ஓடிடி விமர்சனம்

Venom The Last Dance: பொருத்தமான வழியனுப்புதல் | OTT Pick

சல்மான்

மார்வெல் காமிக்ஸின் பிரபலமான வில்லன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வெளியான ‘வெனம்’ படவரிசையில் கடைசி படம் ‘வெனம் தி லாஸ்ட் டான்ஸ்’. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கொலை வழக்கு ஒன்றிலிருந்து தப்பிக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எடீ ப்ராக் தனது உடலில் இருக்கும் வெனம் உடன் மெக்ஸிகோவில் இருக்கிறார். இன்னொருபக்கம் வெனம் உள்ளிட்ட சிம்பியோட்களை உருவாக்கிய Knull என்ற வில்லன், எடீ வெனம் உடலில் இருக்கும் கோடெக்ஸ் எனப்படும் வஸ்துவை எடுத்து வருவதற்காக Xenophage எனப்படும் வினோத ஏலியன்களை பூமிக்கு அனுப்புகிறார். இதன் பிறகு என்னவானது என்பதே மீதிக் கதை.

வெனம் படங்களின் சிறப்பம்சமே எடீ - வெனம் இடையிலான நகைச்சுவையான உரையாடல்கள்தான். அது இந்த படத்திலும் சிறப்பாக கைகொடுத்துள்ளது. படம் தொடங்கி இறுதிவரை எந்த இடத்திலும் சலிக்க வைக்காத திரைக்கதை. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், வெனம் ரசிகர்களுக்கான ‘மாஸ்’ காட்சிகள் என பல இடங்களில் அட போட வைக்கிறது படம்.

ஆனால், ஆழமில்லாத காட்சிகளில் ஒட்டுமொத்தமாக ஏதோ ஒரு குறை இருப்பது போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. சூப்பர் ஹீரோ படவிரும்பிகள், ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. >>ட்ரெய்லர் வீடியோ

SCROLL FOR NEXT