கடும் நெடும் சமூக அவலங்கள் எல்லாம் உடைந்து சிதறத் தொடங்குவது, ஆரோக்கியமான விவாதங்களில் இருந்து தான். அந்த விவாதங்களைத் தூண்டும் வல்லமை கலைக்கு உண்டு. அது எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
அவ்வாறாக சமூக மாற்றத்துக்கான ஒரு கலை படைக்கப்பட்ட பிறகு, அதை இந்தச் சமூகம் போற்றியும், தூற்றியும் பேசுவது இயல்பு. இருந்தாலும், அந்தப் பேச்சு நீரில் வீசப்பட்ட கல் ஏற்படுத்தும் சிற்றலை போல் ஓய்ந்துவிடாது. மாறாக நிலத்தைப் பிளக்கும் பூகம்பத்தைப் போல் அதன் அதிர்வலைகள் நீளும்.
சமூகத்தின் மனசாட்சியை அதிர்வலைகளால் உலுக்கிப் பார்க்கும் உன்னத கலைப் படைப்பு தான் காலத்தை வென்றவை என்றும் கொண்டாடப்படும். கூடவே, அது யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அவர்களின் தலையில் மணி மகுடமாக நிலைத்துவிடும்.
செப்.25,2026-ல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டோரதி’ (Dorothy), திருநர் சமூகத்தின் மீது வெகுஜன சமூகம் கொண்டுள்ள வெறுப்புணர்வை மட்டுமல்ல, திருநர்கள் இச்சமூகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது என்னவென்பதையும் உணர்வுப்பூர்வமாக, காத்திரமாக, அதேவேளையில் நெகிழ்ச்சியாக படைத்திருக்கிறது.
‘டோரதி’ என்றால் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தமாம். படத்தைப் பற்றிய அலசலுக்குள் செல்வதற்கு முன்னர், திருநங்கை மரக்காவின் எண்ண அலைகளைப் பதிவு செய்வதுவே இந்த அத்தியாயத்துக்கான நியாயமாக இருக்கும்.
ஆதிக்க பாலினம், பெண்ணை மையப்படுத்தி எடுத்த பாடல்களைக் கேட்டும் பாடியும் நாங்கள் தொலைந்துபோன நிலையில், எங்களுக்கே எங்களுக்கென ஒரு தனிப்பாடல் கிடைப்பதெல்லாம் வரம். நாங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள ஒரு முத்தக்காட்சியை கொடுத்த முதல் திரைப்படம் ‘டோரதி’ .- திருநங்கை மரக்கா - தமிழ் ஆசிரியர் - சென்னை.
மரக்கா - பள்ளி ஆசிரியர்
நம் சக மனிதர்கள். நம்மைப் போன்று அங்க அவயங்களும், ஆசை, பாசங்களும் கொண்டவர்கள். அவர்களில் சிலர் தங்களை பெண்ணாக உணர்கின்றனர், சிலர் ஆணாக உணர்கின்றனர். தாங்கள் உணரும் பாலினத்தை தழுவிக் கொண்டார்கள் என்பதற்காகவே அவர்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பதும், புறக்கணிப்பதும் எத்தனை பெரிய குற்றம். அந்தக் குற்றத்தை ஏதோ சேர்த்துவைத்த சொத்தை வாரிசுகளுக்குக் கடத்துவது போல் சிலர் கடத்துவது எத்தனை கொடூரம்.
பிறையென்றும், முழுமதியென்றும் ரசனைக்கேற்ப நிலவைக் கவிஞர்கள் கொண்டாடலாம். ஆனால் தேய்ந்தாலும், வளர்ந்தாலும் அது நிலவுதான். மனிதர்களில் மட்டும் ஏன் ஆண் நெடில், பெண் குறில், திருநர்கள் குறியீடற்றவர்கள் என்று பிரிக்க வேண்டும்? எல்லோருமே மனிதர்கள் தானே!
‘டோரதி’ திரைப்படம், நம்மில் சிலர் அப்படிச் சுமந்து கொண்டிருக்கும் பாலின பாகுபாடு ஒன்றும் விலைமதிப்பற்ற சொத்து அல்ல; கைகழுவ வேண்டிய கசடு என்று ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறது.
அதைப் பக்குவமாகச் செய்திருக்கிறார்கள் கார்த்தி (ரிஷிகாந்த்) மற்றும் சுப்பு (சனந்த்). 1990-களில் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. (குறிப்பு: திரை அலசலுக்காக ஸ்பாய்லர்கள் இக்கட்டுரையில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்க.)
