சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கத்தில் டெரெக் கோல்ஸ்டாட் எழுத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடி திரைப்படம்தான் 'ஜான் விக்'. கீனு ரீவ்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மைக்கேல் நிக்விஸ்ட், ஆல்ஃபி ஆலன், அட்ரியான் பாலிக்கி உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நியூயார்க் நகரில் வசிக்கும் ஜான் விக் தனது மனைவியை இழந்த துக்கத்தில் இருக்கிறார். அந்த இழப்பை ஈடுக்கட்ட நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். சில நாட்கள் கழித்து, ஐயோசெப் தலைமையிலான ஒரு ரஷ்ய கும்பல் ஜான் விக்கை ஒரு பெட்ரோல் பங்கில் மறித்து அவரது மஸ்டங் காரை கொடுக்கும் படி மிரட்டுகிறது. ஜான் விக் அவர்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார். அன்று இரவு ரஷ்ய கும்பல் ஜான் விக் வீட்டிற்குள் நுழைந்து, நாய்க்குட்டியை கொன்று அவரது காரை திருடிக் கொண்டு செல்கின்றனர்.
ஜான் விக் தனது நாயை கொன்ற ஐயோசெப், ரஷ்ய மாஃபியாவின் தலைவரான விகோ தாராசோவின் மகன் என்பதை அடையாளம் காண்கிறார். தனது மகன் ஜான் விக்கின் நாயை கொன்ற செய்தி அறிந்த விகோ மகன் மீது கடுங்கோபம் கொள்கிறார். கடந்த காலத்தில், ஜான் விக் கொலை செய்வதை தினசரி வேலையாக கொண்டிருந்ததையும், அவர் இருள் உலகின் தாதாவாக இருந்ததையும், தனது மகனிடம் கூறுகிறார். ஜான் விக் தனது பழைய நண்பரான வின்ஸ்டனின் ஹோட்டலான கான்டினென்டனில் தங்கியிருக்கிறார்.
அவர், ஐயோசெப் ரெட் சர்க்கிள் அங்கு தங்கியிருப்பதை ஜான் விக்கிடம் கூறுகிறார். அங்கு நுழைந்து அவரை கொல்ல ஜான் விக் முயல்கிறார். ஆனால் விக்கோவின் கிரில் அவரை தாக்குகிறார். இதனால் அவர் தனது ஹோட்டலுக்கு திரும்பி மருத்துவ உதவி பெறுகிறார். ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது, பெர்கின்ஸ் என்ற பெண்மணி ஜான் விக்கை கொல்ல முயல்கிறார்.
இதனிடையில் விக்கோ, ஜான் விக்கின் முன்னாள் வழிகாட்டியான மார்கஸை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இவர்களிடம் இருந்து ஜான் விக் தப்பித்தாரா? விக்கோவின் மகன் ஐயோசெபை கொன்று பழி வாங்கினாரா என்பதே படத்தின் திரைக்கதை. இப்படத்தின் மேக்கிங் ஸ்டைல், சண்டைக் காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.