"நான் காட்டு நாயக்கன்... காட்டு நாயக்கன் என்றால்... நான் காட்டிலேயே பிறந்து, வளர்ந்து பெரியாவனானேன் என்பது அதன் பொருள். இனிமேலும் நாங்கள் காட்டில்தான் இருப்போம்..." என்று கனத்த குரலில் அறிமுகமாகிறார் பொம்மன். முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை (ஆசியாவிலேயே பழமையான முகாம்) சுற்றி பயணிக்கிறது இந்த ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம்.
தெப்பாக்காட்டில் வனத்துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். தாய் யானை கரன்ட் ஷாக்கில் இறந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த குட்டி யானை ரகுவை வளர்க்கும் பொறுப்பு பொம்மனிடம் விடப்படுகிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெல்லியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கிறார்கள். இருவரிடம் பாசமாக வளர்கிறது ரகு. பொம்மன், ரகுவை சக யானைகளின் வாழ்வை வாழ காட்டுக்குள் விட்டாலும், ரகு அவற்றுடன் சேர மறுக்கிறது. ரகுவிற்கு பிறகு அம்மு குட்டி என்ற குட்டியானையும் பொம்மன் - பெல்லியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரகுவும், அம்முகுட்டியும், பொம்மன் - பெல்லியின் உலகமாக மாறுகின்றன. நால்வரும் குடும்பமாக மாறுகிறார்கள்.
பொம்மன் - பெல்லி திருமணம் என நாட்கள் நகர்கின்றன. இந்த நிலையில், வனத்துறையால் ரகு வேறு ஒருவரிடம் பராமரிப்புக்காக அழைத்து செல்லப்படுகின்றது. குழந்தையை இழந்தது போல் பொம்மனும், பெல்லியும் உடைகின்றனர். எனினும் அம்மு குட்டியின் இருப்பு இருவரையும் ஆசுவாசப்படுக்கிறது. கைவிடப்பட்ட யானை குட்டிகளை வளர்ந்த முதல் தம்பதி என்று பொம்மனும் - பெல்லியும் அறியப்படுகிறார்கள்.
ரகு - பொம்மன் - பெல்லி - அம்முகுட்டி என நால்வருக்கும் இடையேயான உணர்வை காட்சிகள் மூலம் தத்ரூபமாகவும், அதேவேளையில் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளால் வனவிலங்குகள் சந்தித்த, சந்திக்கும் இழப்புகளை ஆழமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். படத்தின் ஒளிப்பதிவும், இசை, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக பொருந்தியுள்ளன. அதற்கான அங்கீகாரமாகத்தான் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கரில் ஆவணக் குறும்படப் பிரிவுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆவணப்படத்தின் முடிவில்... ரெட்டை குடுமி அணிந்துகொண்டு அம்முகுட்டி நம்மிடமிருந்து சட்டென்று விடைபெறுகிறது. ஆனால், பார்வையாளர்களாகிய நமக்கு இப்படத்திலிருந்து முழுமையாக விடுப்பட சில நிமிடங்கள் தேவைப்படுகிறது. காரணம், இப்படத்தில் அவ்வளவு காதல் நிரம்பியிருக்கிறது! ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ - நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.