கேஜிஎஃப், பாகுபலி, லிங்கா, பாட்ஷா, கொஞ்சம் விஸ்வாசம் என நாம் பார்த்த பல தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிப் படங்களைக் குலுக்கி, மூன்று வித கேரக்டரில் நம்முன் வரும் பாலையா என செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணாவின் ஸ்டைலிஷான படம்தான் ‘டாக்கு மஹராஜ்’ (Daaku Maharaaj).
மதனப்பள்ளியில் தேயிலைத் தோட்ட உரிமையாளரின் பேத்தி விபத்தில் சிக்குகிறார். இந்தத் தகவலை அறிந்து அவரை பாதுகாக்க வடஇந்தியாவில் சிறைக்கு செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் பாலகிருஷ்ணா அங்கு வந்து டிரைவராகிறார். குழந்தையின் மனதில் இடம்பிடித்து பாதுகாக்க தொடங்குகிறார். தப்பிய பாலகிருஷ்ணாவை பிடிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் வருகிறார். அப்போது உள்ளூர் கும்பலின் கடத்தலை தோட்ட உரிமையாளர் தடுத்ததற்காக அக்குடும்பத்தை அக்கும்பல் தாக்கவர, அவர்களை பாலையா காப்பாற்றுகிறார்.
இதையடுத்து, மெயின் வில்லன் பாபி தியோல் அங்கு வருகிறார். அப்போதுதான் குழந்தைக்கும் பாலையாவுக்கும் என்ன தொடர்பு - பாபி தியோலுடன் என்ன மோதல் என்ற பிளாஸ்பேக் கதை வருகிறது. அதையடுத்து, பாலையாவை பிடிக்க வந்த போலீஸாரும் அவருக்கு உதவுகிறார்கள் எனச் சொல்லி வழக்கமான க்ளைமேக்ஸில் முடிக்கிறார்கள்.
பல தமிழ், கன்னட, தெலுங்கு படங்களை பார்த்து தனக்கு பாதித்த சம்பவங்களை கோத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாபி கோலி. படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது. அத்துடன் பாலகிருஷ்ணாவின் வசனங்களும் ரசிக்கும் ரகம்தான். 2-ம் பாதி முழுக்கவே பெரும்பாலும் ஃப்ளாஷ்பேக்கிலேயே செல்கிறது. அதையடுத்து க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது.
பாலகிருஷ்ணா ஒருவரே டாக்கு மஹராஜ், டிரைவர் நானாஜி, என்ஜினியர் சீதாராம் என மூன்று வித பெயர் தாங்கி நடித்துள்ளார். வசனங்களும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியி இருக்கிறார்கள். பாகுபலியில் இருப்பதை போல் பாலகிருஷ்ணாவை பார்த்தவுடன் மண்டியிடுவது, கேஜிஎஃப் படத்திலுள்ளதுபோல் சுரங்கத்தில் மக்கள் அனுபவிக்கும் வேதனை, லிங்கா படத்தினைப் போல் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மக்களுக்காக அணை கட்டுவது, பாட்ஷா படத்தை போல் முன்பாதியை மறைத்து டிரைவராக வாழ்வது, குழந்தையை காக்க பணிபுரிவது என பல படங்களின் காட்சிகள் ரிப்பீட் ஆகிறது.
படத்தில் பாலையாவுக்கு இணையாக வில்லன் பாபி தியோல் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வித்தியாசமான வில்லன் பாத்திரத்தால் கவர்கிறார். அதேபோல் கலெக்டராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாத்திரமும் சிறிது நேரம் வந்தாலும் கதாநாயகிகளை விட முக்கியத்துவம் பெறுகிறது.
ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். ‘தபிடி, திபிடி’ பாடல் கதையோட்டத்துக்கு இடைஞ்சலாகவே வருகிறது. நகைச்சுவையும் எடுபடவில்லை என குறைகள் வரிசையாக இருந்தாலும் பாலகிருஷ்ணாவின் பஞ்ச் வசனங்கள், நடிப்புக்காக அவரது தமிழ் ரசிகர்கள் தவறவிடாமல் பார்க்கலாம். மற்றவர்கள் கொஞ்சம் விலகுதல் நலம்.