ஓடிடி விமர்சனம்

Sitaare Zameen Par: திரைப் பார்வை - மன அழுக்குகள், பயத்தை வலியின்றி துடைக்கும் காவியம்!

செ.ஞானபிரகாஷ்

குழந்தைகளை கவனிப்பது சிரமம் என்ற பேச்சு ஊரெங்கும் எழத் தொடங்கியுள்ள காலம் இது. சாதாரண குழந்தைகளுக்கே திணறும் பெற்றோர் பலருள்ள இச்சூழலில், சிறப்பு குழந்தைகளின் (Special Children) களத்தை நம் கண்முன் கொண்டு வந்து, அவர்கள் மூலமாகவே நம் மனதில் திரண்டுள்ள அழுக்குகளையும், பயத்தையும் வலியின்றி துடைத்தெடுக்கிறது ‘சித்தாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par).

கூடைப் பந்து பயிற்சியாளரான குல்ஷனுக்கு (ஆமிர் கான்) உயரம் குறைவு என்பதில் தாழ்வு மனப்பான்மையுண்டு. அத்துடன் தன் தந்தை சிறு வயதில் விட்டு சென்றதால் கோபமும், தந்தையாவதில் பயமும், ஈகோவும் மனதிலுண்டு. அதனால் தனது மனைவி சுனிதாவை (ஜெனிலியா) பிரிந்து தன் தாய் வீட்டில் வசிக்கிறார். விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீனியர் கோச்சை அடித்துவிட்டு மது அதிகம் அருந்தி காரில் வேகமாக செல்லும்போது விபத்தில் போலீஸிடம் சிக்குகிறார்.

சிறைக்கு செல்லாமல் சமூக சேவையாக சிறப்புக் குழந்தைகளுக்கு (Special Children) கூடைப்பந்து பயிற்சி 3 மாதம் தரும் கோச்சாக இருக்க நீதிபதி உத்தரவிடுகிறார். வேண்டா வெறுப்பாக செல்லும் அவரின் மனநிலையும், ஈகோவும், பயமும் அக்குழந்தைகளால் எப்படி வலியின்றி துடைத்தெரியப்படுவதே இப்படத்தின் திரைக்கதை.

2007-ம் ஆண்டு வெளியான ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் குழந்தைகள் உலகத்துக்குள் நம்மை அழைத்து சென்ற அமீர்கான், இப்படத்தில் வேறு ஒரு பரிமாணத்தை நமக்கு காட்டியுள்ளார். ஸ்பானிஷில் வெளியான ‘சாம்பியன்ஸ்’ படத்தின் ரீமேக்தான் இப்படம். நம்மூருக்கு தகுந்தப்படி பாடம் கற்றுத் தருகிறது.

பிரசன்னா இயக்கிய இப்படத்தை நாம் கண்டிப்பாக தவறவிடக் கூடாது என்பதற்கு காரணங்கள் ஏராளமுண்டு. தந்தை பிரிவால், தான் தந்தையாக விரும்பாததை சிறப்புக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு அமீர்கான், ஜெனிலியாவிடம் சொல்லும்போது அங்கு வரும் ஒரு குழந்தை, அவரது தந்தை தன்மையை எடுத்துக்காட்டும் காட்சி, லிப்ட்டில் செல்வதில் உள்ள பயத்தை குழந்தைகள் சிறப்பாக போக்கும் காட்சி, வெற்றி பெற்ற அணியினருடன் மகிழ்வை பகிரும் காட்சி என பல விஷயங்களை சொல்லியப்படி இருந்தும், பல இடங்களில் கண்களில் கண்ணீர் கசிவதை தவிர்க்க இயலாது.

பள்ளி தாளாளர் கர்தார் பாஜி, இக்குழந்தைகள் பற்றி கூறும்போது, "விதி நம் கைரேகைகளில் இல்லை - குரோமோசோம்களில்தான் உருவாகிறது - அதில் ஒன்று மாறினால்..." என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தை.

அமீர்கான் சொல்வது போல இப்படத்தில் இருந்து நாமும் நம் வாழ்க்கைக்காக நிறைய கற்கலாம். ஓடிடியில் வெளியிடாமல் யூடியூப்பில் தமிழிலிலும் அமீர்கான் வெளியிட்டுள்ளார். நூறு ரூபாய் செலுத்தி தவற விடாமல் பார்க்கலாம். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அதையெல்லாம் ஓரமாக வைத்து விடலாம், இவ்வளவு நல்ல விஷயங்களுக்காக..!

SCROLL FOR NEXT