ஓடிடி விமர்சனம்

OTT Pick: Stree 2 - திகில் பாதி, கலகலப்பு மீதி! 

டெக்ஸ்டர்

ராஜ்குமார் ராவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்த்ரீ’. சந்தேரி என்னும் கிராமத்தில் ஆண்களை கடத்திச் செல்லும் ஒரு பெண் பேய் பின்னணியில் திகிலும் நகைச்சுவையும் கலந்த இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமாக ’ஸ்த்ரீ 2’ கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.

முதல் பாகத்தில் ஸ்த்ரீ என்னும் பெண் பேய் என்றால் இரண்டாம் பாகத்தில் பெண்களை கடத்திச் செல்லும் ஆண் பேயை வைத்து கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அமர் கவுஷிக். முந்தைய பாகத்தில் நடித்திருந்த ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், அபர்சக்தி குரானா, பங்கஜ் திரிபாதி என அதே பெரும் நடிகர் பட்டாளம். படத்தில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம், அதன் கிராபிக்ஸ் தரம். ஹாலிவுட் படங்களைப் போல மிக நேர்த்தியான கிராபிக்ஸ் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய கதைக்கும் இதற்கும் முடிச்சு போட்ட விதம், இடையிடையே இயக்குநரின் மற்ற படங்களின் ரெஃபரன்ஸ், அக்‌ஷய் குமார் கேமியோ என படம் முழுக்க ரகளையான காட்சிகள் உண்டு.

குறிப்பாக ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி பேயை தேடி செல்லும் காட்சிகளில் வரும் காமெடி குபீர் ரகம். மிக ஜாலியாக குடும்பத்துடன் ரசிக்க திகிலும் நகைச்சுவையும் கலந்த ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் இந்த படம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

SCROLL FOR NEXT