ஓடிடி விமர்சனம்

ஓடிடி திரை அலசல் | Romancham - ஓஜா பலகை ஆட்டமும் சிரித்து சிலிர்க்கும் அனுபவமும்!

குமார் துரைக்கண்ணு

பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் 7 பேச்சிலர்கள் ஓஜா பலகையை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முயற்சிப்பதால் ஏற்படும் விபரீதங்கள்தான் 'ரோமாஞ்சம்' திரைப்படத்தின் ஒன்லைன்.

இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் மலையாளத் திரைப்படம் ரோமாஞ்சம். ரோமாஞ்சம் என்பதற்கு சிலிர்த்தல் அல்லது கூச்செறிதல் என்று பொருள் கூறப்படுகிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே, இந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு அந்த உணர்வை தவறாமல் கொடுத்திருக்கிறது. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு காரணம், இயக்குநர் கையாண்டுள்ள ஹாரர் கலந்த டார்க் காமெடிதான். படம் முழுக்கவே திகில் கலந்த நகைச்சுவை படம் பார்ப்பவர்களை எங்கேஜிங்காக வைத்திருக்கிறது.

பெங்களூரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ஜீத்து மாதவன். அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை, பெங்களூருவில் உள்ள மார்த்தஹள்ளி என்ற இடத்தில் நண்பர்களுடன் தங்கி ஏரோநாடிக்கல் பொறியியல் படித்தவர். பொதுவாகவே, நண்பர்களுடன் கடக்கும் பொழுதுகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. இந்தப் படத்திலும் நண்பர்களாக வருபவர்கள் செய்யும் செயல்களும், அடிக்கும் கவுன்டர்களும் பார்வையாளர்களை சிரித்து மகிழச் செய்கின்றன.

ஹாரர் திரைப்படம் என்பதற்காக பார்வையாளர்களுக்கு பயம் காட்ட வேண்டுமென எந்தவொரு டெம்ப்ளேட் யுக்திகளையும் கையாளாமல், பயத்தை உணர வைத்திருக்கும் இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். நண்பர்கள் நிறைந்த வீட்டில் அளவற்றுக் கிடப்பதில் நகைச்சுவைக்கு முக்கிய இடமிருக்கும். படம் முழுக்கவே அந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க இயக்குநர் மறக்கவில்லை. அதேநேரம் அவ்வப்போது வரும் சஸ்பென்ஸ் காட்சிகளில் மிரண்டுபோகவும் செய்திருக்கிறார்.

பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் ஜிபின் (ஷோபின் ஷாகிர்), ரிவின், நிரூப், ஷிஜப்பன், முகேஷ், ஹரிகுட்டன், சோமன் உள்ளிட்ட 7 நண்பர்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களில் இருவர் வேலையில் இருப்பவர்கள், இருவர் எந்த வேலையுமே இல்லாதவர்கள், ஒருவர் தோல்வியடைந்த பிசினஸ்மேன், இருவர் இன்டர்வியூ முடித்து வேலைக்காக காத்திருப்பவர்கள். இவர்களது கதையைப் போலவே அந்த வீடு முழுவதுமே கலகலப்பானதாக இருக்கிறது.

அரட்டை, விளையாட்டு, காதல், போதை, விளையாட்டு என ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக கடக்கிறது. இந்த நிலையில், ஷோபின் ஷாகிர் ஒருநாள் ஓஜா பலகை விளையாட்டை தனது நண்பர்களுக்கு பழக்கி விடுகிறார். இந்த பலகையின் மூலம் இறந்துபோன ஆத்மாவுடன் பேச முடியும் என்று நண்பர்களுக்கு சொல்லித் தருகிறார். அதன்படி நண்பர்களும் அந்த விளையாட்டில் ஆரம்பத்தில் கொஞ்சமாகவும், பிறகு முழுமையாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டு நண்பர்களின் நண்பர்களுக்கும் வேகமாகப் பரவுகிறது. அவர்களும் இந்த ஓஜா பலகையை நம்பத் தொடங்குகின்றனர். இன்னும் சிலர் காணாமல் போன பொருட்களை யார் எடுத்தது?என்பது போன்ற சந்தேகங்களை எல்லாம் கேட்டு பதில் தெரிந்து கொள்கின்றனர். ஓஜா பலகையால் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கையில் சில அசாதாரணமான சம்பவங்கள் துரத்த தொடங்குகின்றன. அது என்ன மாதிரியான பிரச்சினைகள்? அதிலிருந்து 7 நண்பர்களும் மீண்டனரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

பள்ளி, கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் விடுதி வாழ்க்கைக்கும், வேலைத் தேடும் காலங்களில் பெருநகரங்களில் நண்பர்களோடு ஒரே வீட்டில் தங்கியிருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். கட்டுப்பாடற்ற சுதந்திரமும், நினைத்ததை செய்துப் பார்க்கும் வாய்ப்பும் கொட்டிக் கிடப்பது இந்த தருணங்களில்தான். அந்த நண்பர் கூட்டத்தில், காதலிப்போர், காதலிக்க முயற்சிப்போர், சீரியஸாக வேலைத் தேடுபவர், பக்திமான், மது அருந்துபவர்,குட்கா பயன்படுத்தும் பழக்கமுடையவர், சுத்தம் பார்க்கும் பழக்கம் கொண்டவர், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், நன்றாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர், எப்போதும் தூங்குபவர், இரவில்கூட தூங்காதவர் என பலவகையான குணாதிசயங்களைக் கொண்டவர்கள் இருப்பர்.

இந்த தனிமனித குணாதிசயங்கள்தான் அந்த நண்பர்கள் வாழும் வீடுகளில் எழும் சிறுசிறு பிரச்சினைகளுக்கான மிக முக்கிய காரணிகளாக இருக்கும். அதேபோல் சமையல் நடைபெறாத வீடுகள் என்றால் பிரச்சினை வராது. சமைக்கின்ற வீடுகளாக இருந்தால், பாத்திரங்களை சுத்தம் செய்தல், சமைத்தல், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகள் பங்கிட்டுக் கொள்ளப்படும். இதில் யாராவது வேலை செய்ய தவறும்போது பிரச்சினைகள் வரும். அந்த சண்டையும் நக்கலும், நையாண்டியுமாகத்தான் இருக்கும்.

இந்த வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டதுதான் இந்த திரைப்படம். அதுவும் ஷோபின் ஷாகிரின் நண்பராக வரும் ஷிபுவின் (அர்ஜுன் அசோகன்) எண்ட்ரியிலிருந்து தொடங்கி, அவர் மீண்டும் ஊருக்கேத் திரும்பிச் செல்லும் காட்சி வரை படம் பார்க்கும் பார்வையாளர்களை திக்குமுக்காடிப் போகச் செய்திருக்கிறார் இயக்குநர்.

குறிப்பாக இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுக்கும் காட்சி நிச்சயம் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்திருக்கும். ஷோபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் உட்பட மிக சொற்பமான பிரபல நட்சத்திரங்களுடன், கேரள மக்களுக்கு சமூக ஊடகங்களின் வழியே நன்கு பரிச்சையமான பலரை அறிமுகப்படுத்தி தனது கதையை யதார்த்தமானதாக மாற்றியிருக்கும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர்களும் தங்களது பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர்.

ஷானு தாஹிரின் ஒளிப்பதிவும், சுசின் ஷ்யாமின் இசையும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். ஒரு வீடு, 7 நண்பர்கள், இரவு காட்சிகள், கேரம் போர்டு, மெழுகு திரி, தெரு விளக்கு என ஒரு வீட்டிலிருக்கும் பொருட்களுக்கும் மனிதர்களுக்குமான நெருக்கத்தை படத்தின் ஒளிப்பதிவும், இசையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றன. இந்தப் படத்துக்கான 'Aadharanjali' புரோமோ பாடல் யூடியூபில் 12 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.

இறந்த ஆத்மா பெண்ணாக இருப்பது குறித்தும், சயீத்தாக வரும் செம்பன் வினோத்தின் அப்பா தொடர்பான காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பெண் குறித்து தவறான கருத்தைப் பதிவு செய்வதும் சற்று நெருடலாக இருக்கிறது. இதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 'ரோமாஞ்சம்' சிலிர்க்கவே செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், ஏப்ரல் 7ம் தேதி முதல் டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT