வார இறுதியில், கொண்டாட்ட மனநிலையுடன் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், மனதை உலுக்கிப் போடும் ஒரு உலக சினிமாவைப் பார்ப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஆஹா, ஹாட் ஸ்டார் என்று உள்நாட்டு, பன்னாட்டு ஓடிடி தளங்கள் கடை விரிக்கும் படங்கள் கேட்பதைக் கொடுக்கும். ஆனால், திரைப்படக் கலையை ஆன்மாவின் தேடலாக முன்வைக்கும் உலகப் படங்களை முபி (MUBI) போன்ற, உலக சினிமாவுக்கு மட்டுமே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு சில தளங்களே அப்படிப்பட்ட வைரங் களை உங்கள் பார்வைக்கு வைக்கும்.
கிரேக்க மொழி உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான தியோ ஏஞ்சலோபவுலோஸ் இயக்கி, 1988-இல் வெளியான ‘லேண்ட்ஸ்கேப் இன் த மிஸ்ட்’ (Landscape in the Mist) படத்தை ‘முபி’யில் பாருங்கள். தங்களுடைய அப்பாவைத் தேடி ஏதென்ஸ் நகரிலிருந்து ஜெர்மனிக்கு ரயிலிலும் சூழலின் நெருக்கடியால் சாலை வழியாகவும் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் 13 வயது சிறுமியும் அவளுடைய 5 வயது தம்பியும்தான் முதன்மைக் கதை மாந்தர்கள்.
வல்லூறு மனிதர்களுக்கு நடுவே இக்குழந்தைகள் இலக்கைச் சென்றடைந்து தந்தையைக் கண்டறிந்தார்களா என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் பயணத்தில் நீங்கள் யாராக இருப்பீர்கள் என்பதை முடிவு செய்வதன் மூலம் உங்கள் ஆத்மாவை சுத்தம் செய்துகொள்ளமுடியும்.