1860களில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்த பிரபலமான மஹராஜ் அவதூறு வழக்கின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘மஹராஜ்’. ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள இப்படம், ரிலீஸுக்கு முன்பே இந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானது. பலகட்ட இழுபறிக்கு பின்னால் ஒருவழியாக வெளியான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
சுதந்திரம் கிடைப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னால் குஜராத்தில் கதை தொடங்குகிறது. 19ஆம் நூற்றாண்டில் மத்திய பகுதியில் சமூக சீர்திருத்தவாதியாக வலம் வருகிறார் கர்ஸான்தாஸ் முல்ஜி (ஜூனைத் கான்). தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் தாஸ் (அடிமை) என்ற வார்த்தையை கூட விரும்பாத துணிச்சல்காரர். அந்த ஊர் மக்களாக கடவுள் ஸ்தானத்தில் பார்க்கப்படும் ஆன்மீக குரு, ஜேஜே என்று அழைக்கப்படும் ஜாடுநாத் மஹராஜ் (ஜெய்தீப் அஹ்லாவத்).
தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணான கிஷோரி (ஷாலினி பாண்டே) உள்ளிட்ட பல பெண்களை ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றி பாலியல்ரீதியாக வஞ்சிக்கும் ஜேஜே மஹராஜை நேரடியாக எதிர்க்க துணிகிறார் கர்ஸான். இதனிடையே தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக கர்ஸான் மீது மஹராஜ் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இதன்பிறகு நடக்கும் சம்பவங்களே ‘மஹராஜ்’ படத்தின் கதை.
2013ஆம் ஆண்டு சவுரப் ஷா எழுதிய குஜராத்தி நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை அமைத்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. ஒரு சமுக சீர்திருத்தவாதியாக கர்ஸான் தாஸ் கதாபாத்திரம் பேசும் பாலின சமத்துவம், விதவைத் திருமணம் மற்றும் கடவுளின் அவதாரங்களாக காட்டிக் கொள்பவர்களுக்கு எதிரான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக இரண்டாம் பாதியில் நீதிமன்ற காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் அருமை.
படத்தின் மற்றொரு ப்ளஸ் கலை இயக்கம். பிரம்மாண்ட அரங்குகள், கலர்ஃபுல் பின்னணி ஆகியவை சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களை நினைவூட்டுகின்றன. குறிப்பாக மஹராஜின் அரண்மனை, நீதிமன்ற செட், பழங்கால வீடுகள் உள்ளிட்டவை கச்சிதம்.
படத்தின் மைனஸ் என்று பார்த்தால் முதல் பாதி முழுக்க வரும் ஒட்டுதல் இல்லாத காட்சிகள். படம் எங்கும் சுற்றிவளைக்காமல் நேரடியாக கதைக்குள் வந்துவிட்டாலுமே, காட்சிகள் பெரியளவில் அழுத்தமாக இல்லாதது பெரிய குறை. இதனால் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தும் அவை நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தத் தவறுகின்றன.
ஆமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு முதல் படம். ஆஜானுபாகு உடல், வசீகர தோற்றம், குறை சொல்லமுடியாத நடிப்பு என ஈர்க்கிறார். எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றம் தெரிந்தாலும் அடுத்தடுத்த படங்களில் மிளிர்வார் என்ற நம்பிக்கை தெரிகிறது.
படத்தின் உண்மையான ஹீரோ சந்தேகமேயில்லாமல் ஜெய்தீப் அஹ்லாவத் தான். நேர்மறை பாத்திரங்களோ, எதிர்மறை பாத்திரங்களோ ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டும் வெவ்வேறு பரிணாமங்களும், அர்ப்பணிப்பும் பிரமிக்கச் செய்கிறது. படத்தில் மஹராஜாக மிடுக்கான தோற்றத்துடன் என்ட்ரி கொடுக்கும்போதே பார்ப்பவர்களை ஈர்த்துவிடுகிறார். குறைவான வசனங்களே என்றாலும், அவரது உடல்மொழியும், வெளிப்படுத்தும் முகபாவனைகளும் அபாரம்.
ஷாலினி பாண்டே, ஷர்வாரி வாக், ப்ரியா கோர் என படத்தில் நடித்த அனைவருமே குறைசொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர். சொஹைல் சென்னின் இசை, ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு என தொழில்நுட்ப அம்சங்களும் நிறைவை தருகின்றன.
கிளைமாக்ஸுக்கு முன்பு, நீதிமன்றத்திலேயே தனி சிம்மாசனம் போட்டு அமரும் அளவுக்கு அதிகாரம் படைத்த ஒருவரை கர்ஸான் எதிர்கொள்ளும் காட்சிகளுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் கொடுக்கலாம்.
மொத்தத்தில் முதல் பாதியில் அழுத்தம் கூட்டி, திரைக்கதையை இன்னும் மெருகேற்றியிருந்தால், சர்ச்சைகளின் பின்னணியில் வெளியான ‘மஹராஜ்’ இன்னும் பேசப்பட்டிருக்கும். நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் தமிழிலும் காணக்கிடைக்கிறது.