியன் வெப் தொடரால் ஈர்க்கப்பட்டு, வார இறுதி சுற்றுலாவின்போது தங்களது கணவர்களைப் பரிமாறிக் கொள்ளத் திட்டமிடுகிறார்கள்.

இவர்களது கணவர்களாக வரும் விஜய் வர்மா மற்றும் அபிஷேக் பானர்ஜியின் எதிர்வினைகளால், நாயகிகளின் இந்த விசித்திரமான முயற்சி என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே இப்பகுதியின் கதை. கொங்கனா, ராதிகாவின் சிறந்த நடிப்பு, ஸ்னேகா கான்வில்கரின் துள்ளலான பின்னணி இசையோடு இணைந்து, நகைச்சுவையும் இப்படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றுகிறது.

இரண்டாவதாக கிரண் ராவ் இயக்கிய பகுதி. ஒரு நெயில் பார்லரில் வேலை செய்யும் கேரள பெண்ணும் (சனா தம்பி), பீட்சா டெலிவரி செய்யும் ஒரு வட இந்திய இளைஞனும் (குர்ஃபதே பிரசாதா) சந்தித்து, எல்லைகளற்ற ஒரு தற்காலிக உறவில் ஈடுபடுகிறார்கள். நாயகன் சில சட்டவிரோத பொருட்களை நாயகிக்கு தெரியாமல் அவரது அபார்ட்மென்ட்டில் மறைத்து வைக்கிறார். இது எத்தகைய சிக்கலை இருவருக்கும் ஏற்படுத்துகிறது என்பதே இந்த பகுதி சொல்லும் கதை.

அடித்தட்டு வாழ்க்கை வாழும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை பேசியிருக்கும் கிரண் ராவ், அதில் கமர்ஷியல் அம்சங்கள், இறுதியில் ஒரு ட்விஸ்ட் என சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.

மூன்றாவதாக வரும் பகுதியில் இயக்குநர் சகுன் பத்ரா, முறிந்த ஒரு திருமண வாழ்க்கையின் சிக்கல்களைப் பேசியுள்ளார். விவாகரத்து செய்யக் காத்திருக்கும் ஒரு தம்பதியினராக ராதிக்கா மதன் மற்றும் அலி ஃபசல் நடித்திருக்கிறார்கள். பேசத் தொடங்கினாலே சண்டையிட்டுக் கொள்ளும் இவர்கள், பாலுறவின் மூலம் மட்டுமே தங்களுக்குள் உரையாடிக் கொள்ள முடிகிறது.

இவர்களது இந்த விசித்திரமான பிணைப்பு, மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்குப் புரியாத ஒன்றாக இருக்கிறது. இன்ஸ்டா தலைமுறையின் முரண்பாடுகளையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத கோபத்தையும் காமத்தின் வழியே இவர்கள் தீர்த்துக்கொள்வதை சகுன் பத்ரா பேசியுள்ளார். எனினும் இருவருக்கும் இடையிலான சிக்கலை பார்வையாளர்கள் தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையில் சொல்வதில் இயக்குநர் சற்றே சறுக்கி இருக்கிறார். இருவருக்கும் இடையிலான நீண்ட உரையாடல்களும் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

நான்காவதாக வரும் விஷால் பரத்வாஜின் படைப்பே இந்த நான்கு கதைகளிலேயே சிறப்பானதாக அமைந்திருக்கிறது. 1980-களின் பிற்பகுதியில் ஹைதராபாத் இஸ்லாமிய சமூகப் பின்னணியில் இக்கதை நகர்கிறது.

கல்லூரி விரிவுரையாளராக இருக்கும் அதிதி ராவ் ஹைதாரி, தன் மருத்துவரான கணவன் சித்தார்த்தின் தொடுதல் கிடைக்காமல் ஏங்குகிறார். உருது இலக்கியப் படைப்புகளால் ஈர்க்கப்படும் அதிதி, தன் கணவனின் அலட்சியத்தால் தூண்டப்பட்டு, தனது சொந்தக் கற்பனைகளை புனைப்பெயரில் ஒரு நாவலாக எழுதுகிறார்.

ஒரு கட்டத்தில் நாவல் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போக, தன் கணவனுக்கு அந்த நாவல் பற்றி தெரிந்துவிடக் கூடாது என அஞ்சுகிறார். இதன் பிறகு என்னவானது என்பதே இந்த பகுதியின் கதை. இதில் அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த்தின் நடிப்பு மிகப் பெரிய பிளஸ். கஜராஜ் ராவின் சிறிய கேமியோவும் சிறப்பு.

இம்முறை ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ காமத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டாலும், மனித உணர்வுகளுக்கும், உறவுச் சிக்கல்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. கண்டிப்பாக 18 வயதை கடந்தோருக்கான படம். 

SCROLL FOR NEXT