எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்துவிட வேண்டுமென்று தவிக்கும் போதுதான் பதற்றம் ஏற்படும். ஒரு நாளை ஒரு நாளாய் வாழ்ந்து விட்டால், நம்மையும் நாளையையும் காலம் பார்த்துக் கொள்ளும்.
எங்கேயோ, எப்போது ஒரு சுய முன்னேற்றப் புத்தகத்தில் வாசித்த கருத்தின் சாராம்சம் இது.
நம் பிறப்பையும், இறப்பையும் தீர்மானிப்பவர்கள் நாம் இல்லை. ஆனாலும் நம் வாழ்க்கைப் பயணத்தில் அத்தனை அத்தனை இலக்குகளை தீர்மானித்து, அதை இந்த வயதில், இந்த வகையில், இந்த வழியில் செய்துவிட வேண்டும் என்ற தேடலில் நம்மை தொலைத்து விடுகின்றோம்.
இலக்கற்ற வாழ்க்கை வெறுமை என்பதை மறுதலிக்கவில்லை. ஆனால், இலக்குகள் நமக்கான உந்து சக்தியாக இருக்க வேண்டுமே தவிர, பொம்மலாட்ட கயிறு போல் நம்மை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இருக்கக் கூடாது.
வாழ்க்கை வாழ்வதற்கே! அதை வேறு யாரும் உணர்த்துவதற்கும், நாமே புரிந்து தெளிவதற்கும் வித்தியாசமும் வீச்சும் அதிகம்.
அப்படியாக, தன்னைப் பீடித்திருக்கும் ஆன்க்ஸைட்டி டிஸார்டரின் ஊடே தன் மீது ஒளி பரப்பி ஒளிர்பவள் தான் 25 வயதான சோலே சன்டாரோ. 2022-ல் இத்தாலிய மொழியில் வெளியான திரைப்படம் ‘Jumping from High Places’ படத்தின் நாயகி. ரொமான்டிக் காமெடி டிராமா ஜானரிலான இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. வெறும் 88 நிமிடங்கள் ரன் டைமில் இத்தாலியின் கடற்கரை சிறுநகரை சுற்றிப் பார்த்ததுபோல் ஒரு ஃபீல் குட் உணர்வு கிடைக்கும். கூடவே, சில டேக் அவே-களும்!
நாயகி சோலே சன்டாரோவின் அறிமுகக் காட்சி, ஃபோர்த் வால் பிரேக்கிங் பாணியில் தொடங்கும். ஒரு தள்ளுவண்டி ஐஸ்க்ரீம் கடையில் முதலில் பிஸ்தா ஃப்ளேவர், பின்னர் வேறொரு ஃப்ளேவர், மூன்றாவது முறையாக லெமன் ஃப்ளேவர் என்று தட்டுத்தடுமாறி தனக்கு வாங்குபவளாகத் தான் சோலேவை நாம் பார்ப்போம். கேமராவை நேரடியாகப் பார்த்து அவள் பேசுவது பார்வையாளர்களுடன் உரையாடும் பாணியில் இருக்கும். அதுதான் ஃபோர்த் வால் பிரேக்கிங் ஸ்டைல்.
எளிமையாகச் சுட்டிக் காட்டினால், தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் சித்தார்த் பேசும் சில காட்சிகளை சுட்டிக்காட்டலாம். நாயகன் அருண் (சித்தார்த்) படத்தின் பார்வையாளர்களோடு உரையாடுவது போல் காட்சிகள் இருக்கும். Fleabag சீரிஸ் பார்த்தவர்களுக்கு இந்த விவரிப்புகள் தேவைப்படாது.
இத்துடன் கதைக்குள் செல்வோமாக. இத்தாலியின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரம்தான் கதைக்களம். அப்பூலியா என்ற அந்த பிராந்தியம் ஒரு சுற்றுலா நகரம். சீசனில் களைகட்டி திருவிழாக் கோலம் பூண்டுகொள்ளும்.
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகிய கடற்கரை, அதையொட்டிய மலைகள், அதிலிருந்தே விரியும் சிறு நகரம், அதில் நேர்த்தியான வசிப்பிடங்கள், அவற்றில் தனக்கென ஒரு வீடு, அதில் அனுசரணையான மனிதர்கள், எப்போதும் பொருத்தமான ஆடைகள், திருத்தமான சிகை ஒப்பனை, தொற்றிக் கொள்ளும் புன்னகை என்று பார்ப்பதற்கு ‘சார்மிங் கேர்ள்’ மாதிரிதான் சோலே நமக்குத் தெரிவாள். ஆரம்பக் காட்சியிலேயே அவளே அவளைப் பற்றிச் சொல்லியிருக்காவிட்டால் நமக்கு அவள் மீது சின்ன சந்தேகம் கூட வந்திருக்காது.
ஆனால் சோலே தனக்கிருக்கும் ஜெனரலைஸ்டு ஆன்க்ஸைட்டி டிஸார்டர் பற்றி அத்தனை துள்ளலுடன் விவரித்திருப்பாள். ஐரோப்பிய நாடுகளில் மன அழுத்தங்கள் பற்றி ஓரளவு புரிதலும், சமூக ஏற்பும் இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.
ஐஸ்க்ரீம் வாங்கும் காட்சியில் சோலே கைவிரல்களை பிசைந்து கொண்டே கேட்டது ஏன் என்று அவளது விவரிப்புகளுக்குப் பின்னர் நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
தலைவலி, காய்ச்சல் தாண்டி பால்வினை நோய் பற்றிகூட தயக்கமின்றி சொல்வதை இயல்பாக்கியிருக்கும் இந்தியச் சமூகம் சாதாரண மனப் பதற்றம் தொடங்கி சற்றே சிக்கலான மனப் பிறழ்வு வரை எதைப் பற்றியும் புரிதலோடு பேசுவதில்லை. ஏன் திரைப்படங்கள் கூட அழுத்தமாகக் காட்சிப்படுத்துவதில்லை.
அந்தப் புள்ளி எனக்கு தனிப்பட்ட முறையில் ‘Jumping from High Places’ மீது ஈடுபாட்டைக் கூட்டியது.
சோலேவின் பால்ய கால தோழி எம்மா. பக்கத்து வீட்டில் வசிப்பவளும் கூட. பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வெளியேறி விம்மி அழும் சோலேவின் கைகளை எடுத்து தன்னுடைய இதயத்தின் மீது வைத்து என் சீரான இதயத் துடிப்பை உணர்ந்து உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள் என்று அன்பு காட்டுபவள்.
குழந்தைகளின் அன்பு எப்போதும் மேன்மையானது. அரிதாக சில வளர்ந்த மனிதர்களிடம் அப்படியான நேசத்தை காண முடியும். ஆனால், அதைக் கொண்டாடத் தவறிவிடுவது வளர்ந்தவர்களின் பலவீனம்.
சோலே அப்படியல்ல. குழந்தையாக இருந்தது தொட்டே எம்மாவின் அன்பைக் கொண்டாடினாள். எம்மாவும் அதில் பூரித்துப் போனாள். சோலேவுக்கு எம்மாவிடமிருந்து இரு பிரிவுகள் வருகின்றன. ஒன்று எம்மா, சேவியரை திருமணம் செய்துகொண்டு பாரிஸுக்குப் போவதால், இன்னொன்று நிரந்தரமானது. ஒரு கார் விபத்தில் எம்மா இறந்துவிடுகிறாள்.
சாதாரண நபர்கள் ஓர் இழப்பிலிருந்து விடுபடுவதற்கும் சோலே போன்றவர்கள் அதிலிருந்து விடுபடுவதும் ஒரே வேகத்தில் நிகழ்ந்துவிடாது. எம்மாவை இழந்தது சோலேவுக்குள் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அப்போதுதான் படத்தில் மொஸிமோவின் என்ட்ரி வரும். அவன் எம்மாவின் சகோதரன். அவன் மீது சிறுவயதில் இருந்தே சோலேவுக்கு ஈர்ப்பு. ஆனால் அவனுக்கோ விக்டோரியா என்ற பெண்ணுடன் காதல்.
எம்மாவின் மறைவுக்குப் பின்னர் ஊர் பக்கமே வராத அவன் திடீரென தன் வீட்டுக்குள் அமர்ந்திருக்க சோலே ஆச்சரியமடைந்து போகிறாள். அதுவும் நானும் விக்டோரியாவும் பிரிந்துவிட்டோம் என்று மொஸிமோ சொல்கையில், ஃபோர்த் வால் பிரேக்கிங்கில் சோலே பூக்கும் புன்னகை நூறுகோடி வானவில்லுக்கு சமம்.
மொஸிமோ ஒரு கடிதத்தை சோலேவிடம் கொடுப்பான். அது எம்மா உயிருடன் இருந்தபோது சோலேவுக்காக கொடுத்தனுப்பியது. அந்தக் கடிதம் தான் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும்.
சிவப்பு நிற உறையில் உள்ள அந்தக் கடிதத்தில், சோலேவுக்கான ஆறுதல் வார்த்தைகள் இருக்கும். நான் உன்னைவிட்டு தூரமாக இருக்கலாம். ஆனால், உன் கடின காலங்களில் நீ என்னை நம்பலாம். நான் இருக்கிறேன். நீ செய்யத் தயங்கிய சிறு சிறு விஷயங்களை இக்கடிதத்தின் பின்னால் பட்டியலிடு. அதை நாம் சேர்ந்தே செய்யலாம் என்று குறிப்பிட்டிருப்பாள்.
உங்கள் துயரை ஒருவர் தன் துயராகக் கருதினால், ‘அதை சரிசெய்ய நான் இருக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தால், அவர்தான் உங்களுடைய மீட்பர்.
எம்மாவின் சகோதரன் மொஸிமோ, எம்மாவின் கணவர் சேவியர், தோழி மிரியம், டேனியோ என்று நல்லுள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவள் சோலே.
நாம் நினைப்பதுபோல் ஆன்க்ஸைட்டி டிஸார்டரில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் பெரிய பெரிய இலக்குகளை நோக்கி நகர்வது மட்டுமல்ல, சின்னச் சின்ன விஷயங்களைச் செய்வதும் கூட கடினம்தான். ஏன் ஒருவரிடம் மனம் விட்டுப் பேசுவதும் கூட அவர்களுக்குக் கடினமே.
இந்த வாக்கியம் ஆன்க்ஸைட்டி டிஸார்டர் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பொருத்தமானதே.
மீண்டும் மீண்டும் தோற்றாலும் மீண்டெழுந்து முயற்சிப்பதுவே ஆறாவது அறிவின் சிறப்பு.
மிரியம், அவளது கல்லூரித் தோழிகள் மற்றும் டேனியோவின் ஆதரவில் சோலே தனது பக்கெட் லிஸ்ட்டில் இருப்பவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவாள். காது குத்திக் கொள்வாள், ராட்டினத்தில் ஏறி குதூகலிப்பாள், மொஸிமோவுடன் படகு சவாரியும் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் கடலில் இறங்குவதையும் நிறைவேற்றுவாள்.
இடையில் அவளுக்கே உரித்தான சோர்வுக்குள் சோலே வழுக்கி விழும் தருணத்தில் அவளைத் தூக்கிவிடும் மிரியமின் முடிவு. மிரியமுக்கு அலோபீசியா என்ற முடி உதிர்தல் பாதிப்பு இருக்கும். அதை மறைக்க எப்பவும் விக் உடன் சுற்றும் அவளுக்கு அது சலிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதனால் முடியை முற்றிலும் துறந்து, மொட்டை அடித்துவிட்டு துணிந்து அழகிப் போட்டியில் பங்கேற்று தன்னையும், சோலேவையும் சேர்த்து உத்வேகப்படுத்துவாள்.
எம்மா எழுதிய கடிதத்தின் பின்னால் அவள் கோடிட்ட இடங்களில் தன்னுடைய பக்கெட் லிஸ்டை நிரப்புகிறாள் சோலே. அதை வாசிக்கும் மிரியம் தடாலடியாக செய்யாவிட்டாலும் இப்போதே ஆரம்பி என்று ஊக்குவிக்கிறாள்.
உனக்கேன் அக்கறை என்று சோலே கேட்கையில், “நான் எம்மாவை நேசித்தேன்” என்பாள் மிரியம்.
அன்பும், காதலும், நட்பும் ஒரு சங்கிலித் தொடர் போன்றதுதான். நம்மை நேசிப்பவர்களுக்குப் பிடித்தமானவர்களையும் சேர்த்தே அரவணைக்கும் அது.
சோலேவின் லட்சியப் பட்டியல் சுவாரஸ்யமானது. அதில் காது குத்திக் கொள்ளுதல், கடலில் ஒரு படகு சவாரி, கடல்நீரில் நனைதல், வேலையில் சேர்தல், காதல் வயப்பட்டு காதலனுக்கு முத்தமிடுதல், உள்ளூர் தீம் பார்க்கில் ராட்டினம் சுற்றுதல், பைக்கில் செல்லுதல், உயரமான இடத்திலிருந்து குதித்தல் என்று நீளும்.
மிரியமின் தாய் நடத்தும் உணவகத்தில் சோலேவுக்கு வெயிட்ரஸ் வேலை கிடைக்கிறது.
ஒருவேளை நான் வேலையிடத்தில் தவறு செய்துவிட்டால் என்று சந்தேகம் எழுப்பும் சோலேவிடம், “பரவாயில்லை. நீ முயன்று தோற்றதாய் இருக்கும் அது” என்பாள் மிரியம்.
உண்மையில் மனச் சோர்வோ / பதற்றமோ கொண்டவர்கள் நம்மைச் சுற்றி இருந்தால் அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய நல்ல காரியம், அவர்களுக்குத் தரும் இதுபோன்ற உத்வேக வார்த்தைகள்.
இது சரியாக நடக்குமா? இதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் ஒன்றைத் தொட்டு ஒன்று என அடுக்கடுக்காக தோல்விகள் வருமோ? என்ற கேள்விகள்தான் அவர்களின் மிகப் பெரிய எதிரி. அப்படியானவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உபகாரம் “நீ முயற்சி செய்; அதில் தோற்றாலும் பரவாயில்லை!” என்பதே.
கிட்டத்தட்ட எல்லா ஆசைகளையும் நெருங்கிக் கொண்டிருக்கும் சோலேவுக்கு காதல் தான் மிகப் பெரிய குழப்பமாக இருக்கும். டேனியோவின் அன்பும் அக்கறையும் அவளுக்குப் பிடிக்கும் தான். ஆனால் சிறு வயதிலிருந்து ஈர்க்கப்பட்ட மொஸிமோ அவளுக்கு ஒரு கம்ஃபோர்ட் ஜோன்.
இயல்பிலேயே எதையும் தானாக முன்னெடுக்க தயக்கம் கொண்டவள் சோலே என்பது நமக்கு ஆரம்பத்திலிருந்து தெரியும். அதனால் மொஸிமோவிடம் காதலைச் சொல்ல சோலே மெனக்கிடும் காட்சியின் அழகியல் நம்முள் சுவாசம் போல் கலந்து ரசிக்க வைக்கும். அதுபோலத்தான் மொஸிமோவுக்கு அவள் கொடுக்கும் முத்தமும்.
தனது பக்கெட் லிஸ்ட்டில் தான் வரையும் ஓவியத்தை யாரிடமாவது காட்ட வேண்டுமென்பதையும் சோலே பட்டியலிட்டிருப்பாள். அவள் அப்படி வரையும் ஓவியம் டேனியோ கடற்கரையில் அமர்ந்திருக்கும் காட்சி. அதை அவள் டேனியோவிடம் கொடுக்கும் போதுதான் அவளுக்கும் அவனுக்கும் அவர்களுக்குள் இருப்பது காதல் என்பது புரியும். ஆனால் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் சந்திப்போம் என்ற அவர்களின் தீர்மானம் தான் அந்தக் காதலுக்கு சாட்சி.
