ஆண்ட்ரூ நைட் மற்றும் ராபர்ட் ஷென்கன் எழுதி, மெல் கிப்சன் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுப் போர் திரைப்படம்தான் 'ஹாக்ஸா ரிட்ஜ்' (Hacksaw Ridge). இந்தப் படம் 'Conscientious Objector' எனும் ஆவணப்படத்தை மையமாக கொண்டது. ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், சாம் வொர்திங்டன், லூக் பிரேசி, ஹ்யூகோ வீவிங், தெரசா பால்மர், ரேச்சல் கிரிஃபித்ஸ், வின்ஸ் வான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1929-ல் வெர்ஜீனியாவில் இருந்து ஆரம்பமாகும் இந்த உண்மைக் கதையில், டெஸ்மண்ட் டாஸ் (ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்) என்ற இளைஞர் அமெரிக்க ராணுவத்தில் போர் மருத்துவராக பணியாற்ற செல்கிறார். அவரது இளம் வயது நிகழ்வுகள், அவரை ‘யாரையும் கொலை செய்யக் கூடாது’என்ற கொள்கையை பின்பற்ற வழிவகை செய்கிறது. டெஸ்மண்ட் சார்ஜென்ட் ஹோவலின் கட்டளையின் கீழ் 77-வது காலாட்படை பிரிவில் அடிப்படைப் பயிற்சியில் சேர்க்கப்படுகிறார் .
அவர் உடல் ரீதியாக சிறந்து விளங்குகிறார். ஆனால் துப்பாக்கியைக் கையாளவும், அதற்கான பயிற்சி எடுக்கவும் மறுத்ததால் அவரது சக வீரர்கள் சிலருக்கு, அவர் ஒரு தீயவராக மாறிவிடுகிறார். ஒருநாள் இரவு சக வீரர்களால் தாக்கப்பட்ட போதிலும், அவர் தன்னைத் தாக்கியவர்களை அடையாளம் காட்ட மறுத்துவிடுகிறார். இதனால் அந்த நபர்களின் மரியாதையைப் பெறுகிறார். டெஸ்மண்டின் பயிற்சி காலம் முடிந்து விடுமுறை விடப்படுகிறது.
அந்த விடுமுறையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான டாரத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால், தூப்பாக்கியை ஏந்தாத காரணத்தினால் அவர் கீழ்ப்படியாமைக்காக கைது செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன. டெஸ்மாண்டின் பிரிவு பசிபிக் தியேட்டருக்கு அனுப்பப்படுகிறது .
ஒகினாவா போரின்போது , அவர்கள் மைடா எஸ்கார்ப்மென்ட்டை (ஹேக்ஸா ரிட்ஜ்) ஏறிப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அங்கு ஜப்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இடையே கடும் தூப்பாக்கி சூடு நிகழ்கிறது. போர் மருத்துவராக படையில் இருக்கும் டெஸ்மண்ட் தாஸ் தனது கையில் தூப்பக்கியை ஏந்தினாரா அல்லது தனது கொள்கையினை இறுதி வரை கடைப்பிடித்தாரா, ஹாக்ஸா ரிட்ஜை அமெரிக்கர்கள் கைப்பற்றினார்களா என்பதே படத்தின் திரைக்கதை. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.