“‘என்ன இது... டான்ஸ் கூட ஆடக் கூடாதுனு சொல்றாங்க’, ‘ஸ்லீவ்லெஸ் போடக் கூடாதா?’, ‘ஏன் பசங்களும் நம்மளும் சேர்ந்து உட்கார கூடாது?” - என் கல்லூரியில் நடந்த கல்ச்சுரல்ஸ் விழாவில் நாங்கள் பேசிக் கொண்டவை இதெல்லாம். கல்லூரி விழா என்பதால் விதிக்கப்பட்ட ரூல்ஸ் எதையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் பாதுகாப்புக்காக என்றாலும் சில விதிமுறைகள் மிகையாகவே தெரிந்தது. ஆறுதல் என்னவென்றால் அனைத்துக்கும் சரியான பதில்களும் விளக்கங்களும் கிடைத்ததே. மேலும், அதே விதிமுறைகள்தான் மாணவர்களுக்கும் இருந்தது என்பது கூடுதல் ஆறுதல்.
இவையெல்லாம் நடந்த நாளில்தான், தன் முக்காடு துணியின் வழியாக, மூடநம்பிக்கையில் மூழ்கிப் போயிருக்கும் படதி கிராமத்தை தாண்டி எதையும் பார்த்திராத சுப்பு என்ற சுப்புலட்சுமியின் கதையான ‘பரதா’ (Paradha) என்ற தெலுங்கு படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்க நேர்ந்தது.
ஜ்வாலம்மா என்ற தங்கள் குலதெய்வத்தின் கட்டளை என நம்பி, ஊரில் பூப்பெய்த அனைத்து பெண்களும் அப்பா, அண்ணன், தம்பி, கணவன் தவிர வேறு எவருக்கும் தங்கள் முகத்தை காட்டாமல் வாழ்ந்து வருகின்றனர். கட்டளையை மீறினால் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் செத்துப் பிறக்கும் என்றும், அதற்கு பரதாவை எடுத்த பெண் உயிரை விடுவதுதான் தீர்வு என்பதும் நம்பிக்கை. ஒருநாள் சுப்புவின் பரதா காற்றில் தெரியாமல் பறந்து விட, அந்த நேரம் யாரோ ஒருவர் அவரை புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட, அவளின் முழு வாழ்க்கையே அபாயத்தில் சிக்கிக் கொள்கிறது.
இதனால் மறுபடியும் தனது வாழ்வை மீட்டெடுக்க, ஜ்வாலம்மாவின் கோபத்திலிருந்து கிராமத்தைக் காப்பாற்ற, காதலனை கரம் பிடிக்க என சுப்பு, தன் இறந்து போன அம்மாவின் தோழியான அத்தை (சங்கீதா) மற்றும் இளம்பெண் இன்ஜினியரானா அமி (தர்ஷனா ராஜேந்திரன்) உடன் பயணமாகிறாள். இந்தப் பயணம், இம்மூன்று பெண்களுக்கும் தாங்கள் வளர்ந்துவரும்போது நம்பியிருந்த ‘உண்மைகள்’ அனைத்தையும் சந்தேகிக்க செய்யும், பகுத்தறியச் செய்யும் பாதையாக மாறுகிறது.
படத்தில் சுப்புவாக வரும் அனுபா பரமேஸ்வரன், அத்தையாக வரும் சங்கீதா, அத்தையின் உறவினராக வரும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய மூவரும் போட்டிப் போட்டு நடித்திருக்கின்றனர்.
‘In the name of love’ என்ற இந்தப் படத்தின் டேக்லைனை கவனிக்க வேண்டும். இது வெறும் காதலை மட்டும் குறிப்பது அல்ல. பெண்கள் எப்போதும் எப்படி காதலின் பெயரில், மதத்தின் பெயரில், குடும்பத்தின் பெயரில் அல்லது அப்பா, கணவர் போன்றவர்கள் ‘கொடுத்த’ சுதந்திரத்தின் பெயரிலும் கூட சமூகம் விதித்ததை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்ற நிலையை நினைவூட்டுகிறது இந்த டேக்லைன்.
இப்படத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு தனித்துவமான ‘மறைமுக நம்பிக்கை’யை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சுப்புவுக்கு தன் பரதா தான் அவளை காக்கும் கவசம் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது அவளையும், அவள் காதலையும், அவள் நேசிக்கும் கிராமத்தையும் காப்பாற்றும் என நம்புகிறார். ஆனால், அது உண்மையில் பாதுகாப்பு அல்ல, கட்டுப்பாடு மட்டுமே என்று உணரும்போது அவளின் உலகமே சிதைந்து போகிறது.
சுப்புவின் அத்தை ஓர் இல்லத்தரசி. குடும்பத்தையே சுற்றி தான் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் பல பெண்களில் ஒருவர். அவளின் குடும்பம் அவளை இல்லாமல் நிலைத்து நிற்காது என்று அவள் மனதில் விதைக்கப்படுகிறது. குடும்பச் சுமையை முழுவதும் சுமந்தாலும், அவளுக்கு மதிப்பு கிடைப்பதில்லை, நாம் இல்லையென்றால் நம் குடும்பமே இருக்காது என்பது எல்லாம் பொய் என்றெல்லாம் அவளுக்கு மெதுவாக தெரிய வருகிறது.
சுதந்திரமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட சிவில் இன்ஜினியர் அமி, கடின உழைப்பு முன் ஆண் - பெண் பாகுபாடு எல்லாம் நிற்காது என நம்புகிறாள். சராசரி பெண்கள் போல் நானில்லை, அதனால் என் வாழ்க்கையில் மற்றப் பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் ஏதும் வராது என்ற நம்பிக்கை, தனக்கு சேர வேண்டிய பதவி உயர்வு வேறு ஒருவருக்கு அவர் ஆண் என்ற காரணத்தினாலேயே செல்லும் போதுதான், சமூகத்தில் பெண் எத்தகை உயரத்தை அடைந்தாலும், அவளது வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை, அடக்குமுறை ஏதேனும் ரூபத்தில் வரும் என்று உணர்கிறாள்.
சிறு வயதில் என் நண்பர்களுக்கு ஹேண்ட் கிரிக்கெட் விளையாட நான் வந்து விட்டாலே ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களிடம் தோற்றுப் போவேன். பல வருடங்கள் கழித்துதான் தெரிந்தது அவர்கள் எனக்கு விளையாட்டு விதிமுறைகளை வேண்டுமென்றே தவறாக சொல்லித்தனர் என. வெளியே “ஹா ஹா அப்படியா ரூல்ஸ்” என்று இருந்தாலும், அப்பொழுது எனக்கு எழுந்த ஒரு கேள்வி: “நம்மள ஏமாத்திட்டாங்களா, இல்ல... நாம ஏமாந்துட்டோமா?”
‘பரதா’ படத்தின் மூன்று பெண்களுக்கும் கிட்டத்தட்ட இதே ஏமாற்றமும், கோபமும் கலந்த கேள்விதான் எழுந்திருக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக கண்மூடித்தனமாக இதை நம்பியிருக்கோமே என்று.
பரதாவில் என்னை கவர்ந்தது, நாம் வளர்ந்துவரும்போது கற்றுக்கொண்டவை, நமக்கு கதைகளாக நம் பழக்க வழக்கம் என கற்றுக்கொடுக்கப்பட்டவை எல்லாம் “உண்மை” அல்ல என்பதை அது வெளிப்படுத்தியதுதான். நன்மை - தீமை (Morals) பற்றிய கருத்துகள் பாலினம், வர்க்கம், மதம், கலாசாரம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடக் கூடியவை. ஆனால் உண்மையில் முக்கியமானது - தன்னிச்சையான விருப்பம் (Free will). ஒருவர் தனது உணர்வுகள், அனுபவங்கள், நம்பிக்கைகள் அடிப்படையில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே உண்மையான சுதந்திரம்.
ஓர் இளம் பெண்ணாக, நான் சமூக வலைதளங்களில் பெண்ணியம் குறித்து முடிவில்லா விவாதங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ‘பரதா’ எனக்கு நினைவூட்டியது, ‘ஆணாதிக்கம்’ (Patriarchy) என்பது வெறும் ‘பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துவது’ மட்டும் அல்ல. அது, நம் கலாசாரம், மரபுகள், மதம், குடும்பம் விதிக்கும் கட்டுப்பாடுகள் என அனைத்திலும் பதிந்திருக்கிறது (rooted). நாம் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் டபுள் ஸ்டாண்டர்ட்ஸில் அது வாழ்கிறது. இதுதான் நான் அகற்ற வேண்டிய மிகப் பெரிய ‘பரதா’.
படத்தில் சுப்புவின் பயணத்தில் சந்திக்கும் ஒருவர் ஒரு கதை சொல்கிறார். அவர் ஆசையாக வளர்த்த பறவை ஒன்று பறந்தபோது, கழுகு ஒன்று அதைக் கொன்றுக் விட்டதால், அதன் கூடப் பிறந்த மற்ற பறவைகளை கூண்டிலேயே வைத்து வளர்த்தார். நான் செய்தது சரியா, தவறா என்று கதையைக் கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கும் நமக்கும் ஒரு கேள்வியை வைக்கிறார்.
