ஓடிடி விமர்சனம்

ஓடிடி திரை அலசல் | Nobody - போர்கண்ட சிங்கத்தின் ஆக்‌ஷன் படையல்!

கலிலுல்லா

சுற்றிலும் தோட்டாக்கள் சத்தம் ஒலிக்க பரபரப்பான சண்டைக் காட்சிகளுக்கு நடுவே ‘புயலின் பாதையில் நடந்து செல்லும்போது இருளைக் கண்டு அஞ்சாதே’ என்ற மெலொடி பாடல் ஒன்று ஒலிக்கிறது. அந்த மொத்த ஆக்‌ஷன் சீக்வன்ஸையும் அத்தனை ரொமான்டிசைஸாக காட்சிப்படுத்தி க்ளைமாக்ஸில் மிரட்டியிருக்கிறார் இயக்குநர் இல்யா நைஷுல்லர் (Ilya Naishuller) . ‘Nobody’ ஹாலிவுட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

உப்புச் சப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஹட்ச் மன்செல் (பாப் ஓடென்கிர்க்). திங்கள், செவ்வாய், புதன் என எல்லா நாளும் ஒரே ரொட்டீன் வாழ்க்கை சுழற்சியில் சிக்கித் தவிக்கிறார். ஒருநாள் இரவு ஹட்ச்சின் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துவிடுகிறார்கள். அவரது மகன் திருடர்களை பிடிக்க, சாந்த சொருபியான ஹட்ச் அவர்களை விட்டுவிடும்படி கூறுகிறார். தனது அப்பா ஒரு ‘தண்டம்’ போல என நினைத்து குடும்பத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தனது மகளுக்கு தேவையான பொருள் ஒன்றை அந்த திருடர்கள் எடுத்துச் சென்றதை அறிந்ததும் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் அவர், வரும் வழியில் பேருந்து ஒன்றில் ரவுடிகள் சிலர் ஏறி அட்டகாசம் செய்ய அவர்களை பொளந்து கட்டுகிறார். அதிலிருக்கும் ஒருவர் ரஷ்யாவின் கேங்க்ஸ்டர் யூலியனின் (அலெக்ஸி செரிப்ரியாகோவ்) சகோதரன் என்பது தெரியவருகிறது. இறுதியில் தனது சகோதரனின் மரணத்துக்கு ஹட்சை பழிவாங்க துடிக்கும் யூலியன் இறுதியில் நினைத்ததை சாதித்தாரா, இல்லையா என்பது படத்தின் திரைக்கதை.

‘விஸ்வரூபம்’ படத்தில் ‘யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா?’ என்ற காட்சியின் ‘ட்ரான்ஸ்ஃபமேஷன்’ கூஸ்பம்ஸ் தருணங்களை ‘Nobody’ படத்தின் பல காட்சிகளில் காண முடியும். ஒரு வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும், அதனை திரைக்கதையாக்கிய விதமும், அதற்கேற்ற அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும் மேக்கிங்கிலும் படம் முத்திரை பதிக்கிறது.

குறிப்பாக தனது வீட்டில் திருடர்கள் வந்ததும் கோல்ஃப் ஸ்டிக்கை எடுத்து அவர்களை அடிக்க ஹட்ச் நடந்து வரும் காட்சி ஒரு பெரிய உருமாற்றத்துக்கான டீசர். திருடர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்தே அதில் தோட்டாக்கள் இல்லை என்பதை சொல்லும் அளவுக்கான ஒருவர் வாழும் உப்பு சப்பில்லாத வாழ்க்கை சூழலை படத்தின் தொடக்கத்தில் காட்சிப்படுத்திய விதம் கவனம் பெறுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் உருமாற்றத்தை படிப்படியாக நகர்த்தி ஒரு புள்ளியில் அதன் எல்லைக்கு கொண்டு சென்றிருக்கும் திரைக்கதை நுட்பம் அட்டகாசம். குறிப்பாக பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள் மிரட்டல்.

நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவராக ஹட்ச் தனது குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் படத்தின் இறுதியில் வைக்கப்படும் பன்ச் வசனங்கள் ஈர்க்கின்றன. நாயகனின் தந்தையை எதிரிகள் கொல்ல வரும் காட்சியில் அவர் தொடுக்கும் எதிர்முனை தாக்குதல், க்ளைமாக்ஸில் நடக்கும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ்கள், சிங்கத்தின் குகைக்குள்ளே சென்று சீண்டுவதைப்போல ரஷ்ய கேங்க்ஸ்டரின் இடத்துக்குள் சென்று அவரை அலேக்காக அழைத்து வரும் காட்சிகள் என ஒரு பக்கா ஆக்‌ஷன் த்ரில்லலர் கதையாக கச்சிதம் சேர்க்கிறது படம்.

காட்சிகளுக்கு இடையூறில்லாமல் அதோடு பயணிக்கும் பாடல்கள், குறிப்பாக க்ளைமாக்ஸின் தோட்டாக்கள் தெறிப்பின்போது வரும் மெலடி ரசிக்க வைக்கிறது. தமிழில் ரஜினியின் ‘பாட்ஷா’, கமலின் ‘விஸ்வரூபம்’, விக்ரம் பட கலவையாக உருவாகியிருக்கும் படத்தின் மொத்த நீளமே ஒன்றரை மணி நேரம் தான்.

60 வயதில் பாப் ஓடென்கிர்க் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மெனக்கெட்ட விதம், உழைப்பு, யதார்த்தமான நடிப்பு, தொடக்கத்தில் காவல்துறை அதிகாரிகள் பெயரை கேட்கும்போது எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல், ‘i am nobody’ என கூலாக சொல்லும் இடங்களில் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.

கொடூர வில்லனாக அலெக்ஸி செரிப்ரியாகோவ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். கோனி நீல்சனுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் இறுதிக்காட்சியில் தனது கணவனை புரிந்துகொண்டு அவர் பேசும் வசனம் நச் ரகம். கிறிஸ்டோபர் லாயிட் ‘இந்த வயசுல எப்படி இந்த ஆக்‌ஷன்?’ என கேட்ககூடாது என்பதற்காக முன்னாள் FBI ஏஜெண்ட்டாக காட்டிய விதம் என நேர்த்தி. மொத்தத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற திரை விருந்தாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது ‘NOBODY’.

SCROLL FOR NEXT