தமிழில் 80-களில் கொடிக்கட்டி பறந்த பாக்யராஜ் பாணி படங்களை இக்காலத்தில் எடுத்தாலும் வெல்லும் என்பதற்கு உதாரணம் ‘சங்கராந்திகி வஸ்துனம்’. பொங்கலுக்கு தெலுங்கில் மட்டும் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூலாகி, தமிழ் உட்பட 5 மொழிகளில் ஜீ 5 ஓடிடியில் இப்போது வெளியாகியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் பன்னாட்டு நிறுவன சிஇஓ சத்யா அகெல்லாவை சிறையிலிருக்கும் அண்ணனை விடுவிக்கக்கோரி தம்பி டீம் கடத்துகிறது. அவரை மீட்க என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் முன்னாள் அதிகாரி ஒய்டி ராஜுவை (வெங்கடேஷ்) அழைக்க முடிவெடுக்கிறார்கள். அவரது முன்னாள் காதலியான போலீஸ் அதிகாரி மீனாட்சி (மீனாட்சி சவுத்ரி) தனக்காக காத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் தேடிச் செல்கிறார்.
ஆனால், ராஜுவோ மனைவி பாக்யலட்சுமி (ஐஸ்வர்யா ராஜேஷ்), தனது நான்கு குழந்தைகள், மாமனார் - மாமியார் வீட்டில் ஜாலியாக இருக்கிறார். ராஜூ வீட்டுக்கு செல்லும் மீனாட்சி ஷாக்காகிறார். சிஇஓவை மீட்க வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி டீம் செல்கிறது. சிஇஓவை மீட்டவுடன் வெங்கடேஷே கடத்துகிறார். அதற்கான காரணம் என்ன என்பதே மெசேஜ் கிளைமாக்ஸ்.
பாக்யராஜன் பாணியில் ஹீரோவான வெங்கடேஷ் தன்னை எல்லாரும் கலாய்க்க அனுமதித்ததே சுவீட் சர்ப்ரைஸ். நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் வேலைக்கு வந்தவுடன் சல்யூட் அடிக்கும் போது முதுகு வலியில் துடிப்பது தொடங்கி தன் வயது வித்தியாசம் வரை ஹீரோயின் தொடங்கி துணை நடிகர் வரை கலாய்க்கிறார்கள். எடுபடவும் செய்கிறது.
கலர்புல்லான பாடல்கள், காமெடி காட்சிகள், பாக்யராஜ் வகையான திரைக்கதையிலான காட்சிகள் என கலந்து கமர்சியலாக்கியுள்ளார் இயக்குநர் அனில் ரவிபுடி. இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் நல்ல இணைப்பு உள்ளது காட்சிகளிலேயே தெரிகிறது.
ஹீரோ தொடங்கி இரு ஹீரோயின்கள் வரை அனைவரின் காட்சிகளிலும் சீரியஸ் இல்லை - சீரியசான விஷயத்தையும் காமெடியாகவே அணுகியது சில சமயம் சோர்வைத் தந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் புன்னகையை தந்து மறக்க செய்கிறது.
இறுதியில் பிரச்சாரம் இல்லாத வகையில் ஒரு மெசேஜ் சொல்லி ஜாலியாக முடித்துள்ளனர். மூளையைக் கழற்றி வைத்து விட்டு வாய் விட்டு சிரிக்கலாம். சினிமாவை சீரியசாக அணுகுபவர்களுக்கு உகந்தது அல்ல.