ஓடிடி விமர்சனம்

ஓடிடி திரை அலசல் | Kumari - பேரக்குழந்தையை தூங்க வைக்க பாட்டி சொல்லும் அமானுஷ்யங்களின் கதை!

குமார் துரைக்கண்ணு

பஃசல் ஹமீதுடன் இணைந்து எழுதி இயக்குநர் நிர்மல் சகாதேவ் இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘குமாரி’ (Kumari). இதுபோன்ற கதைக்களத்தை தாங்கி எத்தனைப் படங்கள் வந்திருந்தாலும், அறிவியலுக்குப் பொருந்தாத முழுக்க முழுக்க கற்பனைகள் கலந்த இதுபோன்ற ஃபேன்டஸி த்ரில்லர் கதைகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கவேச் செய்யும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு அடுத்த மனிதர்களின் உலகம் குறித்தும், அவர்களது குடும்பம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அவர்களது வீட்டு அடுப்படி தொடங்கி படுக்கையறை வரை மூக்கை நுழைத்து என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எப்போதும் அதிகமிருக்கும். அதிலும் இதுபோன்ற மாயக்கதைகள் என்றால் கேட்கவா வேண்டும். நடந்ததை தெரிந்துகொள்ள பேராவலுடன் இருக்கும் பார்வையாளர்களுக்கான திரை விருந்துதான் இந்த மலையாளத் திரைப்படத்தின் கதைக்களம்.

12 தலைமுறைகளுக்கு முன் துப்புரான் தம்புரான் ஆளுகைக்குட்பட்ட காஞ்சிரங்காடு தரவாட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. அதிலிருந்தே அந்தப் பகுதி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. துப்புரான் தம்புரான் தலைமுறையில் வரும் துருவன் தம்புரானுக்கு (ஷைன் டாம் சாக்கோ) குமாரிக்கும் (ஐஸ்வர்யா லெட்சுமி) திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பின் காஞ்சிரங்காடு தரவாட்டில் குடியேறுகிறாள் குமாரி. வஞ்சமும் போராசையும், பழிவாங்குதலும் மர்மங்களும் நிறைந்த அந்த வீட்டின் மூடபழக்கவழக்கங்கள் குமாரியின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது? அந்தச் சிக்கல்களையும் குழப்பங்களையும் அவள் எப்படி எதிர்கொண்டாள்? யார் உதவியது? குமாரியின் கணவன் எப்படி தம்புரான் ஆகிறான்? அதற்கு அவன் கொடுக்க முன்வரும் விலை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

சேட்டன்கள் புத்திசாலிகள், அறிவியலுக்கு துளியும் பொருந்தாத கதை என்பதால், இந்தப் படத்தை ஒரு பேத்திக்கு பாட்டி கதை சொல்லும் தொனியில் அழகாக தொடங்கியிருப்பர். தூக்கம் வராத நேரங்களில் வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் சொல்லும் கதைகள் பெரும்பாலும் நல்லது கெட்டது பற்றியதாகவும், கடவுளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் களமாகவே இருக்கும்.

அந்த வகையில் பாட்டி சொல்லும் கதை என்பதால், எந்தக் காலத்தில் நடந்த கதை இது என்பது கதை கேட்கும் பேத்தியைப் போலவே படம் பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கும் சொல்லப்படவில்லை. ஆனால், மர்மங்களை அறிந்துகொள்ள தயாராக இருக்கும் ஆடியன்ஸ்களின் ஆர்வத்தை பயன்படுத்தி அடுத்தடுத்த காட்சிகளுக்கு கதைக்களத்தை நகர்த்தியிருப்பது சிறப்பு.

இந்தப் படம் ஷைன் டாம் சாக்கோவின் ஒன்மேன் ஷோ என்றாலும் மிகையல்ல. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பாவம்போல் வரும் அவர், தனது மனைவி குமாரியிடம், தான் இப்படி இருப்பதற்கான காட்சி ஒன்று வரும். அந்த லெங்கித்தி ஷாட்டில் ஷைன் டாம் சாக்கோ பல்வேறு விதமான எக்ஸ்பிரசன்ஸ், டயலாக் மாடுலேஷன்னு மனுசன் பின்னியெடுக்கிறார். அதேபோல் தம்புரானாக ஆனபின் அவரது உடல்மொழி, பாவனைகள் என ரசிக்க வைக்கிறார்.

இந்தக் கதாப்பாத்திரத்துக்கு இணையாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் தலைப்பை தாங்கிய பாத்திரத்துக்கான பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். மகிழ்ச்சி, குழப்பம், பயம், தைரியம் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். ஆனால், படத்தின் உக்கிரமான சவால் மிகுந்த இறுதிக் காட்சியில் அவரது ஆக்டிங் சறுக்கிவிடுகிறது. இவர்கள் தவிர இந்தத் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாகவே தந்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவும், லைட்டிங்கும். ஒளிப்பதிவாளர் ஆப்ரஹாம் ஜோசப்பின் லென்சும் லைட்டிங்கும் பார்வையாளர்களுக்கு நல்லவொரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது. மலையடிவாரத்து பசுஞ்சோலையான வயல்வெளிகள், அடர்ந்த மரஞ்செடிகளைக் கொண்ட காடுகள், அமானுஷ்யங்கள் சூழ்ந்த இரவுகள் என எல்லாக் காட்சிகளிலும் கேமரா ஒர்க் அசத்தியிருக்கிறது. அதேபோல் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால், அரிக்கேன் விளக்கு, திரி விளக்கு, கோயில் விளக்கு, தீபந்தம், பூஜை விளக்கு என வெவ்வேறு வகையான லைட்டிங்குகள் படத்தில் கையாளப்பட்டிருக்கும் விதம் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

இதேபோல் படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோயும் தனது சிறப்பான பின்னணி இசையால் கவனிக்க வைக்கிறார். பாடல்களும் தலையாட்டி ரசிக்க வைக்கின்றன. எடிட்டிங், ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், சவுண்ட் எஃபெக்ட்ஸ் உட்பட படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இத்திரைப்படம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாவிட்டாலும், இந்திய அளவில் பரவலாக இருப்பதாக கூறப்படும் கடவுளின் பெயரால் மனிதர்கள், குழந்தைகள் பலியிடுவது குறித்து பேசியிருக்கிறது. 2021-ம் ஆண்டு என்சிஆர்பி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் மனித பலி தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாவும், பில்லி சூனியம் உள்ளிட்ட காரணங்களால் 68 கொலைகளில் 6 குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இரவு தூங்கும் நேரங்களில் நல்லது கெட்டதை கதையோடு கலந்து சொல்லி வளர்க்கும் தாத்தா, பாட்டிகளற்ற வீடுகள் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் குமாரி திரைப்படத்தைக் காண்பவர்களுக்கு அவர்களது நினைவுகள் தோன்றலாம், இன்னும் சிலருக்கு காலங்காலமாகச் சொல்லப்படும் மலையாள மாந்த்ரீகங்கள் நினைவுக்கு வரலாம். குறிப்பாக, காலங்காலமாக நீடிக்கும் ஆணாதிக்கமும், அதை தகர்த்தெறிந்து பாய்ச்சல் காட்டத் தவறாத பெண்களும் எப்போதும் உள்ளனர் என்பதையும் படம் நிறுவுகிறது. கடந்த அக்டோபர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ப்ஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT