புதுச்சேரி: வெப் சீரிஸ் என்றாலே பலரும் க்ரைம் திரில்லருக்குதான் முன்னுரிமை தருவார்கள். க்ரைம் திரில்லரையும் உளவியல் ரீதியாக கவிதையால் மனதை தொடும் வகையில் சென்டிமென்ட்டாய் நம்மையும் தேடுதல் வேட்டையில் பங்கெடுக்க வைக்கிறது ‘கேரள க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2’ (Kerala Crime Files 2).
கேரளத்தில் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு காவல் நிலையத்திலுள்ள போலீஸார் ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களில் ஒருவரான அம்பிலி ராஜூ காணாமல் போகிறார். டிரான்ஸ்பர் ஆகி புதிதாக வந்த போலீஸார் அவரை தேடும் போது விரியும் விசாரணை தான் இந்த சீசன். ஆறு எபிசோட்டுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு எபிசோடுக்குள் புது விஷயங்கள் இணைய சிறு சிறு புள்ளிகள் இணைந்து இறுதியை எட்டுகின்றன. கதாபாத்திரங்கள் குணாதிசயங்களை அவர்களின் செயல்களை வைத்தே பார்வையாளர்களை உணரவைப்பது நல்ல அனுபவம். அதிலும் சில விஷயங்கள் நமக்கு புரியாமலேயே கடந்துபோகும் சூழலும் இருக்கதான் செய்கிறது.
வெப் சீரிஸை கொலை, ரத்தம், கொடூரம், ஆபாசம் என பல தளங்களை ஒன்றிணைத்து பார்வையாளர்கள் முன்வைப்பதை தவிர்த்து உளவியல் ரீதியாக கவிதையாய் அன்பாய் முன்வைப்பதன் மூலம் வேறு தளத்துக்கு கொண்டு செல்கிறார் இயக்குநர் அகமது கபீர். அதற்கு உறுதுணையாக இருக்கிறார் ‘கிஷ்கிந்தா காண்டம்’ எழுத்தாளர் பஹூல் ரமேஷ்.
இந்த சீசனில் இந்திரன், லால், அஜூ வர்கீஸ், அர்ஜூன் ராதாகிருஷ்ணன், ஹரிஸ்ரீ அசோகன் என ஏகப்பட்ட திறமையான நடிகர்கள் இருந்தாலும் சீசனில் முதல் பிரேமில் தொடங்கி இறுதி பிரேம் வேரை ஒவ்வொரு எபிசோடிலும் மனதை கொள்ளை அடிப்பது என்னவோ நாய்கள்தான்.
காவல் துறையில் பணிபுரியும் நாய்கள், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், காவல் பணிக்கு பிறகு ஓய்வு பெற்று காப்பகத்திலுள்ள நாய்கள், தெருநாய்கள் என அத்தனை வகையான பிரிவு நாய்களையும் ஆறு எபிசோட்டிலும் தரிசிக்கலாம். கவனத்தை சிறிது திருப்பினாலும் நாம் பல விஷயங்களை தவறவிடுவோம். ஒவ்வொரு வகை நாய்களும் தங்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறார்கள். அதை வளர்ப்போரும், தெருவில் பார்ப்போரும் அப்படிதான்.
ஆனால் நாய்களையும், மனிதர்களையும் இணைக்கும் புள்ளி உண்டு. அதை தரிசனம் செய்ய வைப்பதில் இயக்குநரும், எழுத்தாளரும் சாதித்து விடுகிறார்கள். காணாமல் போகும் போலீஸ்காரரான இந்திரன் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் நடைப்பயணமாக செல்லும் நாய்கள் வழிகாட்டுகின்றன. கவனம் அதுதான் நம்மை தேடுதலை நோக்கி அழைத்து செல்லும். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் நம்மையும் பங்கெடுக்க வைக்கிறது.
விசாரணை கேள்வியின் வழியாக சூடு ஏறத்தொடங்கி நம்மை இறுதி எபிசோட்டில் கொதி நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறது. இறுதி பத்து நிமிடங்கள் எப்படி நிறைவு செய்யப்போகிறார்கள் என்பதை எதிர்பார்க்கும்போது நாய்கள் வாயிலாகவே பார்வையாளர்களுக்கு உண்மையை கடத்தி விடுகிறார்கள். தென்னகத்தின் அடுத்த பாய்ச்சல் இந்த வெப் சீரிஸ்.