ஓடிடி விமர்சனம்

ஓடிடி திரை அலசல் | Kathal - புரையோடிய சமூக அவலமும், அரசியல் பகடி அதகளமும்!

குமார் துரைக்கண்ணு

அசோக் மிஸ்ராவுடன் இணைந்து எழுதி யஷோவர்தன் மிஸ்ரா இயக்கியிருக்கும் இந்தி திரைப்படம் 'கட்ஹல்' (Kathal ). பலாப்பழம்தான் இந்தியில் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உத்தரப் பிரதேச கிராமம் ஒன்றில் வசிக்கும் உள்ளூர் எம்எல்ஏ ஒருவரின் வீட்டு மரத்தில் இருந்த இரண்டு ஹைபிரிட் பலாப்பழங்கள் களவாடப்படுகின்றன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும் காவல் துறை காணாமல் போன பலாப்பழங்களைத் தேட ஆரம்பிக்க, அந்த தேடல் பெண்களுக்கு எதிராக அப்பகுதியில் நிகழ்த்தப்படும் மற்றொரு பெரிய குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் இளம்பெண் அதிகாரி மஹிமா பஷோர் (சான்யா மல்ஹோத்ரா) அரசியல் தலையீடுகளை எப்படி எதிர்கொண்டார் என்பதை என்பதை அரசியல் பகடி (Political satire) டிராமாவாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தற்போதைய அரசியல் சூழலில், உத்தரப் பிரதேசத்தை கதைக்களமாக எடுத்துக்கொண்டு, அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் ஒரு குற்றத்தை படமாக்கத் துணிந்த இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. அந்தக் குற்றத்தை ஒரு பெண் அதிகாரி, அதுவும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூலம் கண்டுபிடிக்கச் செய்து சாதியின் பெயரால் இறுகித் துருபிடித்து மூடிக்கிடக்கும் கோடிக்கணக்கான கண்களை விழிக்கச் செய்திருக்கிறார் இயக்குநர்.

திரைப்படங்களில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் பெரும்பாலும் சோகமானதாகவே பதிவு செய்யப்படும் நிலையில், ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படத்தின் வழியே பார்வையாளர்களை சிரிக்கவைத்து பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் யஷோவர்தன் மிஸ்ரா. பலாப்பழம் திருட்டு விசாரணையின்போது எம்எல்ஏ வீட்டிற்குள் விசாரிக்க வரும் மஹிமா பஷோர் நின்றுவிட்டு சென்ற இடத் கங்கா தீர்த்தம்விட்டு கழுவச் சொல்லும் எம்எல்ஏ கதாப்பாத்திரம் வழியாக, சாதியின் பெயரால் மனித மூளைகளில் பாசிப் படர்ந்திருக்கும் கசடுகளை கழுவி சுத்தம் செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

பலாப்பழம் என்று படத்திற்கு பெயர் வைத்து, சாதிய வகைப்பாடுகளின் வன்மம், சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் ஒழுக்கக்கேடுகள், உள்ளூர் அரசியல்வாதிகளால் காவல் துறையினர் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றனர் என்பதை எந்த இடத்திலும் போரடிக்காமல் நகைச்சுவைத் ததும்ப எங்கேஜிங்காக நகர்த்தி கதை சொல்லியிருக்கும் யஷோவர்தன் மிஸ்ராவின் முயற்சி பலன் அளித்திருக்கிறது. படத்தின் டெக்னிக்கல் டீமின் சப்போர்ட்டையும் இந்தக் கதைக்கு தேவையான இடத்தில் மிகச் சரியாக அதை பயன்படுத்தியிருகக்கிறார் இயக்குநர். ஹர்ஷ்விர் ஓபராயின் ஒளிப்பதிவில் உத்தரப் பிரதேச கிராமங்களின் தெருக்களும், வீடுகளும், காவல் நிலையமும் யதார்த்தத்தைப் பிரதிப்பலிக்கின்றன.

எம்எல்ஏ மன்னிலால் படேரியாவின் வீட்டு பலாப்பழ ஊறுகாய் அவருக்கு அமைச்சராகும் வாய்ப்பை தரக்கூடிய சூழலில், அவரது வீட்டில் ஊறுகாய் தீர்ந்துபோகிறது. அந்நேரத்தில் வீட்டு மரத்தில் காய்த்து தொங்கும் இரண்டு பலாப்பழங்களை நம்பி இரண்டொரு தினங்களில் ஊறுகாய் தயாரித்து கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் படேரியா. இந்த நேரத்தில் பலாப்பழங்கள் திருடு போகிறது. மேலிடத்தில் பேசி பலாப்பழத் திருட்டு வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு மஹிமா பஷோருக்கு (சான்யா மல்ஹோத்ரா) கொடுக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது எம்எல்ஏ வீட்டு தோட்டக்காரரின் பேத்தியும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. பலாப்பழத் திருட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காணாமல் போன அந்தப் பெண்ணின் வழக்குக்கு கொடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினையை மஹிமா பஷோர் எப்படி சமாளிக்கிறார்? திருடுபோன பலாப்பழம் கிடைத்ததா? யார் திருடியது? தோட்டக்காரரின் பேத்தி எங்கு போனார்? அவருக்கு என்ன நடக்கிறது? அந்த வழக்கை போலிஸார் விசாரணைக்கு எடுத்தார்களா? இல்லையா? - இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் திரைக்கதை.

இந்தப் படத்தின் நாயகி சான்யா மல்ஹோத்ரா, அவரது காதலரும் கான்ஸ்டபிளாக வரும் சவுரப் (அனந்த் ஜோஷி), லேடி கான்ஸ்டபிள், மற்ற போலீஸ் கேரக்டர்கள் அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர். ஆணாதிக்க, சாதிய பாகுபாட்டையும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையும் பகடி செய்து எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கிறது. அதிலும், குற்றவாளியை தேடிச் செல்லும்போது, "இந்த கீழ்சாதிகாரன்களுக்கு எதையாவது திருடி திண்ணலன்னா தூக்கமே வராது மேடம்" என்று ஒருவர் சொல்வார். அதற்கு நாயகி மஹிமா பஷோர், தனது பேட்சை காண்பித்து இதில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்பார். அதற்கு அந்த நபர் நமக்கு எழுதப் படிக்க வராதுங்க என்பார்.

அதற்கு மஹிமா பஷோர் தனது பெயரைச் சொல்லி, கீழ்சாதி இன்ஸ்பெக்டர், நான் ஒன்னும் திருடி திண்பவள் அல்ல, திருடர்களை ஜெயிலுக்கு அனுப்புகிறவள் என்று வசனத்தின் மூலம் சமூக எதார்த்தத்தை கண்முன் கொண்டு வந்திருப்பார் இயக்குநர். குற்றவாளிகளைப் பிடிக்கும் இறுதிக் காட்சி சினிமாத்தனமாக இருந்தாலும், கோர்ட் சீன் அதை மறைத்துவிடுகிறது. மொத்தத்தில் வீக் எண்டை குடும்பத்தோடு அமர்ந்து சிரித்து ரசிக்கும் ஒரு பீஃல் குட் சமூக சினிமாவாகவும் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது.

கடந்த மே 19 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. தமிழ் டப்பிங் உள்ளது. அதில், சில இரட்டை அர்த்த வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT