மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவரும் நட்சத்திரங்கள் வரிசையில் இடம்பெற்றவர் ஜோஜு ஜார்ஜ். மலையாளத்தில் உதவி இயக்குநர், துணை நடிகர் தொடங்கி வில்லன், கதை நாயகன், ஹீரோ என பல அவதாரங்களை எடுத்த அவர் நடித்து, இயக்கியுள்ள படம்தான் ‘பணி’ (Pani).
திருச்சூரை ரவுடியிசத்தால் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிரி (ஜோஜு ஜார்ஜ்) அதிலிருந்து ஓரளவு விலகி தொழிலதிபராக வலம் வருகிறார். மனைவி கவுரி (அபினயா), நண்பர்கள், உறவுகளுடன் இணைந்து தொழில்களை நடத்தி வாழ்வை ரசித்து வாழ்ந்து வருகிறார். மேலோட்டமாக தொழிலதிபராக இருந்தாலும் அவரது ரவுடியிசமும் தொடர்கிறது. அதேநேரத்தில் மெக்கானிக் பட்டறையில் பணியாற்றும் டான் செபாஸ்டின், சிஜூ ( சாகர் சூர்யா, ஜூனைஸ்) பணம் சம்பாதிக்க கூலிப்படையாக உருவாகின்றனர்.
பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திலுள்ள செயல்படாத ஏடிஎம் மையத்தில் ஒருவரை கொலை செய்து பத்து லட்சம் ரூபாய் பெறுவதிலிருந்து, அவர்கள் பணத்தை ருசி பார்க்கத் தொடங்குகின்றனர். பணமும், ரவுடியிசமும் தரும் தைரியத்தால் கிரியின் மனைவி கவுரியிடம் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அத்துமீற, கிரியிடம் சிக்கி மக்கள் முன்னிலையில் அடிவாங்குகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அவர்கள் இருவரும் அவமானம் அடைகிறார்கள். இதையடுத்து அவர்கள், கிரியின் குடும்பத்துக்குள் நுழைந்து எப்படியெல்லாம் பழிதீர்க்க முயற்சிக்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்ற சீனியர் - ஜூனியர் ரவுடியிசத்துக்குள் நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம்தான் இப்படத்தின் கதைக்களம்.
ஜோஜு ஜார்ஜ் தன்னை இயக்குநராக நிலைநிறுத்த முன்பாதியில் ஒவ்வொரு கேரக்டரையும் நிறுவுகிறார். இரண்டாம் பாதியில் பம்முகிறார். ரவுடியிசத்தில் இருந்து விலகியவருக்கும், புதிதாக ரவுடியிசத்துக்குள் நுழைந்த இளைஞர்களுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. ரவுடியிசத்தில் வளர்ந்து, உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பரதம், கர்நாடக சங்கீதம் என அடையாளம் காட்டுவதும், புதிதாக ரவுடியிசத்துக்கு வருவோரை வேறு மாதிரியாக சித்தரித்திருக்கும் பிற்போக்கு காட்சிகளை வைத்தது சரியா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
ஹீரோவான தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. மோதல்களில், எதிர்மறை கதாப்பாத்திரங்களை தொடர்ந்து முன்னேறுவது போல திரைக்கதையை அமைத்ததும், கதாப்பாத்திரங்களை இயல்பாக நகர்த்தி, அவர்களிடம் இருந்து மிகச்சிறந்த நடிப்பை பெற முயற்சித்துள்ளார் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். நம்ம ஊரில் அடித்து காயப்போட்ட கதையை வேறு டோனில் படமாக்கியிருக்கிறார்.
அதிலும் நான் மகான் அல்ல, கோலி சோடா என பல படங்களின் சாயலும் வராமல் இல்லை. ரத்தம் சொட்ட, சொட்ட அடிதடி காட்சிகள், பாலியல் அத்துமீறல் காட்சிகள், கொடூர கொலைகள் என வரிசைக்கட்டி இருக்கிறது. திரைக்கதையால் அனைத்து குறைகளையும் பட்டி டிங்கரிங் போட்டு மறைத்துவிடுகிறார்கள். பெரிய கேங்ஸ்டர் குடும்பத்திலேயே பாதுகாப்பு இல்லாத நிலை, கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் போலீஸ் என காதில் பூ வைத்தாலும் இசையும், ஒளிப்பதிவும், திரைக்கதையும், சில வசனங்களும் நம்மை கட்டிபோட்டுவிடுகினறன.
குறிப்பாக சந்தோஷ் நாராயணன், சாம் சிஎஸ் பாடல் இசை ஓகே. அதிலும் விஷ்ணு விஜயின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர்கள் ஜின்டோ ஜார்ஜ், வேணுவும் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதுடன் குறைகளை மறைத்து ரசிக்க வைத்துவிடுகின்றனர். சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.