ஓடிடி விமர்சனம்

ஓடிடி விரைவுப் பார்வை | Eagle Eye: விடாமல் துரத்தும் செயற்கை நுண்ணறிவு.. வென்றது யார்?

சல்மான்

ஏஐ என்ற வார்த்தை சமீபகாலமாக இணையவெளியில் அதிகம் புழங்கப்படுவதை கவனித்திருப்போம். ஏஐ எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவுதான் வரும் ஆண்டுகளில் மனித மூளைக்கு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இப்போதே எழுத்து, ஓவியம், விஷுவல் எஃபெக்ஸ், ப்ரோகிராம்மிங் என பல்வேறு துறைகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை ஆழமாக பதித்துவிட்ட ஏஐ-ன் பாய்ச்சல் இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே அசுரவேகத்தில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் மெல்ல உலகத்தை ஆட்கொள்ள தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2008ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு வெளியான ‘ஈகிள் ஐ’ படத்தைப் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம். படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இதில் படத்தின் ஸ்பாய்லர்களும் இடம்பெற்றுள்ளன.

படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறிய கடையில் சாதாரண சேல்ஸ் ஏஜெண்டாக வேலை பார்க்கும் ஜெர்ரி ஷா நமக்கு காட்டப்படுகிறார். மிகவும் ஜாலியான நண்பர்கள் சூழ வாழும் ஜெர்ரிக்கும் வரும் தொலைபேசி அழைப்பில் அவரது இரட்டை சகோதரர் ஈதன் ஷா இறந்து போய்விட்டதாக தகவல் வருகிறது. சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் செல்லும் ஷாவுக்கு தனது கணக்கில் பல மில்லியன் டாலர்கள் இருப்பது தெரியவருகிறது. தனது அபார்ட்மென்ட்டுக்கு செல்லும் அவர், தனது பெயருக்கு ஏராளமான பார்சல்கள் வந்திருப்பதை ஹவுஸ் ஓனர் மூலம் தெரிந்து கொள்கிறார். பார்சல்களை பிரித்துப் பார்த்தால் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள்.

அப்போது ஹீரோவின் செல்போனுக்கு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். இன்னும் 30 நொடிகளில் வீட்டிலிருந்து தப்பிக்காவிட்டால் எஃப்பிஐ-யிடம் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று அந்த குரல் எச்சரிக்கிறது. அங்கு வரும் அதிகாரிகள் ஹீரோவை கைது செய்கின்றனர். அடுத்த காட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் தொலைபேசியில் அதே குரல் ஹீரோவிடம் பேசுகிறது.

ஒரு கிரேனைக் கொண்டு ஸ்டேஷனை உடைத்து ஹீரோவை அங்கிருந்து தப்பிக்க வைக்கிறது. அந்த குரலால் நகரம் முழுக்க இருக்கும் சிசிடிவி, டிராபிக் சிக்னல்கள், கணினி, செல்போன் என மின்சாரத்தில் இயங்கும் அனைத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது. இன்னொரு பக்கம் படத்தின் நாயகி ரேச்சல் ஹாலோமேனின் மகனை கொன்று விடுவதாக கூறி அவரையும் சில வேலைகளை செய்ய வைக்கிறது அந்த குரல். இருவரும் சேர்ந்து அந்த குரல் சொன்ன வேலைகளை செய்து முடித்தார்களா? என்பதே ‘ஈகிள் ஐ’ படத்தின் கதை.

ஸ்பாய்லர்: படத்தின் தங்களுக்கு கட்டளையிடுவது ஒரு கணினி என்பதை பாதி படத்தின் போது நாயகனும் நாயகியும் தெரிந்து கொள்கின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ‘ஈகிள் ஐ’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட ARIIA என்ற சூப்பர் கணினி அது. தனது கட்டளைக்கு மாற்றாக செயல்பட்ட அமெரிக்க அதிபர் உள்ளிட்ட 12 உயர்மட்ட நபர்களை கொல்ல திட்டமிட்கிறது ARIIA. அதற்கான திட்டத்துக்கு ஜெர்ரியையும், ரேச்சலையும் பயன்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு குறித்து சற்றே மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளுடனும், அதே நேரம் போரடிக்காத திரைக்கதையுடனும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டி.ஜே.கரூசோ. இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படத்தின் கதையின் பிரதான வில்லனும் ‘Entity' என்னும் ஒரு சூப்பர் கணினிதான். கிட்டத்தட்ட இரண்டு படங்களின் கதையும் ஒரே அடிப்படையிலானவை என்பதால், அந்த படத்தை பார்க்கும்போது பல காட்சிகள் ‘ஈகிள் ஐ’ படத்தின் ARIIA-வை நினைவுப்படுத்தின. மிஷன் இம்பாசிபிள் 7 விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

படம் முழுக்கவே ஒரே நாளில் நடப்பது போன்ற கதை என்பதால் அதற்கேற்ப திரைக்கதையும் விறுவிறுப்பாகவே எழுதப்பட்டுள்ளது. வழக்கமான ஹாலிவுட் கேட் அண்ட் மவுஸ் கதைதான் என்றாலும் கணினி வில்லன் என்ற ஒரு அம்சம் என்பதால் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. ஆனால் இதே போன்ற ஒரு சூப்பர் கணினி வில்லனை 2001: A Space Odyssey படத்தின் மூலம் 1968ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தியிருப்பார் ஸ்டான்லி குப்ரிக்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் ’ஈகிள் ஐ’ படத்தை தாராளமாக பார்க்கலாம். படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

SCROLL FOR NEXT