அந்த ஊருக்குப் பிழைக்க வந்தவர்கள் கார்த்தியும், அவனது அம்மாவும். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் குடும்பத் தலைவன் ‘விசில்’ வீரய்யா. சாதியும், ஆண் திமிரும், பெண் வெறுப்பும் நிறைந்த அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டி சுப்பு, தனது தந்தையும், அண்ணன்களும் நல்லவர்களா, கெட்டவர்களா என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத பிஞ்சு. ஆனால் அவன் மனதில் அண்ணன்களின் ரவுடித்தனம் தான் ஆண்மை என்று பதிந்திருக்கிறது.
விசில் வீரய்யா (நடிகர் முத்துக்குமார்)
ஒரு குழந்தையின் பார்வையும், செயலும் தனித்தது அல்ல. அதைச் சூழ்ந்திருக்கும் குடும்பம், சமூகத்தின் பிரதிபலிப்பே.
குடும்பத்தை உள்வாங்கிய சுப்பு நண்பன் கார்த்தியிடம் வீரனாக இருப்பது எப்படியென்று வகுப்பெடுக்கிறான். சாப்பிடுவதில் கூட ஆண்மை தெறிக்க வேண்டும் என்று அவன் புத்திக்குள் பதியவைக்கப்பட்டிருக்கிறது. விளைவு, ‘ரத்தம் ஆண் பார்த்து அஞ்சுவதற்கு அல்ல’. ‘அழுகை ஆணின் உணர்ச்சி அல்ல...’ என்று கார்த்திக்கும் ஓதுகிறான். இருவரும் கல்வியை கைவிட்டு, சேவல் சண்டை, குடி, பீடி, ரவுடித்தனங்கள் என்று வழிதவறி நிற்கின்றார்கள்.
சுப்புவின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள் டோரதி. அவளின் சிரிப்பில் சுப்புவுக்கு ஓர் ஒளி கிடைக்கிறது. அத்தனை நாட்களாக கார்த்தியே கதி என்று சில்லறை சண்டைகளை வரிந்து கட்டி இழுத்துத் திரிந்த அவன், அண்ணியுடன் குழாய் புட்டு செய்வது, கோலமிடுவது, பாத்திரம் துலக்குவது என்று ஒதுங்குகிறான். சிறுவயதில் பள்ளித் தோழியிடம் ‘ஏண்டீ தனம் எங்க வீட்ல பொம்பளைங்களே இல்ல; நீ பேசாட்டி எங்கூட்டுக்கு வந்துடுறியா?’ என்று ஏங்கிய சுப்பு மனதின் வெற்றிடத்தை டோரதி நிரப்பிவைக்கிறாள்.
சிறு வயதில் சுப்புவிடம் ‘உனக்கு அம்மாவா நான் இருக்கேன் பா’ என்று சொல்வார் கார்த்தியின் அம்மா. அதன் பிறகு அவனுக்குக் கிடைத்த இன்னொரு தாய் மடி டோரதி.
தனலட்சுமியும், கார்த்தியின் தாயும், டோரதியும் தான் சுப்புவின் வாழ்வில் மாறி மாறி ஒளிவீசிக் காத்து நிற்கும் கலங்கரை விளக்கங்கள்.
அப்படிச் சென்று கொண்டிருந்த சுப்புவின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது டோரதியின் அகால மரணம்.
டோரதி - கீர்த்தி சுரேஷ்
டோரதியின் மரணத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எவ்வித விளக்கமும் கொடுத்திருக்க மாட்டார். சுப்புவின் அக்காவும், அம்மாவும் கிணற்றில் விழுந்து இறந்தவர்கள். சுப்புவின் மூத்த அண்ணி அந்த வீட்டில் வாழாமல் சென்றவர். பெண்களை சகித்துக் கொள்ளாத, அவர்கள் மரணத்தில் துளியும் சலனம் கொள்ளாத வீட்டில் டோரதியின் மரணத்துக்கு யாதொரு காரணமும் சொல்லத் தேவையில்லை.
சாதி ஆணவத்துக்கும், ஆண் திமிருக்கும் பலியாகும் பெண் உயிர்களைப் பற்றி இந்தச் சமூகம் ஒருபோதும் கூடி நின்று கேள்வி கேட்டதில்லை.
