கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள வெப் தொடர், ‘அக்கா’. தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ‘பவானி’ என்ற கதாபாத்திரத்திலும், ராதிகா ஆப்தே ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் தன்வி ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இதன் டீஸர் வெளியாகியுள்ளது.
1980-களின் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் தொடரான இது, தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் பகைமைகளால் உருவான ராஜ்ஜியத்தின் மையமே 2 பெண்கள்தான். இத்தொடர் அக். 30-ல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் தனித்துவமான மறக்க முடியாத கேரக்டர், இந்த ‘அக்கா’வில் இடம்பெற்றுள்ள பவானிதான். இதில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும். இந்தக் கதையின் தனித்துவமும், அதன் உலகமும் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.