19 வயது சந்திரசேகரும், 17 வயது ஜாப்லியும் காதலர்கள். வசதி படைத்த ஜாப்லியின் உறவினர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சந்திரசேகரை போக்சோ வழக்கில் கைது செய்ய வைக்கிறார். இந்த வழக்கில் இருந்து சந்திரசேகர் விடுவிக்கப்பட்டாரா, இல்லையா என்பதுதான் ‘கோர்ட் - தி ஸ்டேட் Vs நோபடி’ (Court - State Vs A Nobody) படத்தின் ஒன்லைன்.
அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்த தெலுங்கு திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா. அண்மைக் காலத்தில் வெளிவந்த தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் இது. போக்சோ வழக்கு எப்படி தவறான முறையில் ஒருவரை தண்டிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாக இந்த திரைப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். எளிய மக்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம் என்பதோடு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டுமொருமுறை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார் இயக்குநர் ராம் ஜெகதீஷ். திரைக்கதையை அவருடன் சேர்ந்து, கார்த்திகா ஸ்ரீவாஸ் மற்றும் வம்சிதர் ஸ்ரீகிரி செதுக்கியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் போக்சோ சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, குற்றமற்றவர்கள் சிக்கவைக்கப்படுவதை இப்படம் பேசியிருக்கிறது. படத்தின் முதல்பாதியில், மொபைல் போனின், கால் டைம்களில் நீளும் பதின்பருவ காதல், செல்போன் கோபுரமாய் விருட்சம் பெறுவதை இயக்குநர் கண்ணியத்துடன் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. பதின்பருவம், போக்சோ சட்டம் என படத்தில் எடுத்துக்கொண்ட கதைக்கரு கொஞ்சம் பிசகினாலும், சமூகத்தில் உடனடியாக மிகப் பெரிய எதிர்வினைகளை உண்டாக்கக் கூடியவை. இருப்பினும், குற்றமற்றவர்களுக்கு எதிராக சட்டத்தின் பேரில் நிகழ்த்தப்படும் குரூரத்தை தோலுரிக்கிறது இந்தப் படம்.
எல்லவாற்றுக்கும் மேலாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை, ஆதிக்க ஆணவம் மிகுந்த மனிதர்களின் செவிகளில் அறைந்து உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். பொதுவாக வழக்கறிஞர் தொழிலை ‘Noble Profession’ என்று கூறுவார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்பதை இயக்குநர் சிறப்பாக படம் ஆக்கியிருக்கிறார். பதின்பருவ காதலை மிக கவனமாக கையாண்ட இயக்குநர், நீதிமன்ற காட்சிகளில் வரும் வசனங்களில் உண்மைகளை உடைத்தெறிந்து இருக்கிறார். ‘இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது 5 கோடி வழக்குகள் அல்ல; 5 கோடி அநீதிகள்’, ‘கருப்புக் கோட் கேள்வி கேட்பதற்கானது’, ‘இவர் அப்படி செய்தார், அவர் அப்படி செய்தார் என்று கூறுவதைவிட, இப்படிப்பட்ட நிலை ஏன் அவர்களுக்கு வந்தது என்பதை சிந்திப்பதுதான்’ வழக்கறிஞரின் வேலை, போன்ற வசனங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
விசாகப்பட்டினத்தில் மெட்டு சந்திரசேகர் @ சந்து (ஹர்ஷ் ரோஷன்) என்ற இளைஞர், சலவலைத் தொழிலாளியான அம்மா, வாட்ச்மேனான அப்பாவுடன் வசித்து வருகிறார். சந்திரசேகர் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டு, கிடைக்கின்ற வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவருக்கு அந்தப் பகுதியில் உள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஜாப்லி-க்கும் (ஸ்ரீதேவி அப்பல்லா) ஒரு ராங் கால் மூலம் ரைட்டான பாதையில் காதல் அரும்புகிறது. ஜாப்லியின் மாமா மங்கபதி (சிவாஜி), செல்வாக்கு மிகுந்த ஏற்றத் தாழ்வுகள் பார்க்கும் ஆதிக்க மனோபாவம் கொண்ட கலாச்சார காவலர். சந்திரசேகர் - ஜாப்லியின் காதல், தங்கள் குடும்ப கவுரவத்தின் மீது ஏற்பட்ட கறையாக கருதுகிறார்.
தனது பணபலத்தைப் பயன்படுத்தி, சந்திரசேகரை கைது செய்ய வைக்கிறார். சந்திரசேகர் மீது போக்சோ சட்டப் பிரிவுகள் உள்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் பொய்யான வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு ஜோடிப்பு சந்திரசேகரின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுகிறது. அந்த நேரத்தில், இந்த சட்டப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட சந்திரசேகர் தரப்பில் வழக்கறிஞர் சூர்யா தேஜா (பிரியதர்ஷி) ஆஜராகிறார். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற மங்கபதி என்னவெல்லாம் செய்கிறார்? சூர்யா தேஜாவின் வாதம் எடுபட்டதா? சந்திரசேகர் விடுவிக்கப்பட்டாரா? நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு என்ன? - இப்படி அடுக்கப்படும் கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். காதலர்களான ஹர்ஷ் ரோஷன் - ஸ்ரீதேவி அப்பல்லா மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மங்கபதியாக வரும் சிவாஜி மிரட்டியிருக்கிறார். அவருடைய வக்கீலாக வரும் ஹர்ஷா வர்தன் நீதிமன்ற காட்சிகளில் தனித்து தெரிகிறார். அதேபோல், நடிகை ரோஹினி உட்பட படத்தில் வரும் அனைவருமே கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்தை மையமாக கொண்ட இந்த திரைப்படத்தின் காட்சிகளை தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. பதின்பருவ காதலர்களின் அப்பாவித்தனமான காதல் மொழிகளையும், நீதிமன்றத்துக்குள் நிகழும் சட்டப் போராட்டத்தையும் கண்முன் நிறுத்தியிருக்கிரார் ஒளிப்பதிவாளர். விஜய் பல்கேனின் பின்னணி இசையும் பாடல்களும் சமூக அக்கறை நிறைந்த இந்தப் படத்தின் கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. கார்திகா ஸ்ரீவாஸின் கட்ஸ், முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும், இறுக்கமான கதைக்கான வேலையை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை என்ற செய்திகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட மக்களின் பொதுவான நம்பிக்கை மீது எரியப்பட்டிருக்கும் ராட்சத கல் தான் இந்த ‘Court – State vs.A Nobody’திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் காணக் கிடைக்கிறது.