ஓடிடி விமர்சனம்

சாட்சி பெருமாள் - திரை விமர்சனம்: சினிமாப் பூச்சு இல்லாத சிறுகதை!

செ. ஞானபிரகாஷ்

திரைப்பட விழாக்களில் பங்கேற்று 12 விருதுகளை பெற்று நேரடியாக டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம்.

பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாட்சி கையெழுத்து போடுபவர் பெருமாள். மனைவியுடன் மலை கிராமத்தில் வசிக்கிறார். இந்த வயதான தம்பதியின் பேத்திக்கு காது குத்த தோடு வாங்க வேண்டும். ஆடிமாதம் என்பதால் பத்திரப்பதிவு எதுவும் இல்லை. மகளின் மீது ஆசையுடன் போன் பேசும்போதும் மருமகனின் குத்தல் பேச்சு காதில் விழ தவித்துப் போகிறார் பெருமாள்.

பேத்தியின் காது குத்துக்கு சீர் செய்ய காத்திருக்கிறார். ஆடி மாதத்துக்கு பிறகு பத்திரப்பதிவு தொடங்குகிறது. அப்போது அவர் சாட்சி கையெழுத்து போட்ட ஒரு பத்திரப்பதிவில் தங்கைக்கு தெரியாமல் அண்ணன் பத்திரப்பதிவு செய்ததால் நடந்த விவகாரத்தால் நீதிமன்றத்துக்கு செல்லவேண்டிய சூழல் வருகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவம்தான் இப்படத்தின் கதை.

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘சாட்சி பெருமாள்’. மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தை ஆர்.பி.வினு இயக்கியுள்ளார்.ஒரு மணி நேரத்துக்குள் இந்தப் படம் முடிந்து விடுகிறது. இயற்கை சூழல், மலைக் காட்சிகள், மாடுகள் மலையிலிருந்து இறங்கி வருதல் அவற்றுடன் பத்திரப்பதிவு அலுவலகம் என இயல்பான சூழலில் படமாக்கியிருக்கிறார்கள்.

பணம் இல்லாமல் பேத்திக்கு தோடு வாங்க துடிப்பது, தனது மனைவியின் மெட்டியை எடுத்து சென்று அடகு வைக்க பார்ப்பது, அப்பா அம்மா இல்லாத தங்கச்சி அண்ணன்கிட்ட தானே கேட்கும் என சிறுகதை பக்கங்களை படிப்பது போன்ற உணர்வை திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.

படத்தில் குறைகள் இருந்தாலும் இயல்பான திரை முயற்சிக்காக பொறுத்துக் கொள்வதில் தவறில்லை. சினிமாப் பூச்சு இல்லாத கிராம இயல்பை ரசிக்க விரும்புவோருக்கு ஏற்றப்படம், இந்த ‘சாட்சி பெருமாள்’.

SCROLL FOR NEXT