மம்முட்டி

 
ஓடிடி விமர்சனம்

Dominic and the Ladies’ Purse: பர்ஸும் சில கொலைகளும் | ஓடிடி விரைவுப் பார்வை

செ.ஞானபிரகாஷ்

நிறங்களை அடையாளம் காணமுடியாத குறையை மறைத்து போலீஸில் சேர்ந்து மாட்டிக்கொண்டு, அந்த வேலையிலிருந்து வெளியே வந்து டிடெக்டிவ் நிறுவனம் நடத்தி வருகிறார் டோமினிக் (மம்மூட்டி). மனைவி பிரிந்து போய் தனியாக வசிக்கிறார்.

ஃப்ளாட்டின் உரிமையாளர் விஜி வெங்கடேஷ் கண்டெக்கும் பர்ஸை மம்மூட்டியிடம் தருகிறார். பல வருடங்களாக தனது மகளைக் காணாமல் அவர் வருகைக்காக காத்திருக்கும் விஜியின் கோரிக்கையை ஏற்கிறார். பர்ஸில் உள்ள சில தகவல்களால் பூஜா தங்கியுள்ள இடத்துக்கு சென்றபோது பர்ஸ் தொலைந்த நாளில் இருந்து பூஜாவும் மாயமானது தெரிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரேக் அப் ஆன காதலன் கார்த்திக்கை பார்க்க கிளம்பியதாக தோழிகள் தெரிவிக்கின்றனர். முழுதாக கண்டுபிடித்தால் வாடகை, வாங்கிய பணத்தை தரவேண்டாம் என விஜி சொல்ல, முழுக்க களத்தில் இறங்குகிறார் மம்மூட்டி.

மம்மூட்டிக்கு உதவியாக கோகுல் சுரேஷும் (சுரேஷ் கோபி மகன்) வந்து சேருகிறார். தொடர்ந்து விசாரித்து சென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூஜாவுடன் லவ் பிரேக் அப் ஆன தினத்திலிருந்து கார்த்திக்கும் காணாமல் போனது தெரிகிறது. கார்த்திக் எப்போது வருவான் என அவரது தங்கை சுஷ்மிதா பட் காத்திருப்பது தெரிகிறது. இச்சூழலில் கார்த்திக், பூஜாவுக்கு என்னவானது என்பதுதான் திரைக்கதை.

இப்படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு ஓடிடியிலும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழிலும் ஜி5-ல் பார்க்கலாம். கவுதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் இயக்கிய முதல் படம் இது. ஏற்கெனவே காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என கலக்கிய இவர், இம்முறை ரொம்பவும் ஸ்லோவான டிடெக்டிவ் கதையை எடுத்துள்ளார்.

குறிப்பாக, நம்மூரில் வந்த ‘துப்பறிவாளன்’ கதையின் முக்கியப் புள்ளியாக நாய்குட்டி இடம் பெற்றதுபோல், இதில் பர்ஸ் இடம்பிடித்துள்ளது. தொடக்கத்தில் இருந்து நெடுநேரம் ரொம்பவும் மெதுவாக சென்றாலும் கடைசி அரை மணி நேரம் பல திருப்பங்களை காட்டி ஈடு செய்துவிடுகிறார் கவுதம்.

மம்மூட்டி ‘டோமினிக்’காவே மாறி, இயல்பான நகைச்சுவை அலட்டல் இல்லாத தேடுதல் என படத்தை முற்றிலும் தாங்கியுள்ளார். தேடுதல் மர்மத்தை ரொம்ப ரொம்ப கேஷுவலாக கண்டறிகிறார் மம்முட்டி. படம் முழுக்க அவரது ராஜ்யம்தான். அவர் முன்னால் வேறு யாரும் எடுபடவில்லை.

கார்த்திக், பூஜா தேடுதல் நம்மையும் கண்விரிய பார்க்க வைத்து விடுகிறது. க்ளைமாக்ஸ் நெருங்க, நெருங்க திருப்பங்கள் நாம் நிச்சயம் எதிர்பார்க்காததுதான். ஒருமுறை நேரம் இருந்தால் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT