அறிமுக இயக்குநர் ரோகித் எம்ஜி கிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் இரட்ட (Iratta). இரட்ட என்பதற்கு இரட்டையர் என்பது பொருள். மலையாளத் திரையுலகில் இதுவரை வெளிவந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படங்களில் முற்றிலும் வேறுபட்டது இப்படத்தின் கதைக்களம். ஓர் அறிமுக இயக்குநர் இதுபோன்ற கதைக்களத்தில் தனது முதல் படத்தை இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. சைரன் வைத்த வாகனங்களில் வலம் வரும் மன அழுத்தம் நிறைந்த காவல் துறையினரின் மறுபக்க வாழ்க்கையை பேசியிருக்கிறது இத்திரைப்படம்.
குழந்தைப்பருவம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக முக்கியமானது. இந்தப் பருவத்தில் அவர்கள் வளர்கின்ற சூழல், பார்க்கும் மனிதர்கள், கேட்கும் வார்த்தைகளென இவை அனைத்துமே, எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. குழந்தைப் பெறுதலை போலவே குழந்தை வளர்ப்பும் சவால்கள் நிறைந்தது. நாட்டில் நிகழும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகளின் குழந்தைப் பருவ குறிப்புகள் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் வளர்ந்துவந்த சூழலும், கற்றுக்கொண்ட வாழ்வியல் தந்திரங்களும் அவர்களை கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. குழந்தை வளர்ப்பு அவசியத்தின் பின்னணியில் இப்படத்தை அணுகியிருக்கும் இயக்குநரின் முயற்சி போற்றுதலுக்குரியது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வாகாமன் காவல் நிலையம் ஒரு விழாவுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்த காம்பவுன்டில் இரண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவர்களது வளர்ப்பு நாய் விக்கெட் கீப்பீங் செய்கிறது. அப்பகுதியில் உள்ள சில பயனாளிகளுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைக் கொடுக்கும் அந்த விழாவுக்கு இன்னும் சில மணி நேரங்களில் அமைச்சர் வரப்போகிறார். அப்பகுதி மக்கள், ஊடகவியலாளர்கள் என எல்லோரும் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் அந்த போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் கேட்க, அதுவரைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா சத்தங்களும் மவுனித்துப் போகிறது. உள்ளே சென்று பார்த்தால், அந்த ஸ்டேஷனின் ஏஎஸ்ஐ வினோத் (ஜோஜு ஜார்ஜ்) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து வினோத்தின் உடன்பிறப்பும், டிஎஸ்பியுமான பிரமோத்துக்கு (ஜோஜு ஜார்ஜ்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்டேஷனில் என்ன நடந்தது? வினோத் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யட்டிருந்தால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? வினோத் எப்படிப்பட்ட காவல் அதிகாரி? அவரது குணாதிசயங்கள் என்ன? அந்தக் காவல் நிலையத்தில் வினோத்துக்கு எதிரானவர்கள் யார்? என்ன காரணத்தால் அவர்களுக்கும் வினோத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது? இதில் பிரமோத்துக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? - இந்தக் கேள்விகளுக்கான விடைகல்தான் படத்தின் திரைக்கதை.
வினோத், பிரமோத் இரட்டையர் கதாப்பாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் விழிப்படலங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார். இருவேறு பாத்திரங்களையும் தனது நுட்பமான நடிப்பாற்றல் மூலம் இமைகளை மூடவிடாமல் கவனிக்க வைக்கிறார். குரூரம், கோபம், அதிகாரம், திமிர் கலந்த வினோத் கதாப்பாத்திரத்தையும், பொறுமை, நிதானம், புத்திக்கூர்மை கொண்ட பிரமோத் கதாப்பாத்திரத்தையும் ஜோஜு ஜார்ஜ் வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பானதாக இருக்கிறது.
கடைசி 24 நிமிடங்களில் இந்தச் சம்பவத்தின் உண்மை கண்டுபிடிக்கும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் உருகி அழும் காட்சியிலும், இறந்து கிடக்கும் வினோத்தை பார்க்கும் காட்சியிலும் தனது துல்லியமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் ஜோஜு ஜார்ஜ். மாலினியிடம் (அஞ்சலி) மது குடித்துக்கொண்டு பேசும் ஒரு காட்சி வரும். தான் ஓர் அசிங்கம், தன்னோட வாழ்க்கையில் நல்லதே நடந்ததில்லை என்று வசனம் பேசி ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கும் அந்தக் காட்சி மூலம், மது அருந்தும் பழக்கம் கொண்ட பலரது ஆல்டைம் புலம்பலை பதிவு செய்திருப்பார் இயக்குநர்.
ஜோசப், நாயட்டு என ஏற்கெனவே போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தாலும். இந்தப் படத்தில் அதற்கான சுவடுகளே இல்லாமல் தனது வேறுபட்ட மேனரிசங்களால் ஸ்கோர் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் அஞ்சலி, சுனில் சூர்யா, சாபுமோன் அப்துசமத், அபிராம் ராதாகிருஷ்ணன், ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜீத்து அஷ்ரப் என அனைவரும் தங்களது பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். இருந்தாலும் இரட்டை கதாப்பாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடத்தியிருக்கும் ஒன்மேன் ஷோதான் இந்தப் படம்.
ஒளிப்பதிவாளர் விஜய், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும், பாடல்களும் இந்த சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படத்தை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக்குகிறது. படத்தில் தாய், மனைவி, மகள், அமைச்சர், காவல் துறை உயரதிகாரி என சமூகத்தில் பெண்களின் பல்வேறு படிநிலைகளை காட்சிபடுத்தியிருப்பது அருமை. வினோத் எப்படி காவல்துறை அதிகாரியாகிறார் என்ற கேள்விதான் இப்படத்தில் ஒரு குறையாக எழுகிறது.
மொத்தத்தில் இந்த இரட்ட திரைப்படத்தின் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் படம் பார்ப்பவர்களை இறுதி வரை என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டி இறுதியில் மனதை வலிக்கச் செய்து முடிகிறது. பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மார்ச் 3-ம் தேதியிலிருந்து நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.