ஓடிடி விமர்சனம்

Bon Appétit, Your Majesty: டைம் டிராவலில் ஒரு ‘சுவை’ அனுபவம் | ஓடிடி வெப் சீரிஸ் அலசல்

முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்

உணவு, காலப் பயணம், அரண்மனை அரசியல், காதல்... இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தரும் ஒரு கதை என்றாலே, அது நம் கவனத்தை ஈர்க்கும். அதுவும் கொரியன் டிராமா எனில் ஆர்வம் மேலோங்கிவிடும். அப்படியான ஒரு கே-டிராமா வெப் சீரிஸ்தான் ‘Bon Appétit, Your Majesty’. முதல் எபிசோடில் இருந்தே ‘இதுதான் கதை’ என்று சில தொடர்கள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும். மிகவும் எளிமையான நேர்கோட்டில் செல்லும் கதைகள் பலவும் கே-டிராமாக்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.

இந்தத் தொடரில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம், அதன் எளிமை. காதல், சரித்திரம், சமையல், உணவு, உணவோடு பின்னிப் பிணையும் நம் உணர்வுகள் என எல்லா கலவையையும் கதைக்களத்தில் முழுமையாக கொடுத்து, நம்மை அதிகம் யோசிக்க விடாமல், நகைச்சுவையுடன் கூடிய தொடரில் ரசித்து மூழ்கும் அனுபவம் கடத்தப்படுவது தனிச் சிறப்பு.

‘லாஜிக் இல்லா மேஜிக்’ என்பதன் அடிப்படையில் இந்தத் தொடரின் நகைச்சுவை கலந்த திரைக்கதை நம்மை தொடருடன் அழகாக ஒன்றிடச் செய்கிறது. தொடரின் பெரும்பாலான பகுதிகளில், இந்த அணுகுமுறை நன்றாக வேலை செய்கிறது. நகைச்சுவை, அழகான காட்சிகள், வலுவான நடிப்பு, உணவை வெறும் காட்சியாக அல்லாமல் உணர்வாக பயன்படுத்தும் தன்மை உள்ளிட்டவை நாம் எளிதாக ரசிக்கக் கூடிய, மனதுக்கு நெருக்கமான ஓர் அனுபத்தை நல்கிடுவதை உணரலாம்.

இந்தத் தொடரோடு பயணிக்கும்போது, கதையில் பின்னியிருக்கும் உணர்ச்சிகள் அதிகமாக சுமையாகாமல் ஓர் அழகிய உணர்வை ஏற்படுத்தி, நம் மனதில் கதாபாத்திரங்களை பதிய வைக்கிறது திரைக்கதையும் காட்சியமைப்பும். ஒவ்வொரு எபிசோடும் அழகாக பரிமாறப்பட்ட ஓர் உணவு போல தோன்ற வைக்கவல்லது Bon Appetite your Majesty வெப் தொடர்.

          

டைம் டிராவல் கதைக்களம்

இந்தக் கதை யியோன் ஜி-யோங் என்ற செஃப்-ஐ மையமாகக் கொண்டது. பாரிஸில் மிச்சலின் ஸ்டார் விருதை வென்றுவிட்டு, சியோலுக்கு திரும்பும் விமானத்தில் ஏறுகிறாள் ஜி-யோங். விமானத்தில் பயணக்கும்பொழுது, சூரிய கிரகணத்தின் தாக்கத்தால், அவள் வாழ்க்கை திடீரென மாறுகிறது. அவள் ஜோசன் காலத்துக்கு டைம் டிராவல் சென்றுவிடுகிறாள்.

அங்கே தன் தாயின் மரணத்தால் மன உளைச்சலில் வாழும், இளம் அரசன் லீ ஹியோனை சந்திக்கிறாள். அவனது தாயின் மரணத்துக்கு காரணமான ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கும் அவன், முதலில் அவளை ‘க்வின்யோ’ (பெண் பிசாசு) என்று தவறாக நினைத்து சந்தேகிக்கிறான். மன்னனும் மக்களும் அவளை சந்தேகிக்க, அவளின் சமையல் திறமை அவளது விதியை மாற்றுகிறது.

நவீன சமையல் முறைகளையும், பாரம்பரிய பொருட்களையும் இணைத்து அவள் சமைப்பது அரசனை கவர்கிறது. அதனால் அவள் அரச சமையலறையின் தலைமை சமையல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறாள். அங்கிருந்து உணவே அவளது மொழி, பாதுகாப்பு, மற்றும் வாழ்வாதாரமாக மாறுகிறது.

அரண்மனை வாழ்க்கையில் அவள் தன்னை பொருத்திக் கொள்ளும்போது, பல சவால்களை சந்திக்கிறாள். சூழ்ச்சியான காங் மொக்-ஜு அவளை எதிரியாக பார்க்கிறாள். அரசனை பதவி நீக்கத் திட்டமிடுகிறான் பிரின்ஸ் ஜே சியோன். அதேநேரத்தில், அரசனின் வாழ்க்கையை மாற்ற ஆரம்பிக்கிறாள் ஜி-யோங். அவள் சமையலின் மூலம், அவன் மறந்துவிட்ட நினைவுகளை, அன்பும் ஆறுதலும் நிறைந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறாள். அதன் விளைவாக, ‘நிதானம்’ மிக்க அரசனாக மெதுவாக மாறுகிறான்.

ஓர் ஈர்ப்பனுபவம்

இதற்கிடையில், ஜி-யோங் ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறாள். அவள் வந்திருக்கும் காலம், அவள் படித்த வரலாற்று நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் காலம். வரலாற்றில் நடைபெறவிருக்கும் கப்சின் சுத்திகரிப்பு (அரசனின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வு) சம்பவத்தை அவள் மாற்ற முயற்சிக்கிறாளா அல்லது 2025-ஆம் ஆண்டுக்கே திரும்பிச் சென்று, தன் தந்தையையும் தனது வாழ்க்கையையும் தொடருகிறாளா என்பதை நோக்கி நகர்கிறது திரைக்கதை. ஒரே தொடரில் இவ்வளவு விஷயங்களை கையாளுவது எளிதல்ல. ஆனால், அவை அனைத்துமே நேர்த்தியாக திரை ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

‘Bon Appétit, Your Majesty’ என்பது பார்க் கூக்-ஜே எழுதிய Yeonsankunui Chefro Salanamki (Surviving as Yeonsangun’s Chef) என்ற வெப் நாவலை (Web novel) அடிப்படையாகக் கொண்டது. அந்த மூலக் கதையின் வலிமை, இந்தத் தொடரிலும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு நவீன சமையல் வல்லுநர், ஆபத்தான அரச அரண்மனையில் வாழ்ந்துகொண்டு உணவை ஓர் ஆயுதமாகவும் உணர்ச்சியாகவும் பயன்படுத்துவது என்ற ஒன்லைனே மிகவும் ஈர்க்கக் கூடியது.

திரைக்கதை, குறிப்பாக தொடக்கமும் நடுப்பகுதியிலும், இந்தக் கருத்தை நன்றாக திரைக்கு கொண்டு வருகிறது. ஒவ்வொரு உணவும் ஒரு கதையை சொல்கிறது. கதாபாத்திரங்கள் தங்களது உணர்வுகளை உணவின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஜி-யோங் வரலாற்றை அறிந்திருப்பது, குறிப்பாக கப்சின் சுத்திகரிப்பு போன்ற நிகழ்வுகள், விறுவிறுப்பான திரை அனுபவத்தை தரக் கூடும்.

ஜாங் டே-யூவின் இயக்கம் இந்தத் தொடரின் முக்கிய பலம். சமையல் காட்சிகள் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டுள்ளன. சமையலின் ஒவ்வொரு செயல்முறையும் நம்மை நிதானமாக ரசிக்க வைக்கும். குறிப்பாக, நகைச்சுவை, காதல், அரசியல் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து படைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இறுதியில் வேகம் அதிகரிக்கும்போது வரலாற்றுக்கும் கற்பனைக் கதையின் போக்குக்கும் அமைக்கப்பட்ட அந்த சமநிலை மெல்ல குலைகிறது. இதற்கு, நேரக் கட்டுப்பாடு காரணமாக இருக்கக் கூடும் போல. எனினும், காட்சியமைப்புகளின் நுட்பம் மூலம் பார்வையாளர்கள் கட்டிப்போடப்படுவது உறுதி.

யியோன் ஜி-யங் ஆக நடித்துள்ள லிம் யூன்-ஆ நம்மை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறார். ஒவ்வொரு முறையும் தன் சமையலின் வாயிலாக அரசனிடம் இருந்து தப்பிக்கும்போது அவரது முகபாவங்களை நாம் நினைத்து நினைத்து சிரிக்கலாம். இந்தத் தொடரை தாங்கிச் செல்லும் இவரது நடிப்பு இயல்பாகவும், மென்மையாகவும் இருக்கிறது. நவீன உலகிலிருந்து பழைய உலகுக்கு வரும் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் நம்பகமாக காட்டுகிறார். தான் ஒரு சமையல் வல்லுநர் என்பதை நம்ப வைக்கிறார். பயமும் உறுதியும் இரண்டையும் சமநிலையாக வெளிப்படுத்துகிறார்.

