ஓடிடி விமர்சனம்

ஓடிடி திரை அலசல் | Ela veezha poonchira - மவுனித்துக் கிடக்கும் மலை உச்சியின் பின்னணியும், சில புரிதல்களும்!

குமார் துரைக்கண்ணு

'ஜோசப்', 'நாயட்டு' திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஷாகி கபீர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மலையாளத் திரைப்படம் 'இல விழா பூஞ்சிறா' (Ela Veezha Poonchira). ஷாகி கபீர், ஒரு முன்னாள் போலீஸ்காரர் என்பதால் அவர் திரைக்கதை எழுதியுள்ள முந்தைய இரண்டு திரைப்படங்களிலும், காவல் துறை சார்ந்த விசயங்களையும், காவலர்களின் எண்ண ஓட்டங்களையும், உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்மைக்கு நெருக்கமாகவே விவரித்திருப்பார். இதனால், இவரது படைப்புகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. அந்த வகையில் 'இல விழா பூஞ்சிறா'வும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

நித்திஷ் ஜி, ஷாஜி மாரட் இணைந்து எழுத 'இல விழா பூஞ்சிறா' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஷாகி கபீர். 'இல விழா பூஞ்சிறா' என்பதற்கு இலை உதிரா பூக்குளம் என்று பொருள் கூறப்படுகிறது. உண்மையில் இலை உதிரா அந்த குளத்துக்குள் இத்திரைப்டத்தைப் பார்க்கும் பார்வையாளர்களை விழச்செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் கதை நிகழும் இடம், அதன் கொள்ளையழகு, அந்த இடத்தின் தன்மை, அங்கிருக்கும் கதாப்பாத்திரங்கள், அவ்விடம் என்னவாக எல்லாம் பொதுவாகப் பார்க்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் விளக்கி பார்வையாளர்களை முதல்பாதியில் எங்கேஜிங்காக வைத்திருக்கிறார் இயக்குநர்.

இரண்டாம் பாதியில் கதாப்பாத்திரங்களின் பின்புலத்தை விளக்கி, முதல் பாதியில் நிகழ்ந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்த்து ட்விஸ்டுடன் படத்தை முடித்திருக்கும் விதத்தில் பார்வையாளர்களை சபாஷ் போடவைத்திருக்கிறார் இயக்குநர். பொதுவாகவே மலை உச்சியும், தனிமையும் ஒவ்வொரு மனிதருக்கும் உன்னதமான ஆத்மார்த்தமான விடுதலையைக் கொடுப்பவை. அலுத்து சலித்துப்போன வாழ்க்கையில் இதுபோன்ற மலை உச்சிகள், ஆழ்கடல், ஒலிபுகா காடுகள் போன்றவை பேரானந்தம் கொடுப்பவை. அதேநேரத்தில், உடல் நடுங்கச் செய்யும் கடுங்குளிர், திடீரென காலநிலை மாறும் தன்மை கொண்ட இவ்விடங்களின் தனிமையைப் போக்குவதில் மதுவுக்கு ஒரு முக்கிய உண்டு. இதையுணர்ந்து படத்தில் மதுவை ஒரு கதாப்பாத்திரமாகவே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். (மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு)

கோட்டயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூஞ்சிறா எனுமிடத்தில், மலை உச்சியில் இருக்கிறது ஒரு காவல் துறை வயர்லஸ் ஸ்டேஷன். இங்கு மது (ஷோபின் ஷாகிர்), சுதி (சுதி கோபா), வெங்காயம் (ஜுட் அந்தாணி ஜோசப்) மூன்று காவலர்கள் பணியாற்றுகின்றனர். அந்த இடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தையும், மலை உச்சியின் மறைவிடங்களில் காதலை பரிமாற விழையும் பருவ வயது காதலர்களையும் பக்குவமாக சமாளித்து அவ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணின் உடல் பாகமொன்று கண்டெடுக்கப்படுகிறது.

இறந்த அந்தப் பெண் யார்? அவரது உடல் பல பாகங்களாக சிதைக்கப்படுவதற்கான காரணம் என்ன? இந்தக் கொடூரமான கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? கொலையாளி இந்த இடத்தில் உடல் பாகங்களை ஏன் மறைக்க வேண்டும்? கொலையாளியை காவல்துறை கண்டுபிடித்ததா? இல்லையா? - இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் இப்படத்தின் திரைக்கதை.

மலையாளத் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர்களில் ஒருவர் ஷோபின் ஷாகிர். இவரது சமீபகால படத்தேர்வுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்நிலையில் அந்த ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பொய்யாக்கி, தனது உளபூர்வமான நடிப்பாற்றலால் தன்மீதான விமர்சனங்களை துவம்சம் செய்திருக்கிறார் ஷோபின் ஷாகிர். பேக்குடன் பேருந்தில் ஏறி அமர்ந்து, ஜீப்பின் இடைஞ்சலில் சிக்கி, செங்குத்து மலைச்சரிவை நடந்து கடந்து, பாறையொன்றின் பரப்பில் மது அருந்தி இளைப்பாறும் முதல் காட்சியிலிருந்து, க்ளைமாக்ஸ் காட்சிவரை ஷோபின் ஷாகிர் பார்வையாளர்களின் கண்களை திருடிக் கொள்கிறார். ஃப்ளாஷ்பேக் அழுகைக் காட்சி, சஸ்பென்ஸ் காட்சியென ஒவ்வொரு ப்ரேமிலும் அப்ளாஸை அள்ளுகிறார்.

இவருடன் இணைந்து அதே சஸ்பென்ஸையும், மிரட்சியையும் பங்குகொள்ளும் கதாப்பாத்திரத்தில் சுதி கோபாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பயத்தை காட்டிக்கொள்ளாமல் பாத்ரூம் செல்லும் காட்சி, ஜெனரேட்டர் ரூம் காட்சியென தனக்கான ஸ்பேஸ் கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். இதுதவிர மிக குறைவான எண்ணிக்கையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் நிறைவாக நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, அனில் ஜான்சன் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படத்திற்கான நியாயத்தை இருவரது உழைப்பும் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தப் பாடத்தில் பாடல்கள் இல்லை.

காவலர்களின் பணி எப்போதும் சவால் நிறைந்தது. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் அரிதினும் அரிதான சவால்கள் எப்போதும் அவர்களை மன அழுத்தத்துடன் இருக்கச் செய்கிறது. இதுபோன்ற மன அழுத்தங்கள் காவலர்களின் பணிச்சூழல்களை இறுக்கமாக்கிவிடுகிறது. இதனால் தங்களது விடுதலையை, அவர்கள் சார்ந்திருக்கிற பணிச்சூழலில் இருந்து தேட தொடங்குகின்றனர். நல்ல முறையில் தீர்வுகண்டு வெற்றி பெறுபவர்களும் உண்டு, தவறான முடிவெடுத்து, தோற்றுப் போகிறவர்களும் உண்டு. இப்படத்தின் இயக்குநரும் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதால், காவலர்களின் உளவியல் ஊசலாட்டத்தை உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் அமைந்துள்ள இல விழா பூஞ்சிரா கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சார் அருகே இருக்கும் ஒரு டிரெக்கிங் சுற்றுலாத்தலம். மண்குன்னு, கொடயதூரமலா, தோணிப்பாறா என்ற மூன்று மலைக்குன்றுகள் சூழ்ந்த இடத்தின் மேலிருந்து சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களையும், நிலப்பரப்பையும் காண்பது அத்தனை அழகாக இருக்குமாம்.

இப்படி ஒருநாள் இன்பமாக பொழுதைக் கழிக்க பரிந்துரைக்கப்படும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'இல விழா பூஞ்சிறா' திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் ஏற்படுத்தும் கனத்த மவுனம்,பார்வையாளர்களின் மனதில் நீண்டநாட்கள் நிலைத்திருக்கும். 2022 ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT