காமெடி படங்கள் வருவதே தமிழில் குறைந்துவிட்டது. அப்படியொரு ஜாலியான படமாக தெலுங்கில் இருந்து தமிழ் டப்பிங்கில் வந்துள்ள திரைப்படம் ‘சிங்கிள்’ (Single).
கதை ரொம்ப எளிமையானதுதான். ஸ்ரீவிஷ்ணுவும், வெண்ணிலா கிஷோரும் ஜாலியான நண்பர்கள். இவர்கள் இருவரும் காதலி இல்லாமல் வங்கி வேலைக்கு போகும் ‘சிங்கிள்’ பசங்க. வெண்ணிலா கிஷோருக்கு காதலி கிடைத்துவிட, ஸ்ரீவிஷ்ணுவுக்கு கார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பூர்வாவை பிடித்துப் போகிறது. ஆனால், ஸ்ரீவிஷ்ணுவை இவானா காதலிக்கத் தொடங்குகிறார். இறுதியில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடி யார் என்பதில் இடியாப்ப சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கலுக்கான தீர்வு என்ன என்பதைத்தான், சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறது இந்த ‘சிங்கிள்’ திரைப்படம்.
தமிழில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோ ஆகிவிட்டதால் நகைச்சுவை படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் குறைந்து விட்டன. அக்குறையை இந்த டப்பிங் படம் ஓரளவு தீர்த்திருக்கிறது. படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழில் தினேஷ் நடித்த, ‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ படங்களை இயக்கியவர். தெலுங்கில் இயக்கியுள்ள மூன்றாவது படம் ‘சிங்கிள்’.
முதல் பாதி முழுக்க ஆர்யா - சந்தானம் காம்போ போல் ஸ்ரீவிஷ்ணுவும், வெண்ணிலா கிஷோரும் காமெடியில் சிரிக்க வைக்கிறார்கள். உண்மையான ஹீரோ வெண்ணிலா கிஷோர்தான். இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதால், காமெடியை கொஞ்சம் குறைத்து விட்டனர். அதுவும் விடிவி கணேஷ் வரும் காட்சிகள் சலிப்படைய வைக்கிறது. மேலும், படத்தில் வரும் பல காட்சிகள் நாம் ஏற்கெனவே பார்த்த படங்களை நினைவுபடுத்துகின்றன.
இந்தப் படத்தில் தமிழ் படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகளும் வருகின்றன. குறைகள் நிறைய இருந்தாலும், படத்தில் வரும் காமெடி அனைத்தையும் மறக்க வைத்துவிடுகிறது. அதைவிட, இறுதியில் இரண்டாம் பாகம் வரும் என வரும் அறிவிப்புதான் கலங்க வைக்கிறது. தெலுங்கில் ஹிட் அடித்த இப்படம் தமிழ் டப்பிங் உடன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. கதையா முக்கியம், காமெடி போதும் என லாஜிக் பார்க்க விரும்பாதோர் இப்படத்தை பார்க்கலாம்.