ஆளுமை செலுத்தும் பல துறைகளின் மறைமுக அடையாளம் ஒன்று உண்டு. தலைமைக்கும், கீழ் உள்ளோருக்கும் இடையே இருக்கும் அதிகார இடைவெளி. அதிலும் காவல் துறையிலுள்ள உயர் வட்டத்துக்குள் இது அதிகம் உண்டு. இதில் சிக்கும் நிஜ போலீஸாரின் வலியே ‘ரோந்து’ (Ronth) மலையாள திரைப்படம்.
இரவு நேரத்தில் மோசமான போலீஸ் ஜீப்பில் ரோந்து செல்கிறார்கள் எஸ்ஐ யோஹனன் (திலீப் போத்தன்), காவல் ஓட்டுநர் தின்னாத் (ரோஷன் மேத்யூ). தொடக்கத்தில் இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. இரவு ரோந்து செல்லும் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் சம்பவங்கள் இருவரையும் கொஞ்சம், கொஞ்சமாக இணைக்கிறது. அப்போது நடக்கும் ஒரு சம்பவத்தை கையாளும் உயர் அதிகாரிகளின் சிஸ்டத்துக்குள் இருவரும் சிக்குகின்றனர். அந்த வியூகத்திலிருந்து தப்பித்தார்களா, இல்லையா என்பதை திரைக்கதையில் உறையவைக்கிறார்கள்.
ஒரு ஓட்டை ஜீப், அதில் இரு போலீஸார், அவர்களின் பின்னணி கொண்டே அழகாக நம் மனதை தொடமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கதையுண்டு. அதன் வழியாகவே அவர்கள் உலகை பார்ப்பார்கள் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாக காட்சியாகின்றன.
திலீப் போத்தன் தனது குழந்தை பிறந்த அன்றே இறந்ததால், குழந்தைகள் மீது பாசமும், அதனால் மனபாதிப்பில் இருக்கும் மனைவியை குழந்தையை போல் பார்ப்பதையும், அவர் ரோந்தின்போது சந்திக்கும் சம்பவங்கள் வாயிலாகவே பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார்கள். ரோஷன் மேத்யூவின் தந்தை மனநிலை பாதித்து இறந்தவர் என்பதால், குடும்பத்தினர் மீதான பாசமும், அதன் பாதிப்பு அவருக்குள் இருப்பதும் நமக்கும் அவரது கண்கள் வழியாகவே கடக்கிறது.
இருவரின் உள் மனதின் வலிகளும், அசாதாரணச் சூழல்களில் சாதாரண மனிதர்கள் எடுக்கும் முடிவுகளும் தெளிந்த நீரோடைபோல் செல்கிறது. ஆனால், இரவு நேர ரோந்து சம்பவங்கள் தொடர்வதால் போலீஸாருக்கு ஏற்படும் அயர்ச்சியையும் நமக்கு புரிய வைத்துவிடுகிறார்கள்.
போலீஸாருக்குள் இருக்கும் ‘சிஸ்டம்’ நடைமுறை, இரவு ரோந்தின் டீடெய்ல்கள், மன உளைச்சலால் மது அருந்தி, அதை மற்றொரு போலீஸ்காரர் பார்த்து கோர்த்து விடுவது, விசாரணையில் நடக்கும் அரசியலில் அனுபவமின்மையால் சிக்கும் இளம் போலீஸ் என பல ஆச்சரியப்படவைக்கும் காட்சிகள் அதிகம் உண்டு.
இதற்கு காரணம் இயக்குநர் ஷாஹிகபூர். கேரள காவல் துறையில் இவர் சில காலம் பணியாற்றியது அவர் எழுத்துகளிலேயே பிரதிபலிக்கிறது. காவல் துறையினரை முன்வைத்தே இவர் எழுத்தில் வெளியான பல படங்கள் ஹிட்டடித்துள்ளது. ‘ஜோசப்’, ‘நாயாட்டு’, ‘ஆபிசர் ஆன் டியூட்டி’ படங்களுக்கு திரைக்கதைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.
பலரையும் உலுக்கிய ‘இல வீழா பூஞ்சிறா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்த ஷாஹி கபீர், எழுதி இயக்கியிருக்கும் 2-வது படம்தான் இந்த ‘ரோந்து’.
போலீஸில் பல அடுக்குகள் உண்டு. அதிலும் ஒவ்வொரு அடுக்கும் கீழ் உள்ளோரை அடக்கிவைக்க பார்க்கும். உயர் அடுக்கில் இருப்போரில் பலரும் கீழ் அடுக்கில் உள்ளோரை பார்க்கும் பார்வையே வேறு. அதை அவ்வளவு நுணுக்கமாக, அவர்களின் நுண் அரசியல் விசாரணையில் சிக்கினால் என்னவாகும் என்பதே ‘ரோந்து’. காவல் அரசியலை நுகர தவறவிடக் கூடாத படைப்பு இது. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழிலும் பார்க்கலாம்.