பல ஆண்டுகளுக்கு முன்பு பிரெண்டன் பிரேசர் நடிப்பில் உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் ‘தி மம்மி’. இன்று வரை இரண்டு ’மம்மி’ படங்களும் பிரபலமானவையாக உள்ளன. அதன் பிறகு டாம் குரூஸ் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து ஹாலிவுட் இப்படத்தை மீண்டும் கையில் எடுத்தபோது அது படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில்,‘ஈவில் டெட் ரைஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் லீ குரோனின் இந்த கதைக் களத்தை மீண்டும் தோண்டி எடுத்துத் தன் பாணியில் ஒரு புதிய திகில் படமாக மாற்றியுள்ளார்.
கதையின் களம் எகிப்தின் கெய்ரோ நகரத்திலிருந்து தொடங்குகிறது. சார்லி கேனன் (ஜாக் ரேனர்) என்ற தொலைக்காட்சி நிருபர், தன் மனைவி லாரிசா (லாயா கோஸ்டா) மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களின் மகள் கேட்டி, திடீரென காணாமல் போகிறார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த ஊரான நியூ மெக்ஸிகோவின் ஆல்புகர்க்கி நகருக்கு திரும்பும் இந்தக் குடும்பத்துக்கு, விசித்திரமான முறையில் அந்த மகள் மீண்டும் கிடைக்கிறார்.
ஒரு விமான விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான மம்மியின் சவப்பெட்டிக்குள் உயிருடன் இருக்கும் கேட்டி, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார். ஆனால், அவரது தற்போதைய நிலை ஒரு சாதாரண மனிதர் போல இல்லாமல், ஏதோ ஒரு கொடூரமான இருண்ட சக்தியின் பிடியில் இருப்பது போலக் காட்சியளிக்கிறது. இதன் பிறகு என்னவானது என்பதே படத்தின் கதை.
இயக்குநர் லீ குரோனின் தனக்கே உரிய கேமரா கோணங்களையும், ஒளியும் நிழலும் கலந்த ஒருவித இருண்ட ஒளிப்பதிவு நுட்பங்களையும் பயன்படுத்தி கதை நடக்கும் வீட்டுக்குள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கேயேதான் நகர்கின்றன.
தேவையற்ற இழுவைகள் எதுவும் இன்றி படம் தொடங்கியது முதல் இறுதி வரை ஒரே நேர்கோட்டில் விறுவிறு என பயணிக்கிறது.
அறிமுக நடிகை நடாலி கிரே, கேட்டி கதாபாத்திரத்தில் தனது உடலை வளைத்து நெளித்து காட்டியிருக்கும் அமானுஷ்ய நடிப்பு, ‘தி எக்சார்சிஸ்ட்’ படத்தின் காட்சிகளை நினைவூட்டும் வகையில் மிரட்டலாக அமைந்துள்ளது. ஜாக் ரேனர் மற்றும் மே காலமவி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் அதன் மேக்கிங். தொடக்கத்தில் வரும் கெய்ரோ காட்சிகள், அதன் பிறகு வரும் நியூ மெக்சிகோ காட்சிகள் என படம் முழுக்க நேர்த்தியான ஆக்கம். எனினும் திகில் காட்சிகளை விட இயக்குநர் லீ குரோனின் முழுக்க முழுக்க ரத்தக் களரி மற்றும் அருவருப்பை நம்பியே பெரும்பாலான படத்தை நகர்த்தியுள்ளார்.
கேட்டி தன் அழுகிய தோலைத் தானே உரிப்பது, அடிக்கடி வாயிலிருந்து கரிய நிற திரவம் வெளியேறுவது, கால் நகத்திலிருந்து மூட்டு வரை உரிப்பது என படம் பார்ப்பவர்களை உலுக்கும் கொடூரமான வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளன.
கேட்டி வீட்டுக்கு வந்த பிறகு, அவரது கொடூரமான மற்றும் விகாரமான மாற்றங்களைப் பார்த்த பிறகும் கூட, அவளது பெற்றோர் அவருக்கு திரும்பத் திரும்ப பாசத்தை ஊட்டுவது கதையின் விறுவிறுப்பைக் கெடுக்கிறது. படம் நீளமாக ஓடினாலும், ஒரே மாதிரியான காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவது பெரிய குறை.
இவ்வளவு ரத்தக் களரி இருந்தபோதிலும், ‘மம்மி’ என்ற தொன்மக் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மம்மி என்ற அம்சத்தை சுற்றி நகரும் கதையாக இல்லாமல், இயக்குநர் ஏற்கனவே எடுத்த ‘ஈவில் டெட் ரைசஸ்’ படத்தின் பாணியிலேயே பயணிக்கின்றன. எதற்காக கதை எகிப்தில் தொடங்கி அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
எனினும் திகில் படங்களுக்கு தேவையான, தொடக்கம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு வித பதைபதைப்புடன் பார்வையாளர்களை இருக்க வைப்பதில் இயக்குநர் லீ குரோனின் வெற்றி பெற்றுள்ளார்
பெரியளவில் புத்திசாலித்தனமான காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் அதிர வைக்கும் ‘ஜம்ப் ஸ்கேர்’ திகில் காட்சிகளை விரும்புபவர்கள், அருவருப்பு நிறைந்த கோரக் காட்சிகளை பார்ப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.