சசிகுமார் நடித்துள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆக.7-ல் வெளியாகும் என்று பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப்-சீரிஸில் சசிகுமார், மூசா ரஸா என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரை பின்னணியில் உருவான இத்தொடர் பற்றி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறும்போது, “இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்தக் கதையை மீண்டும் சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார்.
சசிகுமார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி” என்று தெரிவித்தனர்.