தொடர்ந்து சரிந்து வந்த தனது மார்க்கெட்டை குடும்ப சினிமா ரசிகர்களை மனதில் வைத்து 150-வது படத்தை ‘ரீல்ஸ் மோகமும் - குடும்ப பிரச்சினையும்’ என தற்போதைய டிரெண்டை காட்டி ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ (Prince and Family) படம் மூலம் பாதுகாப்பாக கடந்துள்ளார் திலீப்.
ஃபேஷன் டிசைனரான பிரின்ஸ் (திலீப்) குடும்பத்தில் மூத்தவர். தம்பிகளுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் தனக்கு மணப்பெண் தேடி வருகிறார். ஒருவழியாக மேட்ரிமோனி தளம் மூலம் சிஞ்சு ராணி (ரனியா ராணா) பெண் பார்க்கச் சென்று இருவருக்கும் பிடிக்கிறது. ரீல்ஸ் விடியோக்களாக வீட்டில் நடக்கும் அனைத்தையும் யூடியூப்பில் பதிவிடும் ரனியாவுக்கும், திலீப்புக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினை சரியாகி ஒன்றிணைந்தார்களா என்பதுதான் திரைக்கதை.
மலையாளத்தில் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப ஆக்ஷன், பஞ்ச் டயலாக் ஏதுமில்லாமல் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு தந்து அடக்கி வாசித்து இருக்கிறார் திலீப். முதல் பாதியில் அப்பாவி கலந்த காமெடி நடிப்பும், இரண்டாம் பாதியில் குடும்பத்தினரை கவரும் காட்சிகளும் வைத்து 150-வது படத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகி விடுகிறார்.
மற்றவர்களை விட தன்னை குறைத்துக் கொண்டு, அதுவும் 150-வது படத்தில் திலீப் நடித்திருப்பதுதான் ஆச்சரியம். படத்தில் ஹைலைட்டே சிஞ்சு என்ற ரனியா ராணாதான். ஹீரோபோல் இடைவேளைக்கு முன்பு என்ட்ரி தந்து தற்போது ஹிட் அடித்த ‘மம்பட்டியான்’ பாடலுக்கு நடனமாடி கவர்ந்து விடுகிறார். தொடர்ந்து அனைவரையும் விட நடிப்பு, நடனம் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். இவரது முதல் படத்திலேயே தனது கேரக்டரை ரசிக்கவும், வெறுக்கவும் வைக்கும் வகையில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிது.
சோஷியல் மீடியாவை திட்டி வகுப்பு எடுக்கும் ஒரு காட்சியில் கலெக்டராக ஊர்வசி வந்து போகிறார். அவரது கருத்தில் சிலதும் சரியாகத்தான் இருக்கிறது. படத்தில் பெரிய நடிகர்கள் பட்டியலே இருக்கிறது. ஆனாலும் பலருக்கும் தங்கள் கேரக்டரை முன்னிருந்த வாய்ப்புதான் அதிகமில்லை. படத்தில் முக்கியப் பங்கு இசையமைப்பாளர் சனல் தேவுக்குதான். பல இடங்களில் அவரது இசை துள்ளலாய் இருக்கிறது.
அறிமுக இயக்குநர் பின்டோ ஸ்டீபன் இயக்கம், முதல் பாதியில் கொஞ்சம் போரடித்தாலும் இரண்டாம் பாதியில் சோஷியல் மீடியாவை வைத்து 2கே கிட்ஸுக்கு பாடமெடுத்துவிடுகிறார். ஆனால், குடும்பமாய் ஓடிடியில் பார்க்கிறவர்களுக்கு பிடிக்கும். மலையாளத்தில் வந்த இப்படம் தமிழிலிலும் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.