ஒரு பறவை இறந்ததால், எல்லா பறவையும் இறந்து விடுமா? இவர் ஏன் பறவையை கூண்டில் அடைகிறார்? இவருக்கு என்ன அதிகாரம்? ஏன் அந்த பறவைகளால் தாங்களாகவே இறை தேடிக்கொள்ள முடியாதா? கூண்டில் அடைத்துதான் வளர்க்க வேண்டுமா? கூண்டில் அடைய அதற்கு விருப்பம் தானா? கூண்டைக் கட்டியது யார் என ஆயிரம் கேள்விகள் எழுந்தது எனக்கு.
இந்தக் கேள்விகளின் நிஜ வாழ்க்கை நிகர்களுக்கு இன்னும் நியாயமான பதில்கள் இல்லை என்பது ஓர் உண்மை. அதேபோல் ‘கற்பனை கிராமம் என்றாலும் கூட, இதன் கதை மிகவும் பாவமாக உள்ளது, பயத்தை ஏற்படுத்துகிறது’ என்றும் நீங்கள் யோசித்தாலும், இதேபோல் இன்றளவிலும் ஆடை, ஒப்பனை, உருவம், மார்பளவு, மாதவிடாய், மகப்பேறு, குழந்தைகள், ஹார்மோன், பிங்க் கலர், மதம், கலாச்சாரம் என பல பரிமாணங்களில் பரதாக்கள் கீழே மூச்சடைத்து வாழும் பெண்கள் உலகம் முழுவதும் உள்ளனர் என்பது இன்னொரு உண்மை.
பிரபலமான தமிழ்ப் படம் ஒன்றில் ஹீரோ தான் பயன்படுத்தும் பேனாவில் இருந்து தான் காதலிக்கும் பெண் வரை அனைத்துமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அதற்காக ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்து, அவர்களில் சிறந்தவளை தேர்ந்தெடுக்கிறான். பெண்களை சமமான மனிதர்கள் என பார்க்காமல், ஆசையின் பொருள்களாகவே காட்டும் இப்படத்துக்கு இன்னமும் ரசிகர்கள் அதிகம்.
இதுபோன்ற படங்களில் இருந்து விலகி நிற்கும் படங்கள் சில அவ்வப்போது வந்துபோகும். 2021-ல் தான், ‘Proud housewife’ என்ற பெயரில் பெண்கள் சமையலறையில் கூலிகளாக நடத்தப்படுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த ஒரு படம் வந்தது.
பல வருடங்களுக்கு முன் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் புரிவதில்லை, அதில் என்ன பெண்ணியம் இருக்கிறது எனக் கேட்பவர்களை பார்த்துள்ளேன். ‘சதிலீலாவதி’ படத்தை சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடுமையான செய்தியாக இல்லாமல், சாதாரண காமெடி - ரொமான்ஸ் படமாகவே பார்க்கிறார்கள்.
அதுவே, சினிமா உலகம் ஒருவேளை சிக்கலான, குறைகள் உள்ள, ‘சிக்கலான கதாபாத்திரங்கள்’ உடைய பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக காட்டினால், அவளை வில்லனாகவே பார்க்கின்றனர். தவறு செய்கிற சராசரி மனிதராக அல்ல, தவறு செய்கிற ‘பெண்ணாக’ தான் பார்க்கிறார்கள்.
ஏன் எப்போதும் விமர்சனத்தில் முதல் பார்வை பாலினத்திற்கே செல்கிறது? சமூகம் உண்மையில் பெண்களை ‘பாதுகாக்க’ முயலுகிறதா? அல்லது அவர்கள் உண்மையான சுதந்திரத்தை அடைந்து நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் என்ற ‘பிம்பம்’ உடைந்து விடும் என்ற பயமா?
என்னைப் பொறுத்தவரை ‘பரதா’ படம் பெண்ணியம், பெண்கள் சுதந்திரம், அடக்குமுறை பற்றிப் பேசும் படம் மட்டும் அல்ல. நம் நம்பிக்கைகள், கொள்கைகள், கேட்டு வளர்ந்த கதைகள், கலாச்சாரம்... இவை எல்லாம் உண்மையா, சரியா? நமக்கும் சமூகத்துக்கும் நன்மையா? நமக்கு ‘நன்மை’ என்ற பெயரில் மறைமுகமாக தீமை செய்கிறதா? - இப்படி பல கேள்விகளை எழுப்பக் கூடிய படம். நம்மை நாமே கேள்வி கேட்க வைக்கும் ஒரு நல்ல சுய தேடல் (self discovery) படமான இதை நம் கண்களைக் கட்டி இருக்கும் ‘பரதா’வை அகற்றி விட்டு பார்க்க வேண்டும்.