‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தின்ஜித் அய்யாதன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் பாகுல் ரமேஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள 'எக்கோ' (Eko) திரைப்படம் மலையாளத் திரையுலகில் மற்றொரு தனித்துவமான த்ரில்லராக பரவலாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவையும், மனித உறவுகளில் அன்பின் பெயரில் நிகழ்த்தப்படுகிற ‘ஆதிக்க’த்தையும் ஓர் இருண்ட கோணத்தில் அணுகும் இந்தத் திரைப்படம், பாதுகாப்புக்கும் கட்டுப்படுத்தலுக்கும் இடையிலான எல்லையை ஆழமாக அலசுகிறது.
கேரளாவின் அடர்ந்த மலைப் பகுதியின் பின்னணியில் நகரும் கதை, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓர் அரிய வகை நாய் இனத்தைப் பராமரிக்கும் குரியச்சன் (சவுரப் சச்தேவா) என்ற நபரைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது. குரியச்சன் திடீரென மாயமாகிறார். அவரைத் தேடி வரும் பல்வேறு நபர்கள் (நரேன், வினீத்), அவரது மனைவி மிலாத்தி சேட்டத்தி (பியானா மோமின்), அவருக்கு பணிவிடை செய்யும் பியூஸ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞன் என படம் பல அடுக்குகளாகப் பிரிகிறது.
இந்தக் கட்டுரையில் படம் தொடர்பான முக்கியமான ஸ்பாய்லர்கள் இடம்பெற்றுள்ளன என்பதை படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
குரியச்சன் எங்கே? அவர் கொல்லப்பட்டுவிட்டாரா? அல்லது தலைமறைவாக இருக்கிறாரா என்ற கேள்விக்கான விடையை பார்வையாளர்கள் வசமே விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர்.
படத்தின் இறுதி 20 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதமும், பின்னணி இசையும் பார்வையாளர்களை உறைய வைத்து விடுகிறது.
குரியச்சனின் மனைவியாக வரும் மிலாத்தி சேட்டத்தி தான் இந்தக் கதையின் உண்மையான ஆளுமை என்று ஆடியன்ஸுக்கு உறைக்கும் தருணத்தில் எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். என்ன ஆனார் குரியச்சன்?
இதற்கு சமூக வலைதளங்களில் பல தியரிகளை ரசிகர்கள் எழுதி வந்தாலும், படம் முழுக்க வைக்கப்பட்டுள்ள குறியீடுகளின் வழியே நமக்கு சொல்லப்படுவது என்ன என்பதை பார்க்கலாம்.
மலேசியாவில் தன் முன்னாள் கணவரை சதி செய்து சிறைக்கு அனுப்பிவிட்டு, அவரை குரியச்சன் கேரளாவுக்கு அழைத்து வந்த விஷயத்தை மோகன் போத்தன் கதாபாத்திரம் வழியாக தெரிந்து கொள்ளும் மிலாத்தி, இந்தத் துரோகத்தின் விளைவாக குரியச்சனை நேரடியாகக் கொல்லாமல் அவருக்கு மிகக் கொடுமையான ஒரு தண்டனையை வழங்குகிறார்.
அதாவது குரியச்சன் தனது பாதுகாப்புக்காக வளர்த்த அதே வேட்டை நாய்களை, மிலாத்தி தனது ரகசியக் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்கிறார். தன்னை தேடுபவர்களிடமிருந்து தப்பிக்க குரியச்சன் தேர்வு செய்த அந்த இருண்ட குகைக்குள்ளேயே அவரை சிறை வைக்கிறார் மிலாத்தி. அவருக்குத் தேவையான உணவை அந்த நாய்களே மூங்கில் குழாய்கள் மூலம் கொண்டு செல்கின்றன.
ஆனால், அதே நாய்கள் அவரை குகையை விட்டு வெளியே வர விடாமல் தடுத்து நிறுத்தும் சிறைக்காவலர்களாக மாறுகின்றன. இதற்கான குறியீடுகளையும் படம் முழுக்க ஆங்காங்கே வைத்திருக்கிறார் இயக்குநர் தின்ஜித்.
தன்னுடைய எஜமானரை கொல்லப்பட்டு விட்டாரோ என்ற சந்தேகத்தில் மிலாத்தியை கொல்ல கத்தியை எடுக்கும் பியூஸை, சுற்றி வளைக்கின்றன மிலாத்தியின் வளர்ப்பு நாய்கள். அப்போது தன்னுடைய கணவரான குரியச்சன் இருக்கும் மலையை பைனாக்குலர் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் மிலாத்தி, பாதுகாப்புக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து பியூஸிடம் பேசும் வசனங்கள் முக்கியமானவை.
'எக்கோ' படத்தின் க்ளைமாக்ஸ் சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது. குரியச்சன் தனது அதிகாரத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட எந்த நாய்களைப் பயன்படுத்தினாரோ, அதே நாய்களே அவருக்குச் சிறையாக மாறுகின்றன. குரியச்சனின் கட்டுப்பாட்டில் இத்தனை காலமும் ஓர் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த மிலாத்தி, இனி குரியச்சனை ஓர் ஆயுள் தண்டனை கைதியாக வைத்திருக்கப் போகிறார்.
இந்த உலகில் நன்றியுள்ள விஸ்வாசமான விலங்குகளில் முதன்மையானது நாய்தான் என்பது பொதுவான புரிதல். ஆனால், மனிதனிடம் நாயைக் காட்டிலும் அதீத விஸ்வாச குணமும் உண்டு என்பதை பியூஸ் கதாபாத்திரத்தின் வழியாக மிலாத்திக்கு மட்டுமல்ல, நமக்கும் உணர வைக்கிறது ‘எக்கோ’.
அதேபோல், ‘மாஸ்டர்’ என்பவர் யார் என்பதற்கான விடைகளையும் இப்படத்தில் தேடிக் கண்டடைய முடியும். மலேசிய நாய்களை கேரளாவுக்கு எடுத்து வந்து வளர்ப்பது என்னவோ குரியச்சனாக இருக்கலாம்; ஆனால், ஒருகட்டத்தில் அந்த நாய்களுக்கு ‘மாஸ்டர்’ ஆக உருவெடுக்கிறார் மிலாத்தி. நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் வல்லவரான குரியச்சனை தாண்டி, அவற்றுக்கு மிலாத்தி ‘முதலாளி’ ஆனதன் பின்புலம் குறித்து பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நம் சமூக - குடும்ப அமைப்பு முறையில் அன்பு, பாசம் என்ற பெயரில் ‘பாதுகாப்பு’ உணர்வை அளிக்கிறேன் என்ற பெயரில் ஒருவரை, குறிப்பாக பெண்களை முழுக்க முழுக்க தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவர்களது தனிச் சுதந்திரத்தைப் பறித்து, அவர்களுக்கே தெரியாமல் பர்சனல் வாழ்க்கையின் ஆயுள் சிறைக்குள் தள்ளும் ஆதிக்க மனநிலையும் செயல்பாடுகளையும் கொண்டவர்கள் நம்மைச் சுற்றி விரவிக் கிடக்கின்றனர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘எக்கோ’.