இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை என்ற பெயர் பெற்ற திஹார் ஜெயில் 80-களில் இந்தியாவையே உலுக்கிய சில முக்கிய வழக்குகள், ஜெயிலில் பொறுப்பாளர்களான சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி நகரும் கதை. இதுதான் ‘ப்ளாக் வாரன்ட்’ (Black Warrant) தொடரின் அடிநாதம். விக்ரமாதித்யா மோத்வானே, சத்யன்ஷு சிங் உருவாக்கத்தில் ஏழு எபிசோட்களுடன் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பார்ப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது.
80களின் தொடக்கத்தில் நடக்கும் கதைக்களத்தில் திஹார் சிறைக்கு புதிய ஜெயிலர் வேலைக்கு வருகிறார் ஏஎஸ்பி சுனில் குப்தா (ஜஹான் கபூர்). மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, அதிர்ந்து பேசாத அவருக்கு சிறைச்சாலை சூழலை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒரு கெட்டவார்த்தையை கூட உதிர்க்காத அவர் சிறையில் சீர்த்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறார்.
இன்னொரு பக்கம் இந்தியாவையே அதிரச் செய்த ‘பிகினி கில்லர்’ என்று அழைக்கப்பட்ட சார்லஸ் சோப்ராஜ் (சித்தாந்த் குப்தா) சிறையில் சர்வ வசதிகளுடன் வலம் வருகிறார். அதேபோல தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பிரபல கொலையாளிகள் பில்லா, ரங்கா வழக்கு உள்ளிட்ட மேலும் சில வழக்குகளை அலசுகிறது தொடர். இறுதியில் சுனில் குப்தாவின் நோக்கம் நிறைவேறியதா, சிறை அவரை எப்படியான மனிதராக மாற்றியது என்பதே ‘ப்ளாக் வாரன்ட்’ தொடரின் கதை.
‘சேக்ரட் கேம்ஸ்’, ‘ஜூபிளி’ ஹிட் தொடர்களை அடுத்து தனது புதிய தொடரின் மூலம் மீண்டும் வெற்றியை தக்கவைத்துள்ளார் விக்ரமாதித்யா மோத்வானே. முன்னாள் ஏஎஸ்பி சுனில் குமார் குப்தா எழுதிய ‘Black Warrant: The Confessions of a Tihar Jailer’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.
40 நிமிடங்கள் நகரக்கூடிய ஒவ்வொரு எபிசோடும் அதற்கான தனித்துவத்தை கொண்டிருக்கிறது. மேலும் பாரபட்சமின்றி அரசு அமைப்பையும் நீதித்துறையையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. குறிப்பாக பில்லா - ரங்கா வழக்கின் பின்னணியை நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிப்படுத்தியிருந்தாலும் கூட, அந்த வழக்கில் இருந்த சில சந்தேகங்களையும் துணிச்சலுடன் முன்வைக்க தவறவில்லை.
புத்தகத்திலிருந்து தழுவப்பட்டிருந்தாலும் ஓடிடிக்காக மிகவும் ‘டைட்’ ஆன முறையில் எழுதப்பட்ட திரைக்கதை நம்மை எங்கும் நகரவிடாதபடி ஒரே அமர்வில் ‘பிங்கே-வாட்ச்’ செய்யும்படி இழுத்துக் கொள்கிறது. பெரிய ஆர்ப்பாட்டமோ, பரபரப்புகளோ இல்லாமல் நகர்ந்தாலும் கூட எந்த இடத்திலும் பார்ப்பவர்களை சலிப்படைய வைக்காமல் கதை சொல்லிய விதத்தில் இயக்குநர்கள் ஜெயித்துள்ளனர்.
குறிப்பாக சுனில் நண்பராக வரும் காவலர் ஒருவருக்கும் எஸ்.பியின் மனைவிக்கும் இடையே இருக்கும் திருமணம் கடந்த உறவு தொடர்பான காட்சிகளும், அதனால் ஏற்படும் விளைவுகளை காட்சிப்படுத்திய விதமும் பக்குவமானவை.
சுனில் குமார் குப்தாவாக ஜஹான் கபூர். மறைந்த பழம்பெரும் நடிகர் சசிகபூரில் பேரன். இந்த கதாபாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியான தேர்வு. அப்பிராணி போலீஸாக திஹாருக்குள் வரும் அவரிடம் மெல்ல ஏற்படும் மாற்றங்கள் அபாரம்.
தொடரில் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கி ஸ்கோர் செய்பவர் டிஎஸ்பி ராஜேஷ் டோமர் கேரக்டரில் வரும் ராகுல் பட். சில இடங்களில் அவரது தோற்றம் பழைய அனில் கபூரை நினைவூட்டுகிறது. அடுத்து வெகு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது இருப்பை அட்டகாசமாக பதிவு செய்திருக்கும் சித்தாந்த் குப்தா. சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜின் தோற்றத்தை அச்சு அசலாக கண்முன் நிறுத்துகிறார். இவர்கள் தவிர சுனில் குப்தாவின் நண்பர்களாக வருபவர்களும் நல்ல தேர்வு.
இந்திய திரைச்சூழலில் வழக்கமான கற்பிதங்களை உடைத்து தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கியவர்களில் இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானேவும் ஒருவர். அவரது முந்தைய தொடர்கள், படங்களே இதற்கு சான்று. அந்த வகையில் இந்த ‘ப்ளாக் வாரன்ட்’ அவரது மற்றொரு பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.
கதை 80-களின் தொடக்கத்தில் நடப்பதால் 83 உலகக் கோப்பை, இந்திரா காந்தி, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல குறியீடுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விதம் சிறப்பு. சிறைச்சாலையை தத்ரூபமாக கண்முன் நிறுத்தியத்தில் தயாரிப்பு வடிவமைப்பு குழுவினரின் உழைப்பு அசாத்தியமானது.
கதையில் வரும் எந்த கதாபாத்திரங்களும் வீணடிக்கப்படாமல் அதற்குரிய தனித்துவத்துடன் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பாலிவுட் திரைப்படங்களால் காலம் காலமாக பாடப்பட்ட போலீஸ் துதிகளையும் இந்தத் தொடர் பல இடங்களில் உடைத்தெறிகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத, அதேநேரம் மனித உணர்வுகளை பேசக்கூடிய ஒரு தொடரை பார்க்க விரும்புவர்களுக்கு ‘ப்ளாக் வாரன்ட்’ ஒரு தரமான சாய்ஸ் ஆக இருக்கும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.