லீ ஹியோன் என்ற அரசனாக லீ சே-மின் கச்சிதமாகப் பொருந்துகிறார். இறுதிக் காட்சியில் அவர் ஜி-யங்கின் பின்னால் வந்து நிற்கும்பொழுது ‘ச்சோனா’ என்ற ஜி-யங்குடன் நாமும் துள்ளிக் குதிப்போம். லீ சே-மின் நடித்த அரசன் கதாபாத்திரம் சற்று சிக்கலானது (அவர் நடித்திருப்பது வரலாற்றில் உள்ள ஒரு உண்மையான அரசனை தழுவிய கதாப்பாத்திரம்). ஆரம்பத்தில் கடுமையாக இருக்கும் அவர், மெதுவாக மாறுகிறார். இந்த மாற்றத்தை லீ மிக அமைதியாகவும் உணர்ச்சிகரமாகவும் காட்டுகிறார்.

இவர்களின் அழகான ‘கெமிஸ்ட்ரி’ ரசிகர்களிடையே நன்றாவே வேலை செய்கிறது. இருவருக்கும், ஒருவர் மீது ஒரு ஏற்படும் ஈர்ப்பு திடீரென்று வந்தது போல் இல்லாமல், இயல்பாகவும் ஆழமாகவும் ஏற்படுவதுபோல் காட்டப்பட்டிருப்பதுதான் இந்த தொடரின் வெற்றிக்கான முக்கிய அம்சம்.

இந்தத் தொடரின் முக்கிய பலங்களில் ஒன்று, அதன் நகைச்சுவை. நவீன சமையல் முறைகளும், பழைய கால விதிமுறைகளும் மோதும் இடங்களில் இயல்பான சிரிப்பு வருகிறது. ஜி-யங் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நம்மை சிரிக்க வைக்கும். அதே நேரத்தில், இந்த நகைச்சுவை, கதையின் மையத்தையும் அதன் அடிப்படை உணர்ச்சிகளை பாதிக்காமல், கதையின் போக்கொடு பின்னியிருப்பது அருமை.

ஜோசன் காலத்து அரண்மனை அமைப்பு மிக விரிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. குறிப்பாக, சமையலறை மிகவும் உயிர்ப்புடன் காட்டியிருக்கிறார்கள்.

ஒளியமைப்பை சுட்டிக்க்காட்டியாக வேண்டும். சமையல் என்ற அடிப்படையில் கதை இருக்கும்பொழுது, அந்த வெப்பத்தையும், உணவின் அந்த ஈர்ப்பையும் காட்சி அமைப்பில் நன்றாகவே காட்டியிருக்கிறார்கள்.

‘பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊருதே’ என்று கூறும் வகையில் சமையல் காட்சிகளையும், உணவு வகைகளையும் வெப்பமான நிறங்களின் அடிப்படையிலும், அரசியல் காட்சிகளை குளிர்ந்த நிறங்களையும் ஒளிப்பதிவாளர் பதிவு செய்திருப்ப்பார்.

நல்ல திரை அனுபவம் தரும் ‘Bon Appétit, Your Majesty’ தொடர் ஓர் அழகான உணர்வை நம்முள் விட்டுச் செல்கிறது. 2025-ன் மிக பெரிய வெற்றியை இந்தத் தொடர் அடைந்தது. பல வாரங்கள் நெட்ஃப்ளிக்ஸின் தரப் பட்டியலில் முதன்மை இடம் வகித்தது. நீங்கள் எளிதாக ரசிக்கக் கூடிய, உணர்ச்சி மற்றும் நகைச்சுவை கலந்த தொடரை தேடுகிறீர்கள் என்றால், இது ஒரு நல்ல தேர்வு.

தொடக்க எபிசோடுகள் உயிர்ப்புடனும், நடுப்பகுதியில் அரசியல், பின்னணிக் கதைகள், உணர்ச்சிகள் ஆகியவை அதிகமாகவும் செல்லும் இந்தத் தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும் புதிய சவால்களை முன்வைத்து நம்மை நகைச்சுவையையும், உணவையும், காதலையும் வைத்து கட்டி இழுத்துச் செல்கிறார் இயக்குநர் .ஆனால், இறுதிப் பகுதி மட்டும் ஒரு சிறந்த விருந்தின் முடிவில் டெசர்ட் அவசரமாக வந்தது போன்ற உணர்வைத் தரக் கூடும். எனினும் மொத்தத்தில், இந்த டைம் ட்ராவல் நம் மனத்திரைக்கு சுவை தருவது நிச்சயம்.

SCROLL FOR NEXT