சரண்தாஸ்பூர் கற்பனை நகரத்தில் ரகசிய சமூகம் தங்களுக்கான கடவுளை உருவாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அம்முயற்சியை அழிப்பதுடன் தொடங்குகிறது ‘மண்டலா கொலைகள்’ (Mandala Murders) வெப் சீரிஸ்.
சஸ்பெண்ட் போலீஸ்காரர் விக்ரம் தனது தந்தையுடன் (மனு ரிஷி சதா) சரண்தாஸ்பூரில் உள்ள தங்கள் பழைய வீட்டுக்கு சிறு வயதில் காணாமல் போன தனது தாயை தேடி வருகிறார். தனது பழைய நண்பர் போலீஸ்காரர் பிரமோத்துடன் (ஷரத் சோனு) மீண்டும் இணைகிறார். அப்போது அங்குள்ள ஆற்றில் தங்களுடன் பயணித்த பத்திரிகை புகைப்படக் கலைஞர் உடல் இல்லாமல் தலை, கை, கால்கள் இணைந்து ரகசிய சின்னம் பதிவு செய்யப்பட்ட நிலையில் மிதக்கிறது.
மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் விக்ரமின் காதலியின் சகோதரியான அப்பகுதி அரசியல்வாதி அனன்யா (சுர்வீன் சாவ்லா) எதிரிகளான இரண்டு கேங்ஸ்டர்கள் கொல்லப்பட்டு அவர்களின் கைகள் காணாமல் போகிறது. அப்போது இவ்வழக்குகளை விசாரிக்க வருகிறார் ரியா (வாணிகபூர்). இவர்கள் மூவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.
தொடர் கொலைகள் பண்டைய ரகசிய சமூகத்தின் கடவுளை உருவாக்கும் முயற்சி என்பதை கண்டறிந்தவுடன் முற்காலத்தின் தொடர்ச்சியே இந்நிகழ்காலம் என கலந்து கட்டி ‘நான் லீனியர்’ முறையில் சொல்கிறார்கள்.
சரண்தாஸ்பூர் கற்பனை நகரத்தில் கொலைகள் வித்தியாசமான முறையில் நடப்பது நம்மிடம் ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்தும். மண்டலா மர்டர்ஸ், மகேந்திர ஜாக்கரின் தி புட்சர் ஆஃப் பெனாரஸைத் தழுவி எடுக்கப்பட்டது . 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் தொடராகியுள்ளது.
ரகசிய சமூகம் உருவாக்கும் கடவுளின் உருவம், லியோனார்டோ டாவின்சியின் விட்ருவியன் மனிதனைபோல் காட்டியிருக்கிறார்கள். கோபி புத்ரன் உருவாக்கி, அவரும் மனன் ராவத்தும் இணைந்து இயக்கிய மண்டலா மர்டர்ஸ், ஸ்ட்ரீமிங்கில் ரத்தத் தெறிப்பு கொலைகள், அறிவியல் புனைக்கதையை புராணங்களுடன் கலந்து நம்மூர் அம்புலிமாமா கதை ஸ்டைலில் உருவாக்கியுள்ளனர்.
கட்டைவிரல் காணிக்கை தந்தால் வேண்டுதல் நிறைவேற்றும் இயந்திரம், தாயை தேடும் மகன், கனவில் வரும் தன் உருவம், வழிகாட்டும் ரகசிய குறிப்புகள், தாயின் வேண்டுதலால் இறப்பிலும் தப்பிக்கும் மகன் என சுவாரஸ்யமாக்கி இருக்கின்றனர். அத்துடன் கதைச்சொல்லில் புராணத்துடன் அறிவியலையும் கலந்து குழப்பவும் செய்கிறார்கள்.
முதல் சீசனில் ரகசியங்களையும் வெளிக்காட்டிவிட்டு இரண்டாம் சீசன் இருப்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். அம்புலிமாமா பாணி கதைகள் விரும்புவோருக்கான ஏற்ற சீரிஸ்.