மாறாக, சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது என்பதை குத்திக்காட்டவே அந்த மரணமும், சுப்புவின் தவிப்பும், மற்றவர்களின் அலட்சியமும், சட்டத்தின் ஓட்டைகளில் நியாயம் நீர்த்துப்போவதும் சிங்கிள் ஷாட்டில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
டோரதியின் மரணத்துக்கு பின்னர் படம் இன்னொரு தளத்துக்கு செல்கிறது.
சுப்பு தன்னுள் தான் உணர்ந்த பெண்மை பற்றி டோரதியிடம் விவரிக்கும்போது, “எதுக்கு பயப்படணும்; ஏன் அடக்கணும். உங்க அப்பாவும், அண்ணன்களும் வீட்டிலிருக்கும் பெண்களை அடக்குறாங்க. நீ உனக்குள் இருக்கிற பெண்ணை அடக்குற” என்பாள்.
திருநங்கை மரக்காவிடம் பேசியபோது, “பெண்கள் விடுதலை இல்லாமல் எங்கள் விடுதலை சாத்தியமில்லை” என்றார். ‘டோரதி’ கதையுடன் அவருடைய இந்தக் கருத்து கச்சிதமாகப் பொருத்திப் போகிறது.
விசில் வீரய்யா குடும்பத்தில் பெண்களுக்கும் இடமில்லை. பெண்மைக்கும் இடமில்லை.
ஆனால் அக்கா, அம்மாவின் மரணங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தை டோரதியின் மரணம் சுப்புவுக்கு ஏற்படுத்தும். யதார்த்தம் பற்றிய புரிதலையும், தனக்காக நிற்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான துணிச்சலையும் தரும்.
மனிதனை அடிமையாக்கும் முதல் விஷயம் அச்சம். உறவுகள், அமைப்புகள், உணர்வுகள் என்று எதன் மீதாவது உண்டாகும் அதீத அச்சத்தால் தான் மனிதன் அடிமையாகிறான்.
சுப்பு, தனது அப்பா, அண்ணன்கள், சாதி பீடித்த குடும்ப அமைப்பு, மீதான பயத்தை தாடியை சவரம் செய்யும்போது வழியும் ரத்தத்தின் வாயிலாக வெளியேற்றுகிறான். அடிமைத் தனத்திலிருந்து விடுபடுதலே தனக்கான அங்கீகாரத்தை கண்டடையும் வழி என்று உணர்ந்து ‘என் தாய்க்கு நான் ஒரு மவ..’ என்று நிறுவிவிட்டு புறப்படும் காட்சி விசில் வீரய்யா குடும்பத்தையும் நம்மையும் உலுக்கி எடுக்கும்.
டோரதியின் மரணம் சுப்பு மறைத்து வைத்திருந்த பெண்மையை வெளியில் கொண்டுவருகிறது. சுப்புவின் மாற்றம் அவனது நண்பன் கார்த்திக்குள் மங்கிக்கிடக்கும் மனிதத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.
சாதியும் ஆண் திமிரும், அது வளர்த்தெடுக்கும் பாலின பாகுபாடும் பச்சோந்தி போல நிறம் மாறி பதுங்கிக் கொண்டு, ஆதிக்கம் செலுத்தக்கூடியவை
‘டோரதி’யின் இரண்டாம் பாதி இதைச் சொல்லித்தான் மனங்களை கனக்க வைக்கிறது.
சுப்புவின் மாற்றம் விசில் வீரய்யாவுக்கும், குடும்பத்தினருக்கும் கவுரவப் பிரச்சினை. மகள் சாதி மாறி காதலித்தால் மட்டுமல்ல, மகனாகப் பிறந்தவன் தனக்குள் பெண்மையை உணர்ந்தாலும் கவுரவத்துக்கு இழுக்கு.
“தோக்குற சேவல் பொட்டக் கோழி மாதிரி குழம்புக்குத்தான் ஆவும்” - இப்படிச் சொல்லும் விசில் வீரய்யாவுக்கு தான் கட்டி எழுப்பிய சாதி, ஆண் திமிரை சுமக்காத சுப்புவும் பொட்டக் கோழி போல் கொல்லப்பட வேண்டியவன்தான்.
அதனால், அதுநாள் வரை கார்த்தி மீதிருந்த சாதியப் பாகுபாடு தளர்த்தப்பட்டு, “அது (சுப்பு) இருக்கக் கூடாது கார்த்தி. நம்ம எல்லோரோட கவுரவப் பிரச்சினை” என்று விசில் வீரய்யா பாசம் காட்டுவான்.
சிறுவயதிலிருந்து கார்த்தி - சுப்பு நண்பர்களைக் கொண்டாடும் ஹோட்டல் கடைக்காரர்கூட, “பிச்சை, ப்ராத்தல்னு சுப்பு கஷ்டப்படுறதவிட கருணைக் கொலை செய்யுறுதா நினைச்சுக்கோ” என்று கூறுவார். அன்புக்கு காசு மட்டும்தான் நிகரில்லை. சாதி, பாலினம், ஆணாதிக்கம் எல்லாம் அன்பைவிட பல படிநிலைகள் உயர்ந்ததே அவரைப் போன்றோருக்கு.
கார்த்தி (ரிஷிகாந்த்)
சாதி என்று வந்தால் மேல் - கீழ் என்றும், பாலினம் என்று வந்தால் அவன் - அவள் - அது என்றும், வர்க்கம் என்று வந்தால் பணம் படைத்தவன் - ஏழை என்றும் பாகுபாடுகளை மனிதர்கள் விரிவுபடுத்திக் கொண்டே செல்வார்கள்.
உலகில் கடைசியாக இரண்டு மனிதர்கள் மட்டுமே எதிரெதிர் நிற்கும் பட்சத்திலும்கூட தங்கள் அடையாளத்தை வேறேதேனும் ஒன்றோடு பொருத்தி ஒருவரைவிட இன்னொருவர் உயர்ந்தவர் என்று நிரூபிக்கவே முற்படுவார்கள். மனிதன் தன் மனப்பான்மை இப்படிச் சிக்கலாக்கியிருப்பது வேதனையானது.
‘கவுரம் முக்கியம்’ என்ற கற்பிதத்தை சுமந்து செல்லும் கார்த்தி எனும் ஆண், ட்ரான்ஸ்ஃபோபிக்காக நடந்து கொள்ளும் அத்தனைக் காட்சிகளுமே இச்சமூகத்தின் பிரதிபலிப்பு.
நண்பனை அடித்த ஊர்க்காரனை கொலை செய்த கார்த்தி, நண்பனுக்கு பிடித்த ப்ரூஸ் லீ படத்தை லாரியில் ஒட்டி வைத்திருக்கும் கார்த்தி, பெண்மை தரித்த சுப்பு அருகிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் அருவருப்பில் நெளிவான். சுப்பு நெருங்க நினைக்கும்போதெல்லாம் விரட்டியடிப்பான். கொலைக்கான ஒத்திகைகள் தான் அவன் மனதை சூழ்ந்திருக்கும்.
வன்மமும், சதியும் நிறைந்த அவனிடம், “உங்க பார்வைதான் எங்கள பிச்சையெடுக்க வைக்குது. பாலியல் தொழில் செய்ய வைக்குது. இல்லைனா இந்த வாழ்க்கையே வேணாம்னு தற்கொலை செய்ய வைக்குது” என்று திருநங்கை ஜீவா சுப்ரமணியன் பொங்கும்போதுதான் கார்த்தியின் காதில் விழும் முதல் விதை. அதுவரை வசைச்சொற்களை வாரி வழங்கியவன் முதன்முறையாக ‘நீங்க’ என்றும் ‘ஏம்மா’ என்றும் அழைப்பான்.
கடும் நெடும் சமூக அவலங்கள் எல்லாம் உடைந்து சிதறத் தொடங்குவது, ஆரோக்கியமான விவாதங்களில் இருந்து தான் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டதும் இந்தக் காட்சியை நினைவில் கொண்டுதான்.
அந்த ஆரம்பப் புள்ளி கார்த்தியை படிப்படியாக செதுக்கி சிற்பமாக்கும். எழுத்தாளர் சரவணன் சந்திரனின் கூடுதல் திரைக்கதை முயற்சிகள் படம் நெடுக அதை செவ்வனே செய்திருக்கிறது.
‘8 ப்ரோட்டா, 4 சுக்கா, 2 ஆஃப் பாயில்..’ என்று வாங்கி ருசிக்கும் சுப்பு, கார்த்திக்கு ஒரு பங்கு எடுத்துவைக்கும் போது அவன் பூக்கும் புன்னகை அத்தனை சுகமானது. ‘ஒருவழியா ஸ்மைல் பண்ற’ என்று சுப்பு ஆசுவாசப்படும்போது நம் சக மனிதர்களாக திருநர் சமுதாயம் எதிர்பார்க்கும் புன்னகைப் பரிசை நாம் ஏன் தர மறுக்கிறோம் என்று சிந்திக்கவைக்கிறது.
அருவருப்பற்ற பார்வை, மனதிலிருந்து வரும் ஒரு புன்னகை அது இருந்தால் திருநர்கள் தங்களை அந்நியர்களாக உணர மாட்டார்கள் தானே.
கார்த்தியின் மனமாற்றம் நிதானமாக நிகழும். ஆனால் அது உறுதியானதாக இருக்கும். வெறும் கருணையால் உயிர் பிச்சை இடுவதாக அல்லாமல், அன்பால் சுப்புவை மனப்பூர்வமாக அங்கீகரிப்பதாக இருக்கும்.
பயணங்கள் மனிதனின் குறுகிய சிந்தனையை அப்புறப்படுத்தும். ஒரு மனிதன் தன்னை சுய பரிசோதனை செய்து உள்ளிருந்து பக்குவப்படுத்திக் கொள்ள உதவும்.
சுப்புவுக்கு வீட்டைவிட்டுச் செல்லும் நிரந்தரப் பயணம் விடுதலை. அவன் அண்ணன் வடிவுக்கு அவன் பயணப்பட்டு பதுங்கிய இடம் தான் ‘ஒரு உசுரு இருக்கணுமா, வேணாமாங்குறத முடிவு பண்ண நாம யாருன்னு!’ பேச வைக்கும் ஞானத்தின் ஊற்று. தன்னிடமிருந்து ‘போடி’ என்ற ஒற்றை வார்த்தையைவிட சுப்புவுக்கு வேறேதும் தேவைப்படவில்லை என்பதை கார்த்திக்கு புரியவைத்ததும் நீண்ட லாரி பயணமே.
‘டோரதி’ படத்தின் வெற்றி ‘ஒரு பொண்ண பக்கத்துலேயே வச்சு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோன்னு தோணுது’ என்று கார்த்தி சொல்கையில் திருநர் சமூகத்தின் மீதான சமூகப் பார்வையை புதுப்பிக்கும் முயற்சியோடு நின்றுவிடவில்லை.
அதன் வீச்சு, “அது காதல் தான். ஊர் என்ன நினைக்குதுன்னு நினைக்காத, உன் மனசு என்ன சொல்லுதுன்னு கேளு.” என்ற வசனம் வரை நீள்கிறது.
திருநர்கள் பெயரற்ற எக்ஸ் பாலினம் இல்லை நாம் பேசிப் பழகி, வாழ்ந்து வெகுஜனத்தில் ஐக்கியப்படுத்த வேண்டிய இனம் என்ற சமூகப் பொறுப்பை ‘டோரதி’ கடத்தியிருக்கிறது.
முதல் காட்சியில் ‘சுப்புவை முடித்துவிட்டேன்’ என்று கார்த்தி சொல்வதற்கு முன் அவன் சிந்தும் கண்ணீரும், சுப்புவின் மரணச் செய்தியை கேட்ட பின்னர் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற பாட்டைக் கேட்டுக் கொண்டு விசில் வீரய்யா வடிக்கும் கண்ணீரும் வெவ்வேறு.
கார்த்தி (ரிஷிகாந்த்)
‘மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்...’ என்று சிறகை விரித்ததால் வந்த கண்ணீர் கார்த்தியுடையது. விசில் வீரய்யாவின் கண்ணீர், வறட்டு கவுரவங்களுக்கு அடகுவைத்த வட்டிக்கடைக்காரனுடையது. அவனைப் பொறுத்தவரை சுப்புவை இழந்தது வாரிசு எண்ணிகையில் ஒரு கழிவு.
பாலின பாகுபாடு எங்கிருந்து விளைகிறது. எது நம் சமூகத்தில் குறிப்பிட்ட சிலரை தங்களின் சுயத்தை வெளிப்படுத்தவிடாமல் தடுக்கிறது என்று பேசும் ‘டோரதி’ ஒரு வலுவான உரையாடலை உருவாக்கி இருக்கிறது.
சாதியையும் ஆண் திமிரையும் தகர்த்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அவற்றை விடாப்பிடியாகச் சுமப்பேன் என்பவர்களுக்குள் ஒரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. ‘அன்புதான் வெல்லுமே எந்த நாளும்’ என்று நிறுவியிருக்கிறது.
‘வந்து சொல்லாத உறவ அவ நெஞ்சோட நெனச்சா... அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா...’ என்று சுப்புவை நினைத்து என்னை முணுமுணுக்க வைக்கிறது.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in