கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆனவர் அர்ஜுன் சென் (அபிஷேக் பச்சன்). விளம்பர நிறுவனம் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கும் அர்ஜுனுக்கு குரல்வளை புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதிகம் பேச வேண்டிய தொழிலில் இருக்கும் அர்ஜுன், இந்த புற்றுநோயால் முற்றிலும் அமைதியான ஓர் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்.
மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு வாரம் ஒருமுறை மட்டுமே தனது டீன் ஏஜ் மகளை சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு அமைகிறது. மகளுடனான உணர்வு போராட்டம், இன்னொரு பக்கம் புற்றுநோய் அறுவை சிகிச்சை என சல்லும் அர்ஜுனின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
தொழிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் பிடிவாத குணம் கொண்ட, அதிகம் பேசக்கூடிய ஒருவன் தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் உணர்வுப்பூர்வமாக எவ்வாறு புரிந்து கொள்கிறான் என்பதை 2 மணி நேர படமாக கவித்துவமான முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார். தனது முந்தைய படங்களான ‘பிக்கு’, ‘குலாபோ சிதாபோ’, ‘அக்டோபர்’ போலவே இதுவும் அவருக்கு ஓரு மணிமகுடம். மனித உறவுகளும், உணர்வுகளும் மிக சிறப்பாக ஒரு இந்தி சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கையாளப்பட்டிருக்கின்றன.
அபிஷேக் பச்சனுக்கு இது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். அவருடன் நடித்த அஹில்யா பாம்ரூ, ஜேனட் கார்டர், ஜானி லீவர், கிறிஸ்டின் கோட்டார்ட் ஆகியோரும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளனர். பரபரப்புகள் இல்லாத உணர்வுப்பூர்மான, ஆழமான காட்சிகளுடன் கூடிய ஒரு நல்ல சினிமாவை விரும்புவர்கள் தாராளமாக பார்க்கலாம். அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது. >>ட்ரெய்லர் வீடியோ லிங்க்