இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.
கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து - முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.
மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெறுகிறார். முக்கியமாக முந்தைய படங்களை காட்டிலும் இப்படத்தில் அவரது இயக்கத்தில் மிகுந்த முன்னேற்றத்தை காணமுடிகிறது.
படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் - விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.
முக்கியமாக, ஓடிடி வெளியீட்டுக்காக இயக்குநர் செய்துள்ள ஒரு விஷயம் பாராட்டத்தக்கது. தியேட்டர் வெளியீட்டின் போது படத்தின் குறைகளாக குறிப்பிட்ட பல காட்சிகள் வெட்டி வீசப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி முன்பை விட எடிட்டிங்கில் கோர்வைப்படுத்தியிருக்கின்றனர்.
படத்தின் குறைகள் என்று பார்த்தால் ஸ்போர்ட்ஸ் கதைக்களம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படத்தில் மிகச் சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலுமே எந்தவித பரபரப்போ, அழுத்தமோ இல்லை. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாக சொல்லமுடியாமல் தடுமாறியுள்ளனர்.
சிறப்புத் தோற்றம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஏறக்குறைய முழு படத்திலும் ரஜினியின் ஆதிக்கம்தான். ஆக்ஷன் காட்சிகள், வசனம் என வழக்கம் போல மாஸ் காட்டுகிறார். ரஜினி தவிர்த்து விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். தியேட்டர் ரிலீஸில் தன்யா பாலகிருஷ்ணாவுக்கு ஒரு வசனம் கூட இல்லாத நிலையில், ஓடிடியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
குறைகள் இருந்தாலும் மதநல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேசும் படம் என்பதால் ‘லால் சலாம்’-ஐ வரவேற்கலாம். சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது > https://www.sunnxt.com/movie/detail/132579/lal-salaam