சோலேவின் 25-வது பிறந்தநாளில், அவள் முன்னர் கொடுத்த உதட்டு முத்தத்தை மொஸிமோ திருப்பித்தர வேண்டாம் என விலகுவாள். டேனியோ தான் அவளின் காதல். அதைத் தீர்மானித்திருப்பாள் சோலே.
மொஸிமோ விவகாரத்தில் முன்னர் ஒருமுறை அவள் மருத்துவரிடம் பேசும்போது, “நீ ஒரு விஷயத்தை வேண்டும் அல்லது வேண்டாம் என்று முடிவு செய். அதுவே முதல் படி. அதை நீதான் எடுக்க வேண்டும்” என்று கூறியிருப்பார்.
இப்போது சோலே, அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்திருப்பதைக் காணும்போது நாம் எல்லோரும் ஃபோர்த் வால் பிரேக்கிங் போல, “பார்த்தியா நீ சரியாயிடுவன்னு நாங்க சொன்னோம்ல” என்று சிலாகிக்க ஆரம்பித்திருப்போம். நான் அப்படித்தான் சொன்னேன் அவள் வெற்றிகளைக் கண்டு.
சோலேவின் பிறந்தநாளுக்கு பரிசுடன் வரும் எம்மாவின் கணவர் சேவியர், “எம்மா அந்தக் கடிதத்தை எழுதும் போது அவளிடமும் நிறைய அச்சங்கள் இருந்தன. அவை எல்லா அச்சங்களையும் உன்னுடன் சேர்ந்தே கடக்க விரும்பினாள்” என்பான்.
மனிதர்கள் எல்லோருக்கும் பயமும், பதற்றமும் இயல்பானதே. அதைக் கடக்க சிலருக்கு அவர்களின் தன்முனைப்பே போதும். சிலருக்கு உதவிக்கரம் தேவைப்படும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
சோலே அதில் மூன்றாவது வகை. மிரியமுடன் ரோம் நகருக்குச் செல்லும் சோலேவின் முடிவு அவள் பக்கெட் லிஸ்ட்டில் இல்லாதது. அதை எடுக்க அவளுக்கு அசாத்திய தன் முனைப்பு தேவைப்பட்டிருக்கும்.
அவள் முதன்முதலில் ஓர் ஐஸ்க்ரீம் வாங்கத் தடுமாறியவள். அதிலிருந்து எம்மாவின் கடிதத்தில் எழுதிக் கொண்ட பக்கெட் லிஸ்டையும் தாண்டி முடிவெடுப்பதென்றால் அது புறக் காரணிகளால் மட்டுமே முழுவதும் சாத்தியமாகிவிடாது.
சோலேவின் விடுபடுதல் என்பது எம்மா கடிதத்தில் கோடிட்டிருந்த இடங்களை நிரப்பியதிலிருந்தே தொடங்கிவிட்டது. அவளுக்கு பாயுமொளி அவளே. அந்த ஒளியில் அவள் கண்டடைந்த ஊன்றுகோல்கள் தான் மிரியம், டேனியோ, மொஸிமோ அனைவரும்.
நம் எல்லோருடைய எதிர்காலமும் கோடிட்ட இடங்களை நிரப்புதலில் தான் இருக்கிறது. அதில் நாம் எதை நிரப்புகிறோம் என்பது இறுதி வெற்றி என்றால் நிரப்பத் துணிவதே முதல் வெற்றி.
சோலேவின் முதல் வெற்றி நம் அனைவருள்ளும் வெற்றி வேள்விகளை மூட்டிச் செல்லட்டும். சோலே என்றால் இத்தாலிய மொழியில் சூரியன் என்று அர்த்தமாம். சூரியன் போல் பாயும் ஒளி தான் அவள் எனக்கு.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
‘திரை தேவதைகள்’ முதல் 25 அத்தியாயங்கள் இப்போது புத்தகமாக வெளியாகி இருக்கிறது. நூலை வாங்க விரும்புவோருக்கான இணைப்பு > திரை தேவதைகள்